அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதலாகவே அவருக்கு எதிரான ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவில் தொடங்கிவிட்டன. முதல் வார இறுதிக்குப் பிறகு பெண்கள் பேரணி சென்றார்கள். அமெரிக்காவில் குடியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து, விமான நிலையங்களிலும் பிற இடங்களிலும் எதிர்ப்பாளர்கள் குவிந்தனர். அடுத்து, யேமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடைகளை மூடிவிட்டு, புரூக்ளின் நகர பாரோ அரங்குக்கு வெளியே திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அடுத்து, பொது வேலைநிறுத்தம் நடந்தது. இப்போது பெண் பேரணியாளர்களின் ஆதரவில் மார்ச் 8-ல் இன்னொரு பொது வேலைநிறுத்தத்துக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இப்போது போராட்டங்கள் இல்லாத நாள் இல்லை என்று சொல்லும் அளவுக்குச் சூழல் உண்டாகியிருக்கிறது.
இந்தப் போராட்டங்களில் சில புதிய போக்குகள் தென்படுகின்றன. நியூயார்க் நகரில் வாஷிங்டன் சதுக்கப் பூங்காவில் நடந்த போராட்டத்தில், ட்ரம்புக்கு போலியாக இறுதி ஊர்வலம் நடத்தினர் போராட்டக்காரர்கள். ட்ரம்ப் டவரில் ஓரினச் சேர்க்கையாளர் - மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்டோர் பங்கேற்ற போராட்டம் முத்தமிடும் போராட்டமாக நடந்தது. டைம்ஸ் சதுக்கத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பலர் ஊர்வலம் சென்றனர். அதற்குப் பிறகு வந்த திங்கள்கிழமை, ‘இவர் என்னுடைய அதிபர் அல்ல’ என்ற கிளர்ச்சி நாள் பல்வேறு நகரங்களில் ஒரே சமயத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. எல்லா இடங்களிலுமே பொதுவில் ஒரு கொண்டாட்ட மனநிலை வெளிப்பட்டது.
கொண்டாட்டமாகும் போராட்டம்
வழக்கமான போராட்டங்களில் தென்படும் - கல்லூரி கால்பந்து விளையாட்டின்போது இருக்கும் பதற்றம், கோபம் போன்ற - உணர்வு இங்கே வெளிப்படவில்லை. மாறாக, மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் வெளிப்பட்டன. மக்கள் வீடுகளிலிருந்து வளர்ப்பு நாய்களையும் தங்களுடைய சிறு வயதுக் குழந்தைகளையும் உடன் அழைத்து வந்தனர். ஊர்வலத்தில் அவர்கள் வைத்திருந்த பதாகைகளும் வாசகங்களும் அறிவார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் நாசூக்காகவும் கண்ணியமாகவும் இருந்தன. ஊர்வலம் செல்கையில் போராட்டக்காரர்களை ஊக்குவிக்கும் வகையில் பேண்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. எல்லோருமே சிரித்துக் கொண்டும் கேலிசெய்து கொண்டும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஒருவர் பத்தடி உயரத்துக்குத் தைக்கப்பட்ட இரட்டை காலர் சட்டையை அணிந்து அனைவரையும் சிரிக்க வைத்தார். அவர் வைத்திருந்த பொம்மையின் முகம் ட்ரம்பைப் போலவே இருந்தது. அது அடிக்கடி அவரைப் போலவே கிறீச்சிட்டு கத்தி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. ‘இன்று எங்களுக்குப் பிறந்த நாள், ஆனால் கொண்டாட்டத்தைவிட இது முக்கியம் என்று வந்திருக்கிறோம்’ என்று இருவர், அனைவரும் அறியும் வகையில் ஆடையில் எழுதியிருந்தனர். நியூஜெர்சியில் பள்ளிக்கூடம் படிக்கும் ஆறு சிறுமிகள் கொலம்பஸ் சர்க்கிள் என்ற இடத்தில் சுரங்கப் பாதையில் இறங்கியிருக்கின்றனர். இன்றைய பேரணிக்கு நாம் மட்டும்தான் வந்திருக்கிறோமா - யாரையும் காணவில்லையே என்று அஞ்சிக்கொண்டே வந்தவர்கள், போராட்டக் களத்தில் நூற்றுக்கணக்காவர்களைப் பார்த்ததும், “அப்பாடா, நாம் மட்டும் தனியாக இல்லை” என்ற நிம்மதி ஏற்பட்டதாகக் குறிப்பிட்டனர்.
