சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவ சேவை எனும் மகத்துவத்தைத் தகர்க்கும் ‘நீட்’!

செய்திப்பிரிவு

நீட் தேர்வு நம் மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்த்துவிட்டது என்று மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், கிராமத்து மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற கனவோடு மருத்துவப் படிப்பில் சேரவிருந்த மாணவர்களின் ஆர்வத்தையும் ‘நீட்’ தேர்வு சிதைத்திருக்கிறது. பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையில் இருந்தபோது, மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வந்தனர். இவ்வாறு தமிழ்நாடு அரசுப் பணியில் குக்கிராமங்கள் வரை மருத்துவர்கள் சேவை செய்கின்றனர். அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில், மருத்துவ மேற்படிப்பில் இவர்களுக்கு உள்ஒதுக்கீட்டைத் தமிழக அரசு வழங்கிவந்தது.

குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் உத்தரவாதப்படுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றத் தேவையான உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்களை அரசால் உருவாக்க முடிந்தது. இத்தகைய திறமையான பேராசிரியர்களைக் கொண்டதால்தான் இந்தியாவிலேயே மிக அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளைத் தமிழக அரசே தொடங்கி நடத்த முடிகிறது. இந்நிலையில், இந்த மொத்தச் சங்கிலியையும் தகர்த்திருக்கிறது ‘நீட்’ தேர்வு முறை!

‘நீட்’ தேர்வின் மூலமாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கத் தொடங்கினால், அரசு மருத்துவ சேவைக்கான உள் ஒதுக்கீடு ரத்தாகிவிடுகிறது. தன் சேவைக்கு எந்தவிதமான ஊக்கமும் இல்லாதபோது தன்னை வருத்திக்கொண்டு சேவை செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள். அது மட்டுமல்லாமல், மிக அதிக அளவில் பணம் செலவழித்து நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்பவர்கள், தங்கள் முதலீட்டுக்கு உகந்த வருவாயை ஈட்ட முயற்சிப்பார்களே தவிர, சேவை செய்ய வருவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழகத்தில் 2007-ல் மருத்துவ சேவைக்கான நுழைவு தேர்வு ரத்துசெய்யப்பட்டது.

மறுக்கப்பட்ட உரிமை

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு தனது 92-வது அறிக்கையை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் 2016 மார்ச் 8 அன்று தாக்கல்செய்தது. இதில் இந்தியா முழுக்க பொது மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தவும், அவ்வாறு நடக்கும் பொது மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு கொடுக்கவும் பரிந்துரைத்திருந்தது. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ‘மாடர்ன் பல் மருத்துவமனை’ வழக்கில் 2016 மே 2-ம் தேதி வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானது. மாநிலங்களில் நிலவும் சமமற்ற வாய்ப்பைக் கருத்தில் கொண்டு எல்லோருக்கும் சமமான வாய்ப்பை வழங்கக்கூடிய வகையில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையை வகுத்து, அதற்கான சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்ட மன்றங்களுக்கு உள்ளது என்றது அந்தத் தீர்ப்பு. 2017 ஜூலை 14 அன்று சென்னை உயர் நீதின்றமும் தனது தீர்ப்பில் இதைச் சுட்டிக் காட்டியுள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழுப் பரிந்துரை, நீதிமன்றத் தீர்ப்பு என்று எதையும் கணக்கில் கொள்ளாமல், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தச் சட்டத்தில் ‘நீட்’ கட்டாயமாக்கப்பட்டு 2016-2017 கல்வி ஆண்டுக்கு மட்டும் விரும்பாத மாநிலங்களுக்கு விலக்களிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்ட மன்றம் இந்திய அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு, மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக இரண்டு சட்ட மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக 2017 பிப்ரவரி மாதம் அனுப்பிவைத்தது. ஐந்து மாதங்களாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் இந்த இரண்டு மசோதாக்களும் தேங்கி நிற்கின்றன. குடியரசுத் தலைவருக்கு இதுவரை இந்த மசோதாக்கள் அனுப்பிவைக்கப்படவில்லை. மத்திய அரசுக்கு எல்லா வகையிலும் ‘நிபந்தனையற்ற ஆதர’வைத் தரும் தமிழக அரசும் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மாறாக, ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் தேர்ச்சிபெற்றவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85% ஒதுக்கீடு என்று அரசாணை பிறப்பித்து சாமர்த்தியமாக ஒதுங்கிக்கொண்டது. எதிர்பார்க்கப்பட்டதுபோலவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் வழக்கு தொடர, அந்த அரசாணை உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது. இப்போது அதை எதிர்த்து மேல்முறையீடு என்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு. இதில் என்ன பலன் கிடைக்கும் என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது.

தொடரும் கேள்விகள்

‘நீட்’ தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு 2016-17 கல்வியாண்டுக்கு விலக்களிக்கப்பட்டபோது, அந்த மசோதாவில் கொடுக்கப்பட்ட விளக்கக் குறிப்புகளில், ‘மாநிலப் பாடத்திட்டமும் ‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டமும் வெவ்வேறானவை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில், 2015-16 கல்வியாண்டில் +2 முடித்த மாணவர்களுக்கு, 2016-17 கல்வியாண்டில் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்களிக்கப்பட்டது.

அதே கல்வியாண்டில் (2015-16) அதே பாடத்திட்டத்தில் பிளஸ் ஒன் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் 2016-17 கல்வியாண்டில் பிளஸ் டூ பயின்று 2017 மார்ச்சில் அரசுத் தேர்வு எழுதி, 2017-18 கல்வியாண்டில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வருகிறார்கள். அவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது கூறு உத்தரவாதம் அளிக்கும் சமத்துவக் கோட்பாட்டுக்கு எதிரானது அல்லவா? அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது கூறு வழங்கியுள்ள தொழில் மேற்கொள்ள கொடுக்கப்பட்ட உரிமையைப் பறிக்கும் செயல் ஆகாதா? அரசியல் அமைப்புச் சட்டக் கூறு 21 தந்துள்ள வாழ்வாதார உரிமையை இழக்கச் செய்யும் செயல் அல்லவா?

கடைசியில் என்ன நடந்திருக்கிறது? மொத்தம் உள்ள 6,027 இடங்களில் பட்டியலினத்தவர் பிரிவில் 82 மாணவர்களும், பழங்குடியினர் பிரிவில் 11 மாணவர்களும் மட்டுமே தேர்வாகியுள்ளனர் என்பது பொறுத் துக்கொள்ள இயலாத மிகப்பெரிய சமூக அநீதி.

இதை ஒரு மக்கள் நல அரசு செய்யலாமா? மாணவர் நலன், மாநில மக்களின் மருத்துவத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றி அனுப்பிய இரண்டு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை இந்திய அரசு பெற்றுத் தர வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

- பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச் செயலாளர்,

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை,

தொடர்புக்கு: spcsstn@gmail.com

SCROLL FOR NEXT