அரசாங்கங்களின் வரவு - செலவு கோடிக்கணக்கில் அதிகரித்து வருகின்றன; ஊழலும் நிர்வாக முறைகேடுகளும் புதுப்புது வடிவம் எடுத்துவருகின்றன; கணக்குத் தணிக்கை மேலும் மேலும் சிக்கலாகி வருகிறது. இந்நிலையில்தான் நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அமைப்புக்கு இதுவரை இருந்திராத தணிக்கை வாய்ப்புகளும் சவால்களும் ஒரே சமயத்தில் கிட்டியுள்ளன. மத்திய - மாநில அரசுகளின் வரவு - செலவு அறிக்கைகளையும் இதர செயல்களையும் தணிக்கை செய்யும்போதே, அரசு - தனியார் இணைந்து மேற்கொள்ளும் (பி.பி.பி.) திட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலக வரவு - செலவுகளையும் தணிக்கை செய்யும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்திய கிரிக்கெட் சங்கத்தின் வரவு - செலவுகளையும் தணிக்கை செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறது. பொதுச் சரக்கு - சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வரவிருப்பதால், அந்தச் சீர்திருத்தம் தொடர்பான தணிக்கையை மேற்கொள்ள நடுவண் அரசின் தணிக்கையாளர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறார், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சசிகாந்த் சர்மா. பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட செலவுகள், இழப்புகள், லாபங்கள் ஆகியவற்றைத் தங்களுடைய அமைப்பு தணிக்கை செய்யும் என்றும் தெரிவிக்கிறார். ஜோசி ஜோசப்புக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம் வருமாறு...
உச்ச நீதிமன்றம் தன்னுடைய 2014 திருப்புமுனைத் தீர்ப்பு மூலம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளையும் சி.ஏ.ஜி. தணிக்கை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. நாட்டின் பொதுச் சொத்துகளைப் பயன்படுத்தும் எல்லா தனியார் நிறுவனங்களின் கணக்குகளையும் அரசின் தணிக்கை அமைப்பு தணிக்கை செய்ய உரிமை உண்டு என்பது இதிலிருந்து பெறப்பட்டது. இந்தத் தணிக்கைகள் இப்போது எப்படியுள்ளன? நீங்கள் நடத்திய முதலாவது தகவல்தொடர்பு நிறுவனத் தணிக்கையால் அரசுக்குப் பணம் ஏதும் கிடைத்திருக்கிறதா?
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதால், பொதுச் சொத்துகளைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுவது தனியார் நிறுவனமாக இருந்தாலும், அதன் கணக்கையும் அரசு தணிக்கை செய்யலாம் என்ற கொள்கை உருவானது. பொதுச் சொத்துகளைப் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு உரிய வருவாய் கிடைக்கிறதா என்று ஆராயும் கடமை அரசு தணிக்கை அமைப்புகளுக்கு இதன் மூலம் ஏற்பட்டிருக்கிறது.
எங்களுடைய முதலாவது தணிக்கை அறிக்கை, நாடாளுமன்றத்தில் ஓராண்டுக்கு முன்னால் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது இரண்டாவது அறிக்கையைத் தயாரித்துவிட்டோம். சில வழக்குகள் நீதிமன்றப் பரிசீலனையில் இருந்தாலும் முதல் அறிக்கை அடிப்படையில் தனியாரிடமிருந்து உரிய வருவாயைப் பெறும் நடவடிக்கைகளை அரசு தொடங்கியிருக்கிறது.
உங்களால் தணிக்கை செய்யப்படும் பெரிய விவகாரங்கள் எவை?
ஏர்-இந்தியா அரசு விமானப் போக்குவரத்து நிறுவனத்தைச் சீரமைப்பதற்கான அறிக்கை, சுற்றுச்சூழல்ரீதியாக ஒப்புதல் வழங்கும் நிர்வாக நடைமுறை, வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வெள்ளம் ஏற்படப்போவதை முன்கூட்டியே கணித்து எச்சரிப்பது ஆகியவை முக்கியமானவை. கல்வி பெறும் உரிமை, தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கான ஓய்வூதியம், கங்கை நதியைத் தூய்மைப்படுத்தி புத்துயிர் ஊட்டும் திட்டம் ஆகியவற்றையும் ஆராய்ந்து வருகிறோம்.
