சிறப்புக் கட்டுரைகள்

விவசாயக் கடன்: நிரந்தரத் தீர்வு என்ன?

செய்திப்பிரிவு

விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரும் விவசாயிகளின் கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், அரசாங்கம் விவசாயக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால், அரசுக்குச் சுமார் 20,339 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. யதார்த்தம் என்னவெனில், கடனைத் தள்ளுபடி செய்வதோ வட்டி விகிதத்தைக் குறைப்பதோ விவசாயப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஆகாது. தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட முழு விவசாயத் தீர்வு என்பதை இலக்காகக் கொண்ட எங்கள் 15 வருட முயற்சியில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், எங்கள் கருத்தை முன்வைப்பதைக் கடமையாகக் கருதுகிறோம்.

பிரச்சினைக்கு அடிப்படை

விவசாயம் எதற்கு மிக முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவதில் ஏற்பட்டிருக்கிற குழப்பமே விவசாயப் பிரச்சினைக்கான காரணம். விவசாயத்தை நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு முக்கியம் எனப் பார்ப்பதா, விவசாயம் சார்ந்த 70 கோடி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரம் சார்ந்த நாட்டின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு அத்தியாவசியம் எனக் கருதுவதா அல்லது விவசாயிகள் செய்யும் தொழிலாக, வியாபாரமாகப் பார்ப்பதா என்பதில் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை என்பது உண்மை. சில விஷயங்களில் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்காகவும், சில இடங்களில் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாகவும், சில நேரங்களில் விவசாயிகள் செய்யும் தொழில் என்கிற கண்ணோட்டங்களில் பார்ப்பதால் ஏற்படும் குழப்படிதான் விவசாயப் பிரச்சினைக்கு அடிப்படை.

மழை, தேவையான அளவு சரியான நேரத்தில் பெய்யுமா என உறுதியாகத் தெரியாது. விவசாயி தான் வாங்கும் விவசாயக் கடனை விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறாரா, அதுவும் முழுமையாகப் பயன்படுத்துகிறாரா என்பதை அறிவதற்கு வழிமுறையில்லை. அதிகபட்ச விளைச்ச லுக்குத் தேவைப்படும் சிறந்த தகவல்கள், தரமான இடுபொருட்கள் அனைத்து விவசாயிகளுக்கும் (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்) எளிதில் கிடைக்கும் வழிமுறை இல்லை. எவ்வளவு மகசூல் கிடைக்கும், என்ன விலை கிடைக்கும், எவ்வளவு நிகர லாபம் கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதமும் இல்லை.

சலுகையல்ல... மூலதனம்!

இவ்வளவு நிலையில்லாத் தன்மையைக் கொண்டிருக்கும் விவசாயத் தொழிலுக்கு அரசாங்கம் வங்கிக் கடன் ஏன் வழங்குகிறது... வழங்க வேண்டும்? விவசாயத்தை விவசாயியின் தொழிலாக, வியாபாரமாக மட்டும் பார்த்தால் இது சாத்தியமில்லை. இந்த இடத்தில், அரசாங்கம் விவசாயத்தை நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கான, பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாகப் பார்க்கிறது. கிராமப்புறம் சார்ந்த பொருளாதாரமாக இன்னும் நாடு இருப்பதால், நாட்டின் முன்னேற்றத்துக்கான மூலதனமாகப் பார்க்கிறது. அதனால்தான் சுமார் 15 லட்சம் கோடிகளுக்கு மேலான அளவு நிதியை விவசாயத்துக்கு அரசு துணிந்து ஒதுக்குகிறது.

நாட்டின் முக்கிய சமுதாயத் துறைகளுக்குச் செய்யப்படும் முதலீடுகளுக்கு, செலவுகளுக்கு நேரடி வருமானத்தை அரசு எதிர்பார்ப்பதில்லை, எதிர்பார்க்கத் தேவையில்லை என்கிற பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையில், எல்லைப் பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்றவற்றின் வரிசையில் நாட்டின் உணவுப் பாதுகாப்பும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. அப்படியெனில், விவசாயக் கடனுக்கு வட்டி என்கிறதே தவறானதாகிறது. விவசாயம் பொய்த்துப்போகும்போதோ, விலை வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டமடையும்போதோ விவசாயக் கடனை வசூலிப்பதும்கூடத் தவறானதாகவே ஆகும். விவசாயத்தை விவசாயிகளின் தொழிலாக, வியாபாரமாக மட்டும் பார்க்கப்படுமேயானால், நிகர லாபம் உத்தரவாதமில்லாத தொழிலுக்குக் கடன் வழங்குவதே தவறு என்பதாகிவிடும்.

எனவே, நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தைப் பாதுகாத்தல், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்தல், கிராமப்புறப் பொருளாதாரம் சார்ந்த நாட்டின் வளர்ச்சி விகிதத்தை அதிகரித்தல் போன்ற மிக முக்கியமான விஷயங்களின் அடிப்படையாக இருக்கும் விவசாயத்தை வெற்றிகரமாகக் கையாளத் தேவைப்படும் முயற்சிக்கான பெரும் பொறுப்பை அரசாங்கம் கையில் எடுத்துக்கொள்வதுதான் நியாயம். அதில் ஏற்படும் ஆபத்தை அரசாங்கம் சமாளிப்பதுதான் தர்மம். எளிதும்கூட. ஆனால், தற்போது விவசாயம் செய்வதில் உள்ள ஆபத்தின் பெரும்பகுதியை விவசாயிதான் ஏற்கிறார்.

இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். வெங்காயம் விலை அதிகரிக்கும்போது வெளிநாடுகளிலிருந்து அவசர நிலையில் இறக்குமதி செய்யும் அரசு, அதே வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கும், 50 பைசாவுக்கும் விற்கும்போது மௌனம் காக்கிறது, கண்டுகொள்ளாமல் விடுகிறது. மிகக்குறைந்த விலை கிடைக்கும்போது எப்படி விவசாயியால் கடனை திருப்பிச் செலுத்த முடியும்? இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு விவசாயிகளின் வாழ்க்கையைப் பணயம் வைத்துச் சாதிக்கப்படுவதாக இருக்கக் கூடாது.

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் தேவை நல்ல தரம், அதிக உற்பத்தி, உரிய விலை, விவசாயம் செய்வதில் உள்ள கடினத்தன்மையை இலகு வாக்குதல் மற்றும் வறட்சி, புயல் போன்ற இயற்கைச் சோதனைகளின்போது முழு இழப்பையும் ஈடுகட்டும் விதமான சிறப்புப் பயிர்க் காப்பீடு என்பதே ஆகும். இவை விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் விதமான ஒரு முழுத் தீர்வை அரசு ஏற்படுத்திக்கொடுப்பது மட்டும்தான் நிரந்தரத் தீர்வாக அமையும். அப்போதுதான் விவசாயிகளின் தற்கொலைகள், போராட்டங்கள், உணவு விலை ஏற்றங்கள், உணவுத் தரமின்மை போன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் நாட்டில் தொடராது.

- திருச்செல்வம், வேளாண் தகவல் தொழில்நுட்பவியலாளர்.

தொடர்புக்கு: thirurm@gmail.com

SCROLL FOR NEXT