பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை மக்களிடம் சேர்க்கும் வழிதான் இந்தப் பங்கு விற்பனை என்கிறது அரசு. அரசைவிடச் சிறந்த மக்கள் பிரதிநிதியாக யார் இருக்க முடியும்?
அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பார்கள். அதன் மூலம் அந்த நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பார்கள். உலகமயம் உருவாக்கிய புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கியமான பகுதி இதுதான்.
1991-ல் சந்திரசேகர் அரசின் நிதி அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. அவர்தான் பொதுத் துறை நிறுவனங்களின் 20% பங்குகளை விற்பதற்கு முடிவு செய்துவிட்டோம் என்று அறிவித்தார். அந்த அரசு சில மாதங்கள்தான் நீடித்தது. அதற்குப் பிறகு காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சி மாறினாலும் முடிவு மாறவில்லை. காங்கிரஸ்தான் யஷ்வந்த் சின்ஹாவின் முடிவை அமலாக்கியது.
விற்பனை 1992-93ல் தொடங்கியது. முதலில் எல்ஐசி, யுடிஐ உள்ளிட்ட அரசின் நிதி நிறுவனங்களுக்குப் பங்குகள் விற்கப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்நிய முதலீட்டாளர்களுக்கும், இந்தியப் பெரு நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் பங்குச்சந்தை மூலமாகப் பங்குகள் விற்கப்பட்டன. நஷ்டமடையும் பொதுத் துறை நிறுவனங்களின் செயல் திறனை அதிகரிக்கவே இதை எல்லாம் செய்கிறோம் என்றது அரசு. ஆனால், லாபம் ஈட்டக்கூடிய பொதுத் துறை பங்குகளைத்தான் அதிகமாக அரசு விற்றது. சரி, விற்று வந்த வருமானத்தை அந்த நிறுவனத்துக்கு அரசு கொடுத்த கடனை அடைக்கப் பயன்படுத்தலாமா, புதிய செலவுகள் செய்யலாமா, புதிய முதலீடுகள் செய்யலாமா என்ற விவாதங்கள் இருந்தன. ஆனாலும், அவ்வப்போது அரசு தனக்குத் தேவையான வழிகளிலேயே இந்த வருமானத்தைச் செலவு செய்துவந்துள்ளது. சில பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள், அவற்றின் சரியான மதிப்பைவிடக் குறைவாக விற்கப்பட்டன. அரசு தனக்குத்தானே நஷ்டத்தையும் ஏற்படுத்திக்கொண்டது. இதனால், தனியார்தான் லாபமடைந்தனர் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை மக்களிடம் சேர்க்கும் வழிதான் இந்தப் பங்கு விற்பனை என்கிறது அரசு. அரசைவிடச் சிறந்த மக்கள் பிரதிநிதியாக யார் இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. மேலும், பொதுத் துறை நிறுவனங்களைத் திறமையாகச் செயல்படுத்த வேறு பல வழிகள் உள்ளன. முதலீடு அரசிடம் இருக்க, நிறுவன மேலாண்மையை மட்டும் தனியாரிடம் அளிப்பதும் ஒரு வழி. இதுவும்கூடத்தான் பொதுத் துறை நிறுவனங்களை காப்பாற்றும். மாற்று வழிகளைத் தேடுவதற்கு எது அரசைக் கட்டாயப்படுத்தும்?
இராம.சீனுவாசன், பேராசிரியர்.