சிறப்புக் கட்டுரைகள்

நட்பு விரும்பும் மூளைகள்

கே.என்.ராமசந்திரன்

சிங்கிள் லைன்: ‘வில்லியம்ஸ்’ அறிகுறியாளர்களின் மூளையின் கட்டமைப்பிலும் இணைப்பிழைச் சந்திகளிலும் தெளிவான, சமனில்லாத் தன்மைகள் தென்படும்

ஒரு சிறிய மரபியல் பிழையின் காரணமாகச் சிலருக்கு ‘வில்லியம்ஸ்’ மனப்பாங்கு என்று அழைக்கப்படும் குறைபாடு ஏற்படும். இந்தக் குறைபாட்டை நோய் என்று அழைப்பது சரியில்லை என்று பல மருத்துவர்கள் கருதுகிறார்கள். இக்குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு இடத்தின் பரப்பளவு மற்றும் தொலைவு ஆகியவற்றை மதிப்பிடுவது, எண்களைப் புரிந்துகொள்வது போன்றவை கடினமாக இருக்கும். ஆயினும், அத்தகையவர்களின் நடவடிக்கை அச்சமூட்டுவதாக இருக்காது.

முன் பின் பார்த்திராதவர்களாக இருந்தாலும், அவர்களுடைய கையைப் பிடித்துக் குலுக்கி ‘என்ன செளக்கியமா?’ என்று விசாரிப்பார்கள். இத்தகைய ஆளுமையைத்தான் ‘வில்லியம்ஸ் ஆளுமை’அல்லது ‘வில்லியம்ஸ்’என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனால் பீடிக்கப்பட்டவர்கள், யாராவது நாலு பேர் தெருவில் நின்று அரட்டையடித்துக்கொண்டிருந்தால், தானும் வலியப் போய் அதில் கலந்துகொள்வார்கள். அவர்களுக்குப் பொதுவாக சமூகத்தின் நடைமுறைகள் பற்றிய புரிதல் குறைவாயிருக்கும். தயக்கமோ, கூச்சமோ இராது.

டி.என்.ஏ.க்களின் குறை

உடலில் செல்கள் பிரிகிறபோது, அவற்றில் உள்ள டி.என்.ஏ. இரட்டை இழைகளும் தனித்தனியாகப் பிரியும். சில சமயங்களில் ஒன்றின் சிறிய முனைத் துண்டு மட்டும் பிய்ந்துபோய்விடும். கருவுறலின்போது ஏதாவது ஒற்றை டி.என்.ஏ. இழையுடன் முனை பறிபோன டி.என்.ஏ. இழை இணையுமானால், அது தனது பணியைச் சரியாகச் செய்யாது. தாயின் டிஎன்ஏவும் தந்தையின் டிஎன்ஏவும் கைப்பையில் உள்ள ஜிப்பைப் போலச் சரியாக முனைக்குமுனை பொருந்த வேண்டும். ஒரு பக்க ஜிப்பில் சில பற்கள் இல்லாமல் போனால் பையை மூட முடியாது. அதே போல, தாயின் அல்லது தந்தையின் டி.என்.ஏ.க்களில் குறை இருக்குமானால், அவை இணைந்து உருவாகும் கருவும் குறையுள்ளதாகவே இருக்கும்.

அத்தகைய குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் பெரியவர்களான பிறகும் நீளம், அகலம், உயரம், பரப்பளவு, இடைவெளி போன்றவற்றை அறிவதற்குச் சிரமப்படுவார்கள். ஜிக்சா புதிர்ப் படங்களை அவர்களால் நிறைவுசெய்ய முடியாது. சில சமயங்களில், போக வேண்டிய இடத்துக்குப் போகாமல், வழி தவறி வேறெங்காவது போய் தவிப்பார்கள். வரவு – செலவுகளை அடுத்தடுத்து செங்குத்தாகப் பட்டியலிட்டுக் கூட்டச் சொன்னால், அவர்களுக்கு விடைகள் சரியாக வராமல் உதைக்கும். அவர்களுடைய அறிவுக்கூர்மை அலகு (ஐ.க்யூ.) சராசரியை விட 35 - 40 புள்ளிகள் குறைவாகவே இருக்கும். சிக்கலான பணிகளை அவர்களால் செய்ய முடியாது.

ஆனால், அவர்கள் எப்போதும் உற்சாகமாயிருப்பார்கள். உல்லாசமாகப் பேசுவார்கள். பேச்சில், மொழித் திறனில் குறையேதும் இராது. மற்றவர்கள் இயன்றவரை அவர்களைத் தவிர்க்க முயற்சி செய்வதால் அவர்களுக்கென்று நெருக்கமான நண்பர்களே இருக்க மாட்டார்கள். அதனாலேயே அவர்களுக்கு இயலாமை மற்றும் ஆசாபங்க (விரும்பியது நிறைவேறாமை) உணர்வுகள் நிறைய இருக்கும்.