டெல்லி மின்விநியோக அமைப்பைத் தணிக்கை செய்த அறிக்கை எப்போது வெளியாகும்? இதர மின்விநியோக அமைப்புகளையும் தணிக்கை செய்கிறீர்களா?
டெல்லி அரசின் கோரிக்கையை ஏற்று டெல்லி மின்விநியோக நிறுவனத்தின் கணக்குகளைச் சரிபார்த்தோம். 2015 தொடக்கத்திலேயே தணிக்கை முடிந்துவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியாமல் இருந்தது. இப்போது உச்ச நீதிமன்றம் இந்த விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. மாநிலங்களின் மின்விநியோக நிறுவனங்களின் கணக்குகள் அவ்வப்போது ஆராயப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அரசு நிறுவனங்களே. பிற மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களின் கணக்குகளையும் விரைவில் தணிக்கை செய்ய அழைத்தால், ஏற்போம்.
பருவநிலை மாறுதல், பொதுத் துறை தனியார் துறை பங்கேற்பு (பி.பி.பி.) என்று அரசு முதலீடு செய்யும் திட்டங்களும் முறைகளும் மாறிவருகின்றன. பொது ஆதாரங்களைத் தனியார் பயன்படுத்திக்கொள்கின்றனர். இவை உங்களுடைய தணிக்கை மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
தணிக்கை என்பது திட்டத்தின் நோக்கம், வழிமுறை, செலவு செய்யும் பாங்கு ஆகியவற்றை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதாகும். நிர்வாக முறையில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றனவோ அதற்கேற்பத் தணிக்கை முறைகளும் மாற வேண்டும். பருவநிலை மாறுதல், வன உயிரிகளைப் பாதுகாப்பது, இயற்கைப் பேரிடர்களைத் தடுப்பது ஆகிய சுற்றுச் சூழல் பிரச்சினைகளும் தணிக்கை அமைப்பால் கவனிக்கப்பட வேண்டியவையாகின்றன. சுற்றுச் சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாறுதல்களைக் கூட கவனித்து அறிக்கை தந்திருக்கிறோம். அசாமில் உள்ள காஸிரங்கா தேசிய உயிரிப்பூங்கா குறித்து நாங்கள் தந்த அறிக்கை, நாடு முழுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் விவாதிக்கப்பட்டது. டெல்லி சர்வதேச விமான நிறுவனம், மும்பை சர்வதேச விமான நிறுவனம் என்ற அரசு - தனியார் நிறுவனப் பங்கேற்பு (பி.பி.பி.) திட்டம் குறித்தும் ஆராய்ந்து தந்த அறிக்கைகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர் வளர்ச்சி இலக்குத் திட்டத்தை எப்படி அமல் செய்கின்றனர் என்று தணிக்கை செய்துவருகிறோம். அடுத்தபடியாக பொதுச் சரக்கு, சேவை வரி அமலில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம்.
உச்ச நீதிமன்றம் கோரியபடி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வரவு செலவுகளைக் கண்காணிக்க ஒருவரை நியமித்துவிட்டீர்களா? மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் இப்படி உங்களுடைய பிரதிநிதியை நியமிக்கிறீர்களா? அவர்கள் அந்தந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் தணிக்கையாளர்களாக இருப்பார்களா?
உச்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று நடப்போம். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அல்லது நீதிபதி லோதா குழு ஆகியவற்றிடமிருந்து கடிதத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். எங்களுடைய பிரதிநிதி அங்கேயே இருந்து செயல்படுவாரா என்பதை உரிய நேரத்தில் தீர்மானிப்போம்.
தனிநபர்களைப் பற்றிய தரவுகள் பெருமளவில் இப்போது பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இந்தத் தரவுகளைக் கொண்டு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவும் பண்டங்களை உற்பத்தி செய்யவும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் உங்களுடைய பொதுத் தணிக்கை நடைமுறைகள் எப்படியிருக்கும்?
