சிறப்புக் கட்டுரைகள்

காஷ்மீரில் ஒரு வாரம்: இந்த மண் ரத்தம்கேட்கிறது!

பி.ஏ.கிருஷ்ணன்

நானும் என் மனைவியும் குல்மார்க் சென்றடைந்தபோது வானம் முழு நீலமாக இருந்தது. மரங்கள் அடர்ந்த மலைப் பாதையின் முடிவில், முடிவே இல்லாத பச்சைப் புல்தரை. உயர்ந்த மலைச் சரிவுகள் சிலவற்றில் பனிக் கீற்றுகள் ஒட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. “மேலே சென்று பார்க்கலாம். 14,000 அடி உயரம். பனிப் பாறைகள் கண்ணைக் கூச வைக்கும்” என்றார் வழிகாட்டி. மேலே போகவா வேண்டாமா என்ற தயக்கம். மலை உச்சியை அடைய கேபிளில் இயங்கும் தொங்கு வண்டிகளில் செல்ல வேண்டும். கூட்டம் அதிகம் இல்லை.

“போன வருடம் இந்த இடம் நிரம்பி வழிந்தது. 1,600 ரூபாய் டிக்கெட்டை 4,000 ரூபாய்க்கு வாங்கத் தயாராக இருந்தார்கள். இப்போது யாரும் இல்லை. அல்லா எங்கள் மீது இரக்கம் காட்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்.” வழிகாட்டியின் முகத்தில் களைப்பு தெரிந்தது. ரம்ஜான் நோன்பில் இருந்தார். நாங்கள் பயணம் செய்தால் அவருக்கு கமிஷன் கிடைக்கலாம். போகலாம் என்று முடிவுசெய்தோம்.

கணக்கில்லா அதிசயங்கள்

காஷ்மீரின் கணக்கில்லா இயற்கை அதிசயங்களில் குல்மார்க் ஒன்று. மனிதர்கள் விடாது முயன்றும் அதன் அழகை அதிகம் அழிக்க முடியவில்லை என்பது இன்னொரு அதிசயம். குல்மார்க் 8,500 அடி உயரத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட நமது தொட்டபெட்டா சிகரத்தின் உயரம். எங்கு சென்றாலும் நடந்து செல்ல வேண்டும் அல்லது குதிரையில் செல்லலாம்.

தொங்குவண்டிப் பயணம் சிக்கல் ஏதுமின்றி நிகழ்ந்தது. “1999-லிருந்து தினமும் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு சிறிய விபத்துகூட நிகழவில்லை” என்றார் வழிகாட்டி. உச்சத்தில் இறங்கியபோது மூச்சு விடுவதுகூடக் கடினமாக இருந்தது. சுற்றிலும் மலைகள். பனிப் பாறைகள் மிக அருகே இருந்தன. பயணிகள் ஸ்லெட்ஜ் வண்டிகளில் பாறைகளைக் கடக்க முயன்றுகொண்டிருந்தனர். இத்தனை உயரத்திலும் இயற்கைக்குத் தனது அமைதியைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை இல்லையா? நாம் ஏன் 14,000 அடியில் அதைச் சூழ்ந்து நெருக்க வேண்டும்? “திரும்பச் செல்லலாம்” என்று சொன்னேன். வழிகாட்டிக்குச் சிறிது வருத்தமாக இருந்தது.

உணவு விடுதி மிக அருகில். அங்கேயே மதிய உணவு அருந்திவிட்டு அறைக்குள் வருவதற்குள் மழை பிடித்துக்கொண்டது. தூறலில் தொடங்கியது காற்று, இடி, மின்னலுடன் வலுப்பெற்றது. கூழாங்கற்கள் அளவில் பனிக்கட்டிகள் சடசடவெனத் தரையில் இறங்கின. திடீரென்று பெரும் சத்தம் ஒன்று. ‘என்ன சத்தம்’ என்று என் மனைவி கேட்டதற்குப் பதில்கூடச் சொல்ல முடியாமல் கண்கள் அயர்ந்துகொண்டுவந்தன. அயர்வு தீரச் சிறிது நேரம் எடுத்தது. கண்கள் திறந்தபோது மழை நின்று வானம் பளீரென்று இருந்தது.

நாட்டு நிலவரம் பார்க்கும் எண்ணத்தில் தொலைக்காட்சி ரிமோட்டை அழுத்தினேன். என்டிடிவியின் அடிப்பட்டையில் ‘குல்மார்க் தொங்குவண்டி விபத்தில் ஐவர் மரணம்’ என்ற செய்தி வந்துகொண்டிருந்தது.

மரணத்தையும் மறக்க வைக்கும் அரசியல்

நாங்கள் உடனே விபத்து நடந்த இடத்தை நோக்கி விரைந்தோம். கூட்டம் அதிகம் இல்லை. தொங்கு வண்டிகளில் அகப்பட்டுத் தவிப்பவர்களை மீட்க வேண்டும் என்ற கவலை எல்லோருக்கும் இருந்தது. வழியில் பார்த்தவர்கள் அனைவரும் “இது கடவுள் செயல். கேபிளை நடத்துபவர்மீது எந்தத் தவறும் இல்லை” என்று சொன்னார்கள். இவர்களுக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தோன்றியது.