இது இப்படியே தொடருமா?
ட்ரம்ப் எதிர்ப்பாளர்களின் வேகம், எண்ணிக்கை ஆகியவற்றைப் பார்க்கும்போது இது இப்படியே தொடருமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. சமீபத்திய சில நிகழ்வுகள் இது குறையாது என்றே உணர்த்துகின்றன. டகோடாவில் கூடிய ‘பைப்-லைன்’ திட்ட எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கை மலைக்க வைத்தது. நன்கொடைகள் ஏழு இலக்க அளவுக்குக் குவிந்தது. அங்கேயே முகாமிட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது. பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர். காவல் துறையினரின் வன்செயல்களுக்குப் பிறகு, கிளர்ச்சிக்காரர்களுக்கான ஆதரவு மேலும் பெருகியது. பைப்-லைன் கட்டுமானத்தைத் தொடங்குமாறு ஜனவரியில் ட்ரம்ப் மீண்டும் ஆணையிட்டார். இப்போது நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை.
புதிய உறவாகும் எதிர்ப்பாளர்கள்
எந்த ஒரு அரசியல் கட்சியும் நேர் நின்று நடத்தும் போராட்டங்கள் இல்லை இவை. எதிர்ப்பாளர்கள் களத்தில்தான் முதல்முறையாக அறிமுகமாகின்றனர். ஆனால் நீண்ட நாள் நண்பர்களைப் போல ஒருவருக்கொருவர் அன்பு காட்டுகின்றனர். இந்த உணர்வை நியூயார்க் நகரில்கூடப் பார்க்க முடியாது. இந்த ஆர்ப்பாட்டங்கள் முறையற்றவை, அராஜகமானவை என்றுகூட பலர் கருதலாம். சப்ரினா டாவர்நைஸ் என்பவர் டைம்ஸ் இதழில் எழுதிய கட்டுரையில் இந்தக் கேள்வியை எழுப்புகிறார். சுதந்திரச் சிந்தனையாளர்களோ தங்களுடைய இத்தகைய எதிர்ப்பு நியாயமானவை என்று கருதுகிறார்கள்.
அதிபரான பிறகு ட்ரம்ப் எடுத்த சில முடிவுகளும் அவருடைய பேச்சுகளும் அவரை ஆதரித்த மிதவாதிகளையே மிரள வைத்திருக் கிறது. அதே சமயம், அவருக்கு எதிராக வரிசை கட்டி நிற்கும் எதிர்ப்புகளைப் பார்த்து, அவரை எதிர்த்த மிதவாதிகளும் அவருக்கு ஆதரவாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் கோமாளித்தனமாக எதிர்ப்பதுடன் அவருக்கு அவமரியாதை செய்யும் விதத்திலும் நடந்துகொள்கின்றனர் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.
கூட்டத்துக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களை குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயகக் கட்சி ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் வரவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அமெரிக்காவில் உள்ள தங்களைப் போன்ற பிற குழுக்கள்தான் ஆதரிக்க வேண்டும் என்பதாகும். அமெரிக்கர்களின் ஆழ்மனதில் நாட்டின் அதிபர் பதவி என்பதும் வெள்ளை மாளிகை என்பதும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது ஆழப் பதிந்திருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தகைய எதிர்ப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் ரசிக்கவில்லை.
டரம்பைத் தொடர்ந்து கேலி செய்வதும் விமர்சிப்பதும் எதிர்ப்பதும் கண்ணியமில்லாதது, நாகரிகமற்ற செயல் என்று கருதுகின்றனர். அதே வேளையில், ட்ரம்ப் எதிர்ப்புக் கூட்டங்களுக்கும் மக்கள் தொடர்ந்து கூடுவார்கள் என்றே தெரிகிறது. தலைமையோ, உரிய அரசியல் வழிகாட்டலோ இல்லாத இந்தக் கூட்டமும் குழுக்களும் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. ஆனால், அரசியல் களத்தில் எல்லோரும் கலக்கத்துடன் கவனித்துவருகின்றனர்!