தனி நபர்களைப் பற்றிய தரவுகள் கடந்த 10 ஆண்டுகளில் உருவான ஒரு ஆர்வமூட்டும் நிகழ்வாகும். பொது நடப்புகளைத் தணிக்கை செய்யும் சி.ஏ.ஜி. இதில் அக்கறை காட்டாமல் எப்படி விலகியிருக்க முடியும்? இந்தத் தரவுகளை ஆய்வுசெய்வதும் பல்முனைத் தரவு மூலங்களை இணைத்துப் பார்ப்பதும் தணிக்கைத் திறனை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும். கிடைத்துள்ள புள்ளிவிவரங்களைக் கொண்டு என்ன திட்டங்கள் தீட்டப்படுகின்றன, அவற்றால் விளைந்த பயன்கள் என்ன, அதையே மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருந்தால் கூடுதலாகக் கிடைத்திருக்கக்கூடிய பலன் என்ன என்றெல்லாம் நுணுகிப் பார்க்க வாய்ப்பாக இருக்கும். இது தொடர்பான கொள்கையை 2016-ல் நாங்கள் வகுத்தோம். தரவுகளை மேலாண்மை செய்யவும் பகுப்பாய்வு செய்யவும் டெல்லியில் மையத்தை ஏற்படுத்தினோம். சில திட்டங்களை முன்னோடியாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். கேரளத்தில் அமலாகும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஆய்வறிக்கை அளித்தோம். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் பற்றிய தரவுகள், செலவுத் தரவுகள், தணிக்கை செய்யப்படுபவர் பற்றிய தரவுகள் ஆகியவற்றை இதற்குப் பயன்படுத்தினோம். இப்போது தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்துக்கு இவை போன்ற தரவுகளைப் பயன்படுத்துகிறோம். இவ்விரண்டிலும் ஹார்வர்டு கென்னடி கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறோம். மக்களைப் பற்றிய தரவுகளைக் கையாள எங்களுடைய மூத்த அதிகாரிகளுக்கு பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கிறோம். இந்தப் பயிற்சி ஊக்கமூட்டுவதாக இருப்பதுடன், எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகத் தணிக்கை செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.
ஒரு முடிவு அல்லது திட்டத்தைத் தவறாகக் கையாள்வதால் அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு என்று நீங்கள் குறிப்பிடும் தொகை நம்ப முடியாததாகவும், சாத்தியமே இல்லாததாகவும் இருப்பதாகப் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இடையே உங்களுடைய தணிக்கை நியாயமானதுதான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?
இந்தத் திட்டத்துக்கு சர்வதேச அரங்கில் எப்படிக் கட்டணம் நிர்ணயிக்கிறார்கள், இந்த சேவை மூலம் எவ்வளவு பேர் பலனடைவார்கள், ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய பணப் பலன் எவ்வளவு, அரசு இதை என்ன கட்டணத்துக்கு தனியார் நிறுவனத்துக்குக் கைமாற்றிக் கொடுக் கிறது என்று நடைமுறையில் உள்ள உண்மை யான மதிப்புகளின் அடிப்படையில்தான் கணக் கிடுகிறோம். கற்பனையோ, இப்படியிருந்தால் அப்படி மாறும் என்ற உத்தேசமான கணக் கீடுகளோ கிடையாது. ஒருசிலவற்றை நாங்கள் அனுமானித்தாலும் அதை வெளிப்படையாகவே தெரிவிக்கிறோம். இதை எங்களுடைய அறிக்கை களில் தெளிவாகக் கூறுகிறோம். எங்களை விமர் சிப்பவர்கள் அறிக்கைகளை முழுக்க வாசிப்ப தில்லை. எங்களுடைய நேர்மையையும் திறமை யையும் மற்றவர்கள் சந்தேகித்துவிடக் கூடாது என்பதற்காக எங்களுக்கு நாங்களே கடுமையான நியதிகளை ஏற்படுத்திக்கொள்கிறோம். புறக் காரணங்களுக்காக எங்களுடைய தணிக்கை நேர்மையற்றதாகப் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
ஓராண்டில் எத்தனை தணிக்கை அறிக்கைகளை மத்திய - மாநில நிலைகளில் அளிக்கிறீர்கள்? அவை அனைத்துமே பொதுக்கணக்குக் குழுக்களாலும் உரிய துறைகளாலும் கவனம் பெறுகின்றனவா?
