சிறப்புக் கட்டுரைகள்

தமிழக ஆளுநரின் முடிவு சரியா?

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே மீறுவதாகத்தான் அமையும். எனவே, ஆளுநர் இந்த முறைகளைக் கடைப்பிடிக்காதது வரவேற்புக்குரியது!

தமிழகத்தில், அதிமுகவில் உருவான பிளவின் விளைவாக பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் ஆட்சி அமைக்கும் உரிமை கோரியபோது பலரும் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர். ‘முன்னதாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்ட பன்னீர்செல்வத்துக்கு முதல் வாய்ப்பு அளிக்க வேண்டும். இரண்டு பேருக்குமே பெரும்பான்மையை நிரூபிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்கிற யோசனைகள் அவற்றில் முக்கியமானவை. ஆனால், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்த முடிவுகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, பெரும்பான்மை பலத்தைக் கையில் வைத்திருந்த பழனிசாமிக்கே அழைப்பு விடுத்தார். இந்த முடிவு சரியானதா?

நம்முடையது நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கே நாடாளுமன்றம் என்பது நீதிமன்றத்தின் பரிசீலனைக்கே எப்போதாவதுதான் வரும். அந்த அளவுக்கு சுயேச்சைத் தன்மையுள்ளது. பிராட்லாஃப் - எதிர் - கோசெட் வழக்குப்படி, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உள்விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதே கிடையாது. இந்திய நீதிமன்றங்களும் இந்த மரபைக் கடைப்பிடிக்கின்றன. நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை அவைத் தலைவர் தகுதிநீக்கம் செய்யும் சந்தர்ப்பங்களில் மட்டுமே, பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றங்கள் அதைப் பரிசீலிக்கின்றன. அரசியல் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின்படி மக்களவைத் தலைவர் அல்லது சட்டசபைத் தலைவர் பதவி, நடுவர் மன்றத்துக்கு இணையாகக் கருதப்பட்டு, அவர் எடுக்கும் முடிவுகள் சரியா என்று நீதித் துறை பரிசீலிக்கிறது. இப்படி அபூர்வமான சந்தர்ப்பங்களில் மட்டுமே நீதிமன்றம் குறுக்கிடுகிறது, பிற சந்தர்ப்பங்களில் விலகியே நிற்கிறது.

நாடாளுமன்றக் கொள்கைகள்

நாடாளுமன்ற நடைமுறைகளும் விதிமுறை களும் நம்பிக்கை வாக்கெடுப்பு அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பு தொடர்பிலேயே பேசுகின்றன. முதலமைச்சர் அல்லது பிரதமர் தலைமையிலான அமைச்சரவை மீது அவை நம்பிக்கை வைத்துச் செயல்படுகிறது. அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்று மக்களவையோ, சட்டப்பேரவையோ தீர்மானம் இயற்றினால் அமைச்சரவை பதவி விலக நேர்கிறது. இரண்டு முதலமைச்சர்களில் யாரை முதலமைச்சராக ஏற்பது என்று அவை எப்போதுமே பரிசீலித்ததில்லை. ஒரே சமயத்தில் இருவர் முதலமைச்சராகப் பதவி வகித்ததுகூட உச்ச நீதிமன்றம் தந்த அனுமதியால் ஒரேயொரு முறை ஏற்பட்டது.

உத்தர பிரதேசத்தில் 1998 பிப்ரவரி 21 அன்று முதல்வர் கல்யாண் சிங் தலைமையிலான அரசை ஆளுநர் ரமேஷ் பண்டாரி பதவி நீக்கம் செய்தார். பிறகு, ஜகதம்பிகா பால் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். பதவி நீக்கப்பட்ட கல்யாண் சிங், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவருடைய அரசைக் கலைத்தது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், கல்யாண் சிங் தலைமையிலான அரசை மீண்டும் பதவியில் அமர்த்த உத்தரவிட்டது. உடனே, இன்னொரு முதலமைச்சர் ஜகதம்பிகா பால், உச்ச நீதிமன்றத்திடம் மனு அளித்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.எம்.புஞ்சி பிப்ரவரி 26-ல் பிறப்பித்த உத்தரவில், இரு முதல்வர்களும் பேரவையில் இருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பஞ்சாயத்து ராஜ் கேலி

இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, கல்யாண் சிங் வென்றார். அரசியல் சட்டத்தின் 142-வது பிரிவு அளித்த அதிகாரத்தின் கீழ் அந்த உத்தரவைத் தலைமை நீதிபதி புஞ்சி பிறப்பித்தார். அதற்கு முன்னர் இப்படியொரு முன்னுதாரணம் ஏற்பட்டதில்லை. ஆனால், அந்த உத்தரவு அரசியல் சட்ட விளக்கத்துக்குக் கொடுத்த புதிய பரிமாணம் குறித்து, சட்ட மாணவர்களும் வழக்கறிஞர்களும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. சில குறும்பர்கள் அதை ‘பஞ்சாயத்து ராஜ்’ என்ற வார்த்தைக்கு இணையாக நீதிபதியின் பெயரைச் சேர்த்து ‘புஞ்சாயத்து ராஜ்’ என்று கேலியாகக் குறிப்பிட்டார்கள்.