‘வில்லியம்ஸ்’களின் மொழித் திறமை

இந்தக் குறைபாட்டை 1961-ம் ஆண்டில் ஜே.சி.பி. வில்லியம்ஸ் என்பவர் முதன்முதலாக அடையாளம் கண்டார். தனக்கே இந்தக் குறைபாடு இருப்பதை அறிந்த அவர் 1970-ம் ஆண்டு வாக்கில் லண்டனிலிருந்து காணாமல் போய்விட்டார். அவர் என்ன ஆனார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

7,500-ல் ஒருவருக்கு இந்தக் குறைபாடு இருப்பதாகத் தெரியவருகிறது. அவர்களுக்கு இதயச் செயல்பாட்டில் குறையிருக்கும். அவர்களுடைய ஆயுள் சராசரி 50 வயது. சாதாரண மக்கள் அத்தகையவர்களை மன வளர்ச்சி அடையாதவர்களாகவே கணிப்பார்கள்.

ஆனால், அப்படிப்பட்டவர்கள் பலரிடம் கணிசமான மொழித்திறமை இருக்கிறது என்பதை உர்சுலா பெல்லுகி என்ற பெண் மருத்துவர் 1980-களில் கண்டுபிடித்தார். அவர்கள் உற்சாகத்துடன், பெரும் சொல்வளத்துடன், சரளமாக உரையாடினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் சித்திரக் குள்ளர்களைப் போன்ற உடலமைப்புடன் இருந்தனர். பெல்லுகியே ஐந்தடிக்கும் குறைவான உயரமும் புன்னகை தவழும் முகமும், கவர்ச்சியான, உணர்ச்சிகள் கொப்பளிக்கும் விதமான பேச்சும் கொண்டவர். அதன் காரணமாகவே அவரால் நோயாளிகளுடன் சகஜமாகப் பேசிப் பழக முடிந்தது.

கணிதமா.. நுண்கலையா?

வில்லியம்ஸ் அறிகுறியாளர்கள் கற்பனைத் திறன் மிக்கவர்கள். அடுக்கு மொழிகளுடன் அலங்காரமாகக் கதையளப்பார்கள். தனக்கிருக்கும் மொழி வளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அதிகமுள்ளவர்களாக ஒரே பொருளுடைய பல சொற்களைப் பயன்படுத்திப் பேசுவார்கள். அதன் காரணமாகவே அவர்களுடைய சொல்வளம் விரைவாகப் பெருகும்.

வில்லியம்ஸ் அறிகுறியாளர்களின் மூளைக் கட்டமைப்பிலும் இணைப்பிழை சந்திகளிலும் தெளிவான, சமனில்லாத் தன்மைகள் தென்படும். சமனத் தன்மைகளை உண்டாக்கும் ஜீன்கள் இல்லாததே அதற்குக் காரணம். அவை வளர்கரு மற்றும் மூளையின் உருவாக்கத்தை ஆளுகிறவை. அவை இல்லாதபோது மூளையின் பின் மற்றும் மேல் பகுதிகளும், முன் மற்றும் அடிப் பகுதிகளும் சமநிலையுடன் உருவாகாது. பின் மற்றும் மேல் பகுதிகள் பார்வை, தொலைவை உணரும் உணர்வுகள் மூலம் மற்றவர்களின் நோக்கங்களை உணர உதவுகின்றன. முன் மற்றும் அடிப் பகுதிகள் மொழித் திறன், ஒலிப் பகுப்பாய்வு, முகபாவங்களைப் புரிந்துகொள்ளுதல், உணர்ச்சிகள், இசைச் சுவை, சமூக உறவாடல்கள் ஆகியவற்றை ஆளுகின்றன. அப்பகுதிகளின் பரிமாணங்களைப் பொறுத்து, நமது திறமைகள் அமையும் இரண்டு பகுதிகளுக்கு இடையிலான போட்டியைப் பொறுத்தே நமக்குக் கணிதம் பிடிக்குமா அல்லது நுண்கலைகள் பிடிக்குமா என்பது அமைகிறது.

கூடுதல் சமநிலையின்மை

வில்லியம் அறிகுறியாளர்களிடம் இந்தச் சமநிலையின்மை அதிகமாயிருக்கும். அவர்களுடைய மூளையின் பின் மற்றும் அடிப் பகுதி வளர்ச்சி குன்றியிருக்கும். ஆனால், முன் பகுதி பெரியதாகவும் சிறப்புத் திறன்கள் பெற்றதாகவும் இருக்கும். பற்றாக்குறையாக உள்ள திறமைகளை ஈடுகட்டும் வகையில் சில குறிப்பிட்ட திறமைகள் அபரிமிதமாயிருக்கும்.

வில்லியம்ஸ் குழந்தைகளின் பார்வை தீட்சண்யமாக – ஊடுருவிப் பார்ப்பதாக இருக்கும். அது மற்றவர்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சியே. அவர்கள் மற்ற குழந்தைகளை விடத் தாமதமாகவே பேசத் தொடங்குவார்கள். அவர்கள் பெரும்பாலும் ஒரு மணி நேரம் மட்டுமே தொடர்ச்சியாகத் தூங்குவார்கள். 12 அல்லது 18 மாத வயதில் அந்தக் குறை சரியாகிவிடும். அதன் பிறகு அவர்கள், இயல்பான வகையில் பேசவும் சிரிக்கவும் பிறருடன் பழகவும் தொடங்கிவிடுவார்கள். மற்றவர்களின் கண்களை இயல்பாகப் பார்த்துப் பேசுவார்கள். மற்றவர்களின் கண்களைக் கண்களால் சந்திப்பது முழுமையாகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் உத்தியே. அதன் பிறகே பேச்சு மொழியின் மூலம் தொடர்பு வலுவாக்கப்படுகிறது.

- கே.என்.ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

SCROLL FOR NEXT