ஏராளமான அறிக்கைகளை அளிக்கிறோம். 2015-16-ல் 188 அறிக்கைகளை அளித்தோம். அவற்றில் 53 நாடாளுமன்றத்தின் பரிசீலனைக் கானவை. 135 மாநில சட்டப் பேரவை களுக்கானவை. இவற்றின் மீது பொதுக்கணக்குக் குழுக்களும் மாநிலத் துறைகளும் அக்கறை செலுத்தி, பரிகார நடவடிக்கைகளை எடுப்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.
சி.ஏ.ஜி.யும் அதன் தணிக்கையும் எவ்வளவு திறனுடன் இருக்கின்றன என்று மதிப்பிட்டிருக்கிறீர்களா? அதற்கான நடைமுறை ஏதேனும் இருக்கிறதா?
தணிக்கைத் தரத்தைப் பராமரிக்கக் கடுமை யான உள் நடைமுறைகளைக் கடைப்பிடிக்கி றோம். இதை எங்களுடைய அனுபவத்திலிருந்தும் சர்வதேச நடைமுறைகளிலிருந்தும் செம்மைப் படுத்தியிருக்கிறோம். சர்வதேசத் தணிக்கை அமைப்புகளிலும் ஆசிய அமைப்புகளிலும் தீவிர உறுப்பினராக இருப்பதால் புதிய தர நிலையை உருவாக்கியிருக்கிறோம். எங்களுடைய செயல்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் எங்களுடைய செயல்களைப் பற்றிய திறன் அறிக்கைகளையும் வெளியிடுகிறோம்.
பணமதிப்பு நீக்கத்தையும் அதன் விளைவுகளையும் எப்படிக் கையாளுவீர்கள்? மிக நீண்ட காலத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட முக்கியமான நிர்வாக நடவடிக்கை அது, அதை உங்களால் புறக்கணிக்க முடியாதே?
பணமதிப்பு நீக்கம் என்பது வங்கித் துறை, பண சப்ளை தொடர்பானது என்பதால், தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறையின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. ஆனால், அரசின் வரவு செலவு மீது அது என்ன விளைவை ஏற்படுத்தியது என்று அரசிடமிருந்து அறிக்கை கேட்டுப் பெறும் உரிமை அதற்கு இருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தால் அரசின் வரி வருவாய் என்ன ஆனது என்று ஆராயப்படும். அத்துடன் கருவூலத்தின் மீது அது ஏற்படுத்திய விளைவுகளும் கவனத்தில் கொள்ளப்படும். புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவும் வங்கிகளுக்குக் கொண்டுசென்று விநியோகிக்கவும் எவ்வளவு செலவானது என்று கேட்கப்படும். பொது நிதிக்கு ரிசர்வ் வங்கி அளித்த லாபஈவு எவ்வளவு என்று கணக்கிடப்படும். வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட டெபாசிட் பற்றிய மாபெரும் தரவுகளை ஆராயும் பணியைத் தனியார் நிறுவனங்களிடம் அளித்து சரிபார்க்க வருமான வரித்துறை திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
வங்கிகளில் நடந்த பணப் பரிமாற்றங்கள், வருவாய்த் துறை அடுத்து எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை சி.ஏ.ஜி. தணிக்கை செய்யும். வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணத் தவறியது, அதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு போன்றவற்றை சி.ஏ.ஜி. கணக்கிடும். அடையாளம் காணப்பட்ட டெபாசிட்தாரர்களைக் கேள்வி கேட்டு வரியை வசூலிக்காமல் தவறியது, ஒரு சிலரை மட்டும் குறிவைத்து வரி ஏய்ப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அத்தகைய சம்பவங்கள், அதன் விளைவுகள் என்று எல்லாவற்றையும் சி.ஏ.ஜி. கவனத்தில் கொள்ளும். இனி வரும் காலத்தில் இதில் கவனம் செலுத்துவோம்.
பொதுச் சரக்கு - சேவை வரி அமலில் உங்களுடைய பங்கு என்ன? பொதுச் சரக்கு சேவை வரியையும் தணிக்கை செய்வீர்களா?
