சிறப்புக் கட்டுரைகள்

‘திறன் இந்தியா’ திட்டத்தின் தோல்வி

செய்திப்பிரிவு

‘உ

லக இளைஞர் திறன் (மேம்பாட்டு) நாள்’ இம்மாதம் 15-ல் நடைபெற்றது. மத்திய அரசு தொடங்கிய ‘இந்தியத் திறன் வளர்ச்சி இயக்க’த்தின் இரண்டாவது ஆண்டு விழாவும் உடன் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடங்கிய திட்டத்தைப் பெயர் மாற்றி தன்னுடைய திட்டமாக்கினார் பிரதமர் மோடி. மன்மோகன் சிங் அரசு ‘தேசிய திறன் மேம்பாட்டுப் பேரவை’ என்ற பெயரில், டி.சி.எஸ். நிறுவனத்தின் எஸ். ராமதுரை தலைமையில் இத்திட்டத்தைத் தொடங்கியது. அந்தப் பேரவையின் கீழ் ‘தேசியத் திறன் மேம்பாட்டு கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பு ‘அரசு - தனியார் கூட்டுத் திட்டத்தின்’ (பி.பி.பி.) கீழ் தொடங்கப்பட்டது. 2022-க்குள் 50 கோடிப் பேருக்குப் பயிற்சி அளிப்பது திட்டம்.

பற்றாக்குறையான தரவுகளை வைத்துக்கொண்டு, மிகவும் தவறான அனுமானங்களின் பேரில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களும் இலக்குகளும் தயாரிக்கப்பட்டன. ஐ.மு.கூ. அரசின் காலத்திலேயே இந்த இலக்கு, ‘2020-க்குள் ஒரு கோடிப் பேருக்குப் பயிற்சி’ என்று இலக்கு குறைக்கப்பட்டது. ‘ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம்’ என்று வாக்குறுதி தந்த மோடி, இந்தத் திட்டத்துக்கு மேலும் அலங்காரம் செய்தார். இந்தத் துறை தனி அமைச்சகமாகத் தரம் உயர்த்தப்பட்டது. தனி அமைச்சர், செயலாளர் நியமிக்கப்பட்டனர். ஓராண்டுக்குப் பிறகு, ‘பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா’ என்ற முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திட்டம் தட்டுத்தடுமாறித்தான் நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் பயிற்சி முடித்தவர்கள் எத்தனை பேர், வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் அமைச்சகம் புள்ளிவிவரம் தரக்கூட மறுக்கிறது. தேசியத் திறன் மேம்பாட்டு கார்ப்பரேஷன் தொடக்க காலத்தில் வழங்கிய கடன்கள் பெரும்பாலும் ‘வாராக் கடன்’களாகிவிட்டன. இந்தத் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் ஒவ்வொரு நாளும் அம்பலமாகிக்கொண்டே வருகின்றன. எனவே, இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பயனாளிகளில் உண்மையானவர்களையும் போலியானவர்களையும் பிரிக்க அமைச்சகம் படாதபாடு படுகிறது. ரூ.1,600 கோடி தொகுப்பு நிதி விரைவாகவே ரூ.6,000 கோடியாக உயர்த்தப்பட்டது.

இந்தத் திட்டப்படி பயிற்சி தருவதுகூட வேறு நிறுவனங்களுக்கு, அயல்பணி ஒப்படைப்புபோல வழங்கப்பட்டுவிட்டது. “பயிற்சி வழங்கும் தனியார் நிறுவனம் அரசிடமிருந்து திட்டத்தில் 40% வரை கட்டணமாகவே வசூலிக்கும் போக்கு தெரியவந்திருப்பதால், இத்திட்டத்தை மறு ஆய்வுக்காக நிறுத்திவைத்திருக்கிறோம்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகம் மேற்கொண்ட அகத் தணிக்கையில், பயிற்சியை மட்டும் போலிப் பயனாளிகளுக்கு அளிக்காமல், மையங்களையே போலியாக உருவாக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்புகளைப் புதிதாக அதிகம் உருவாக்கவில்லை. எனவே, குறைந்த அளவு தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள்கூட வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பிரதம மந்திரி தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பலன் பெற்று, வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை சில திட்டங்களில் வெறும் 5% ஆகவும் வேறு திட்டங்களில் 50% ஆகவும் உள்ளன. இப்போது இந்தப் பயிற்சி திட்டமே, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதுடன் இணைக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது. ஆனால் இதுவுமே போதாது, காலம் கடந்தது. திறன் வளர்ப்பு திட்டத்தில் இந்தியா தோற்றுவிட்டது.

கோடிக்கணக்கான இளைஞர்கள் படிப்பு முடித்துவிட்டு கை நிறையச் சம்பளம், நல்ல வேலை, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் என்ற கனவுகளோடு வருவார்கள். அவர்களுடைய எண்ணத்தை நிறைவேற்றுவது அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். வெறுமனே அமைச்சகத்தை ஏற்படுத்துவதும், தொலைநோக்கு ஆவணம், செயல்திட்ட ஆவணம் கொண்டுவருவதும் போதாது. பொருளாதார மேம்பாட்டுக்காக அரசு மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் மையமாகத் திறன் மேம்பாடு இருக்க வேண்டும். இல்லாவிடில் பிரச்சினைதான்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

SCROLL FOR NEXT