டெல்லியிலிருந்து வந்திருந்த தம்பதியினர், அவர்களின் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று வழிகாட்டிகள் பலியாகியிருந்தனர். காற்றில் பைன் மரம் வேரோடு கேபிள் மீது சாய்ந்ததில் தொங்கு வண்டியின் கண்ணாடிக் கதவுகள் உடைந்து, அவற்றிலிருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். நாங்கள்தான் கடைசியாகத் திரும்பிய பயணிகள். மரணத்தை மிக அருகே சில தடவைகள் சந்தித்திருந்தாலும், இந்தத் தடவையும் அது அணைத்துத் தன்னோடு கூட்டிச் செல்லாமல் சென்றது சிறிது ஆறுதலாக இருந்தது.

மலையிலிருந்து வந்த பயணிகள் தங்கள் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார்கள். ஜம்முவிலிருந்து வந்திருந்த ஒருவர் சொன்னார், “நானும் என் மனைவியும் ஆறுமாதக் குழந்தையுடன் தவித்தோம். யாரும் உதவி செய்யவில்லை. ஏடிவியில் (All Terrain Vehicle – எல்லா நிலப் பரப்புகளிலும் இயங்கும் ஊர்தி) மேலே வந்தவர்கள் ஒரு ஆளுக்கு 4,000 ரூபாய் கேட்டார்கள். நமது ராணுவம்தான் உதவி செய்தது” என்றார்.

அருகில் இருந்த காஷ்மீரி என்னிடம் சொன்னார், “இவர் சொல்வது சரியா என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். எத்தனை பேர் மேலே சென்றிருக்கிறார்கள். எத்தனை பேரை அழைத்துவருகிறார்கள் என்பதும் உங்களுக்குக் கண்கூடாகத் தெரியும்”. அவர் சொன்னது உண்மை. மலையிலிருந்து பயணிகளை உள்ளூர் மக்கள் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு வருவதைப் பார்க்க முடிந்தது. தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வண்டிகள் தயாராக இருந்தன. “அல்லா ஏன் எங்களைச் சோதிக்கிறார்? ஏற்கெனவே பயணிகள் வருவது மிகவும் குறைந்துவிட்டது. குல்மார்கின் வசீகரமே இந்த கேபிள் பயணம்தான். அதுவும் நின்றுவிட்டால் இங்கு யார் வருவார்கள்? நாங்கள் எப்படிப் பிழைப்பது?” என்று இன்னொருவர் சொன்னார். “இந்திய ஊடகங்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன. காஷ்மீரில் எல்லோரும் துப்பாக்கிகளைப் பிடித்துக்கொண்டு கண்ணில் தென்பட்டவர்களைக் கொல்வதற்காக அலைகிறார்கள் என்ற எண்ணத்தைப் பார்ப்பவர்களுக்குக் கொடுக்கின்றன. இப்போது மரணத்திலும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் முஸ்லிம்கள் லாபம் பார்க்கிறார்கள் என்று ஊடகங்கள் சொல்லத் தொடங்கிவிடும்.”

“மேலே இருந்தவர்களைக் கீழே கொண்டுவரப் பணம் கேட்டது உண்மைதானே?”

“சிலர் கேட்டிருக்கலாம். நான் டெல்லி வந்திருக்கிறேன். அங்கு ரயில் நிலையத்தில் இருக்கும் எல்லா டாக்சிகளும் பகல் கொள்ளைக்காரர்களால் இயக்கப்படுகின்றன. அதனால், டெல்லியில் இருப்பவர்கள் எல்லோரும் கொள்ளைக்காரர்கள் என்று சொல்ல முடியுமா?’

எனக்கு என் மீதே வெறுப்பு வந்தது. ஏழு பேர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்தின் சோகம் என்னை உலுக்கவில்லை. மரணத்தை அரசியல் மறக்கடித்து விட்டது.

வழியில் மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன். அவர் மீரட்டிலிருந்து வருபவர்.

“உங்களுக்கு ஏதும் உதவி வேண்டுமா?”

“வேண்டாம். நிலைமை எவ்வாறு இருக்கிறது?”

“மீசை முளைக்காத சிறுவர்கள் துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். அவர்களைக் கொல்லாவிட்டால் நாங்கள் சாக வேண்டும். என் மகன் வயதுகூட இருக்காத பையன்களைக் கொல்வதற்கு எனக்கு ஆசையா என்ன? இந்த மண் வெறி பிடித்தது. அது ரத்தம் கேட்கிறது.”

“மண் கேட்கிறதா? மண்ணுக்கேது வெறி? கேட்பது மனிதர்கள்” என்று பதில் சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை.

(தொடரும்...)

- பி.ஏ. கிருஷ்ணன்,

‘புலிநகக்கொன்றை’, ‘இந்தியாவும் உலகமும்’ முதலான நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

SCROLL FOR NEXT