வரி வசூலிப்பு நடைமுறையில் மிகப் பெரிய மாற்றம்தான் பொதுச் சரக்கு - சேவை வரி. முந்தைய வரி வசூலிப்பைத் தணிக்கை செய்ததைப் போலவே இதையும் செய்வோம். மத்திய - மாநில அரசுகளின் வருவாய்த் துறையைத்தான் இதற்காக ஆய்வுசெய்வோம் என்பதால், வருமான வரிக் கணக்குகள், செலுத்திய தொகைகள், அளித்த நோட்டீஸ்கள் என்று எல்லா ஆவணங்களையும் கேட்டு ஆய்வு செய்வோம். எனவே, வருவாய்த் துறையினர் எங்களுக்குத் தேவைப்படும் தகவல்களையும் உதவிகளையும் அளிப்பது கட்டாயம். இதை ஏற்கெனவே அரசுக்குத் தெரிவித்திருக்கிறோம். எங்களுடைய பங்குக்கு வருவாய் தணிக்கை ஏற்பாடுகளை மாற்றியமைத்திருக்கிறோம். தகவல் தொழில்நுட்பம் அதிகபட்சம் இதற்குப் பயன்படுத்திக்கொள்ளப்படும்.
காமன்வெல்த் நாடுகளின் தலைமைத் தணிக்கையாளர் மாநாட்டின் விவாதப்பட்டியல் என்ன?
டெல்லியில் மார்ச் 21 முதல் 23 வரையில் மாநாடு நடைபெறுகிறது. பொதுத் தணிக்கையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் தணிக்கை என்ற இரண்டு அம்சங்கள் இதில் முக்கியமாக விவாதிக்கப்படும். 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும். பொதுத் தணிக்கையில் திறனை வளர்க்க மாநாடு உதவும் என்று நம்புகிறோம்.
முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தைத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் தணிக்கை செய்கிறது, எப்போது முடியும்? எந்த அளவுக்குச் சவாலான வேலை இது?
இந்தியாவுக்கு இந்தப் பொறுப்பு முதல் முறையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2016 செப்டம்பரில் தணிக்கையைத் தொடங்கினோம். 11 குழுக்களாகப் பிரிந்து வேலை செய்கிறோம். 2016-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை 2017 மார்ச்சில் தயாராகிவிடும். ஐநா தலைமை யகத்தைத் தணிக்கை செய்வது பலதரப்பட்ட பணிகளை உள்ளடக்கியது. சில ஒன்றோடொன்று இணைந்தது. தலைமைச் செயலக நடவடிக்கை கள், கள நடவடிக்கைகள், அரசியல் பணிகள் என்று பலவும் சேர்ந்ததுதான் ஐநாவின் தலைமையகப் பணி. இந்தக் காரணத்தால், அதன் நிதி அறிக்கைகள் ஏராளம். அவற்றைத் தணிக்கை செய்வது உண்மையிலேயே சவாலான பணி.
ஐநா தணிக்கை வாரியத் தலைவர் பதவியை ஜனவரி 1 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்றிருக்கிறீர்கள்; இந்தப் பொறுப்பு எப்படிப்பட்டது?
ஐக்கிய நாடுகள் சபைக்கு நிர்வாக - நிதிநிலை அறிவிக்கை தொடர்பான ஆலோசனைக் குழு இருக்கிறது. அது நம்முடைய பொதுக் கணக்குக் குழுவுக்கு இணையானது. தணிக்கை அறிக்கையின் முக்கிய அம்சங்களை அந்த ஆலோசனைக் குழுவுக்கு, வாரியத்தின் தலைவர் என்ற வகையில் தெரிவிக்க வேண்டியது என்னு டைய வேலை. வாரியத்தில் இப்போது ஜெர்மனி, தான்சானியா நாடுகளின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்கள் உறுப்பினர்களாக இருக்கின் றனர். வாரியக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குகிறேன். நிதியாதாரங்களை நிர்வாகம் முறையாகச் செலவழிக்கும் என்று உத்தரவாதம் அளிப்பதுதான் வாரியத்தின் வேலை.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்) தமிழில்: சாரி