தமிழகத்தில் முதலமைச்சராகப் பதவி வகித்த பன்னீர்செல்வம், தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்தார்கள் என்று கூறியதால், அவரையும் எடப்பாடி பழனிசாமியையும் ஒரே சமயத்தில் பேரவையில் அமர்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிலர் யோசனை தெரிவித்தார்கள். உத்தர பிரதேச சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொள்ளலாம் என்றார்கள்.

சட்ட முன்னுதாரணங்களைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்கு நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய ‘மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ்’ உரையாடலிலிருந்தே மேற்கோள் காட்டியிருக்கிறார்கள் இங்கிலாந்தில். ஒரு சட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக டென்னிங் பிரபுவுக்கும் ரஸ்ஸல் பிரபுவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிடால் - எதிர் - கேஸ்டிங்ஸ் லிமிடெட் வழக்கு அது. மேல் முறையீட்டு நீதிமன்றத்தில், டென்னிங் பிரபு வழங்கிய தீர்ப்பை ரஸ்ஸல் பிரபு நிராகரித்தார். அவர்தான் ‘மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ்’ நாடக வசனத்தை மேற்கோள் காட்டினார். தவறான ஒரு தீர்ப்பு கூறப்பட்டுவிட்டால் அது பிற்காலத்தில் முன்னுதாரணமாக சுட்டிக்காட்டப்படும் வாய்ப்பு இருப்பதாக, போர்ஷியா என்கிற கதா பாத்திரம் எச்சரிக்கும். இரண்டு முதல்வர்கள் அதே அவையில் நம்பிக்கை கோரலாம் என்ற தீர்ப்பு அப்படிப்பட்ட தவறான முன்னுதாரணமாகிவிட்டது.

‘தமிழ்நாட்டில் உள்கட்சிப் பூசலைத் தீர்க்க இருவரையுமே முதல்வர்களாகப் பதவியேற்க வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியிருக்கலாம்; இடைக்கால முதலமைச் சராகப் பதவி வகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட வரையே முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க வைத்துப் பிறகு வாக்கெடுப்பு நடத்தியிருக்கலாம்’ என்ற யோசனைகள் சரியானதல்ல. இவ்விரண்டுமே அரசியல் சட்டரீதியாக முறையற்ற செயலாகவே கண்டிக்கப்பட்டிருக்கும். முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்தார், அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரையில் பதவியில் நீடிக்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஒருவருடைய ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அதை மறுபரிசீலனை செய்ய சட்டத்தில் வழியே இல்லை.

ரகசிய வாக்கெடுப்பு

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த சதீஷ் சந்திரா ராஜிநாமா தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “ஒருமுறை ஏற்றுக்கொள்ளப்பட்ட ராஜிநாமா திரும்பப் பெற முடியாது’’ என்று அதை விசாரித்த ‘அரசியல் சட்ட அமர்வு’ கூறிவிட்டது. இடைக்கால முதல்வராகிவிட்டவரை மீண்டும் அழைத்து, முதல்வராகப் பதவியேற்க வைத்தால்தான் அவர் நீடிக்க முடியும். அதுகூட பேரவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதை அவரால் காட்ட முடியாவிட்டால் அவருடன் இருப்பவர்கள் பதவியிழந்துவிடுவார்கள். எனவே, போதிய ஆதரவு இல்லாதவரை மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவைப்பது விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடியும்.

அதேபோல, சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் பலரும் முன்வைத்த இன்னொரு யோசனை.

இது கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே மீறுவதாகத்தான் அமையும். பேரவையில் வாக்கெடுப்பு என்பது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலானது மட்டுமல்ல; பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியது. இப்படியான ரகசிய வாக்கெடுப்பு கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானதாகவே அமையும். எனவே, ஆளுநர் இந்த முறைகளைக் கடைப்பிடிக்காதது வரவேற்புக்குரியது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

சஞ்சய் ஹெக்டே உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் © ‘தி இந்து’ ஆங்கிலம்

SCROLL FOR NEXT