சிறப்புக் கட்டுரைகள்

21-ம் நூற்றாண்டுக்கு ஆத்மாநாமின் 4 கவிதைகள்

செய்திப்பிரிவு

தும்பி

எனது ஹெலிகாப்டர்களைப்

பறக்க விட்டேன்

எங்கும் தும்பிகள்

எனது தும்பிகளைப்

பறக்க விட்டேன்

எங்கும் வெடிகுண்டு விமானங்கள்

எனது வெடிகுண்டு விமானங்களைப்

பறக்க விட்டேன்

எங்கும் அமைதி

எனது அமைதியைப்

பறக்க விட்டேன்

எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்

சுதந்திரம்

எனது சுதந்திரம்

அரசாலோ தனி நபராலோ

பறிக்கப்படு மெனில்

அது என் சுதந்திரம் இல்லை

அவர்களின் சுதந்திரம்தான்.

(‘சுதந்திரம்’ கவிதையிலிருந்து ஒரு பகுதி)

கனவு

என்னுடைய கனவுகளை

உடனே அங்கீகரித்துவிடுங்கள்

வாழ்ந்துவிட்டுப் போனேன்

என்ற நிம்மதியாவது இருக்கும்

ஏன் இந்த ஒளிவுமறைவு விளையாட்டு

நம் முகங்கள்

நேருக்கு நேர்

நோக்கும்போது

ஒளி

பளிச்சிடுகிறது

நீங்கள்தான் அது

நான் பார்க்கிறேன்

உங்கள் வாழ்க்கையை

அதன் ஆபாசக் கடலுக்குள்

உங்களைத் தேடுவது

சிரமமாக இருக்கிறது

அழகில்

நீங்கள் இல்லவே இல்லை

உங்கள் கனவு

உலகத்தைக் காண்கிறேன்

அந்தக் கோடிக்கணக்கான

ஆசைகளுள்

ஒன்றில்கூட நியாயம் இல்லை

தினந்தோறும் ஒரு கனவு

அக்கனவுக்குள் ஒரு கனவு

உங்களைத் தேடுவது சிரமமென்று

நான் ஒரு கனவு காணத் துவங்கினேன்

உடனே அங்கீகரித்துவிடுங்கள்

நன்றி நவிலல்

இந்த செருப்பைப் போல்

எத்தனை பேர் தேய்கிறார்களோ

இந்த கைக்குட்டையைப் போல்

எத்தனை பேர்

பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ

இந்த சட்டையைப் போல்

எத்தனை பேர் கசங்குகிறார்களோ

அவர்கள் சார்பில்

உங்களுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு

- ஆத்மாநாம் (18.01.1951 - 06.07.1984)

இன்று ஆத்மாநாம் நினைவு தினம்

SCROLL FOR NEXT