வடமொழிச் சொற்களான சூர்யன், வீர்யம், கார்யம் ஆகியவை சூரியன், வீரியம், காரியம் எனத் தமிழ் ஒலிப் பண்புக்கேற்ப எழுதப்படு வதைப் பார்த்தோம். ப்ரகாசம் என்பது பிரகாசமாகிறது. இதே அடிப்படை யில் பிரச்ன என்பது பிரச்சினை என எழுதப்படுவதையும் பார்த்தோம்.
இதன்படியே ஆச்சர்யம் என்னும் சொல் ஆச்சரியம் என இயல்பாக மாறுகிறது. மூல மொழிக்கு அருகில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, ஆச்சர்யம் என எழுதுவது சூர்யன், ப்ரகாசம் என்றெல்லாம் எழுதுவதற்கு ஒப்பானது.
ஆனால், இதே அளவுகோல் எல்லாச் சொற்களுக்கும் பொருந்துவதில்லை. உதாரணமாக, அதிர்ஷ்டம் என்னும் சொல். அ-த்ருஷ்டம் என்பது அத்ருஷ்டம் ஆகிறது. த்ருஷ்ட என்பது த்ருஷ்டியோடு தொடர்புடைய சொல். பார்வை, காட்சி என இது பொருள்படும். எதன் காரணத்தை நம்மால் பார்க்க இயலாதோ அதுவே அ-த்ருஷ்டம் எனப்படுகிறது. அது நன்மையாக இருந்தால் அத்ருஷ்டம், தீமையாக அமைந்தால் துர்-அ-த்ருஷ்டம்.
த்ருஷ்டியைத் தமிழில் திருஷ்டி என்கிறோம். எனவே, த்ருஷ்ட என்பதை திருஷ்டம் என்று சொல்ல வேண்டும். இதன்படி, அத்ருஷ்டம் என்பதை அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், தமிழில் அதிர்ஷ்டம் என்று பரவலாக வழங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளவும் பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?
வடமொழிச் சொல்லான அத்ருஷ்டம் என்பதைத் தமிழில் அதிர்ஷ்டம் என்று சொல்லிப் பழகியதுதான் இதற்குக் காரணம் எனத் தோன்றுகிறது. பிற மொழிகளிலிருந்து வரும் சொற்கள் எழுத்து வழியாக வரும்போது, அவற்றின் மூல வடிவிலேயே வரும். பேச்சு வழியாக வரும்போது ஒலித் திரிபு ஏற்பட வாய்ப்புள்ளது. த்ருஷ்டி என்பது கிட்டத்தட்ட அதே ஒலியுடன் பேச்சுத் தமிழில் வழங்கப்படுகிறது. அத்ருஷ்டம் என்பது பெரும்பாலான தமிழர்களின் பேச்சு வழக்கில் அதிர்ஷ்டம் எனவும் அதிஸ்டம் என்பதாகவும் மாறி ஒலிக்கிறது. இதை அடியொற்றியே எழுத்து வழக்கிலும் அதிர்ஷ்டம் என்பது நிலைபெற்றிருக்க வேண்டும்.
ஆச்சர்யம், அத்ருஷ்டம் ஆகிய இரண்டு சொற்களில் முன்னது தமிழின் ஒலிப் பண்புக்கு ஏற்ப ஆச்சரியம் என ஆகிறது. அதே அளவுகோல் சற்றே நெகிழ்ந்து அதிர்ஷ்டமாக மாற்றுகிறது. அத்ருஷ்டம் என்பது பேசப்படும் விதம்தான் இதற்கு முக்கியக் காரணமாக இருக்க முடியும். ஆச்சர்யம் என்பதை அப்படியே எழுத இதுபோன்ற காரணம் எதுவும் இல்லை.
பிற மொழிகளிலிருந்து வரும் புதிய சொற்கள் தொடர்பாக இத்தகைய சிக்கல்கள் எழலாம். ஆனால், வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்துள்ள சொற்கள் எதுவும் நமக்குப் புதிதல்ல. எனவே, அவற்றை எப்படி எழுதுவது என்பதை இன்னமும் தரப்படுத்தாமல் இருப்பதில் எந்த நியாயமும் இல்லை.
இதில் உள்ள வேறு சில நுட்பங்களை வரும் வாரத்தில் பார்க்கலாம்.
- அரவிந்தன், aravindan.di@thehindutamil.co.in