தமிழில் எழுதும் முறையில் விசித்திரமான சில தவறுகள் சமீப காலத்தில் புகுந்துள்ளன. ‘ழ’ என்னும் எழுத்தைச் சரியாக உச்சரிக்க இயலாமல் ‘ல’ என்றோ ‘ள’ என்றோ உச்சரிப்பது பலருக்கு வழக்கம். பளம், களுவு, கிளிஞ்சிது என்றெல்லாம் சொல்வதைப் பார்த்திருப்போம். ‘ழ’ மட்டுமின்றி, ‘ல’, ‘ள’ வேறுபாடுகளும் பலரிடத்தில் அழிந்துவிடுகின்றன.
மக்களிடையே புழங்கிவரும் பேச்சு வழக்கில் எத்தனையோ மாறுபட்ட வழக்குகளும் வண்ணங்களும் சில பிழைகளும் இருப்பது இயல்புதான். ஆனால், செய்தி வாசிப்பவர்கள், நிகழ்ச்சித் தொகுப் பாளர்கள் ஆகியோரிடத்திலும் உச்சரிப்புப் பிறழ்வுகள் இருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. சற்று மெனக்கெட்டால் சரிசெய்துவிடக்கூடிய குறைபாடு இது.
இந்தச் சிக்கல் இப்போது புதிய வடிவம் எடுத்துள்ளது. ‘ழ’ என்னும் எழுத்தை ‘ள’ அல்லது ‘ல’ என உச்சரித்த நிலை மாறி, ள என்று வர வேண்டிய இடங்களில் ‘ழ’ எனச் சிலர் உச்சரிக்கிறார்கள். களிப்பு என்பதைக் கழிப்பு என்றும், ஒளிந்துகொள்ளுதல் என்பதை ஒழிந்துகொள்ளுதல் என்றும் சொல்கிறார்கள். பேச்சில் மட்டுமின்றி, எழுத்திலும் இது புகுந்துவிடுகிறது. பல உதாரணங்கள் அன்றாடம் கண்ணில் தட்டுப்படுகின்றன. சமீபத்தில், மறு வெளியீடு செய்யப்பட்ட ‘பாட்ஷா’ திரைப்படத்துக்கான விளம்பரத்தில் ‘புதிய பொழிவுடன்’ என்னும் தொடர் இடம்பெற்றிருந்தது இதற்கு ஒரு சான்று.
முன்பெல்லாம் ஒரு சொல் அல்லது தொடர் சரியா, தவறா என்பதை அறிய, குறிப்பிட்ட துறையில் விவரம் அறிந்த யாரையேனும் கேட்பது அல்லது அகராதிகளைப் பார்ப்பது என்னும் பழக்கம் இருந்தது. இப்போது எதற்கும் கூகுள் தேடுபொறியை நாடுகிறோம். ஏற்கெனவே இணையத்தில் இருக்கும் தரவுகளின் அடிப்படையில்தான் கூகுள் விடைகளை அளிக்கும். ஒளிந்துகொள்ளுதல் என்பதை ஒழிந்துகொள்ளுதல் என்று பலரும் எழுதிவந்தால், இந்தத் தரவுகள்தான் அதிகம் காணப்படும். பொலிவு, பொழிவு - எது சரி என்று கூகுளைக் கேட்டால், அது ‘பாட்ஷா’ பட விளம்பரத்தைக் காட்டக்கூடும் ‘ரஜினியே சொல்லிவிட்டார்’என்று சிலர் அதையே சரி என்று நம்பவும்கூடும்.
முறையான, தரப்படுத்தப்பட்ட தமிழைக் காண்பதற்கான, நம்பகமான தரவுகள் குறைவாக இருப்பதுதான் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம். ஆங்கிலத்துக்குத் தரமான, நம்பகமான அகராதிகள், சரிபார்க்கும் தரவுகள் பல உள்ளன. தமிழில் அபிதான சிந்தாமணி, தமிழ் லெக்ஸிகன், தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அகராதி, கழகத் தமிழ்க் கையகராதி, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி போன்ற சில நம்பகமான நூல்கள் இதுபோன்ற ஐயங்களைத் தீர்த்துவைக்கும். இவற்றில் பெரும்பாலானவை இணையத்திலும் கிடைக்கின்றன.
தேடுபொறியில் ஒரு சொல்லை மட்டும் உள்ளிட்டால், பல விதமான தரவுகளையும் அது நம் முன் கொட்டும். எது நம்பகமானது என்பதை அது சொல்லாது. இணையத்தில் தேடும்போது, முறையான ஆதாரங்களை நாடிச் செல்ல வேண்டும். அல்லது தமிழை நன்கு அறிந்து, அதைக் கையாளும் எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பார்த்துச் சரியான பயன்பாடுகளை அறிய வேண்டும். எழுதப்பட்டு, அச்சிடப்படுவதெல்லாம் ஆதாரங்களாகிவிடாது என்பதைப் புரிந்துகொண்டு இதை அணுக வேண்டும்.
- அரவிந்தன்,
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in