ஒரு பேச்சாளர் எப்படி காலத்துக்கும் இளைஞர்களுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணராகி இருக்கிறார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். மேடைகளில் மணிக்கணக்கில் பேசவல்ல சுப.வீ., ‘வாட்ஸ்அப்’பில் ஒரு நிமிஷப் பேச்சிலும் முத்திரை பதிக்கிறார்.
ஒரு நிமிஷப் பேச்சு வெற்றி எதை உணர்த்துகிறது?
யாரிடம் பேசுகிறோம் என்று அறிந்து பேசினால், பேச்சுக் கலைக்கு மவுசு குறையவே குறையாது என்பதைத்தான் சொல்கிறது. வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘அவை அறிதல்’ என்ற அதிகாரத்தில் எங்கே, யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே?
மாணவர் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
வியக்க வைத்த போராட்டம் அது. சமூக வலைத்தளங் களின் மூலம் மாணவர்களை, இளைஞர்களை கூட்டிவி டுவது எளிதாக இருக்கலாம். ஆனால், கூடிய அந்தக் கூட்டம் இறுதிநாள் வரை கட்டுப்கோப்புடன் இருந்தது என்பதும், கொண்ட கொள்கையில் மிக உறுதியாக இருந்தது என்பதும்தான் பாராட்டைத் தேடித்தந்தது. சமூக அக்கறையோடு மேலும் பல பிரச்சினைகளை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும். ஆனால், தங்களுக்குள் தலைமையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளாததும், ஆதரவு தெரிவிக்க, பேச்சு நடத்தவந்த அரசியல் தலைவர்களைத் அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பியதும் சரியான வழிமுறை அல்ல.
கல்லூரிகள் இன்றைக்கு அரசியலற்றவையாக மாறிவருகின்றனவே?
முதலில், கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்களை நடத்த வேண்டும். மாணவர்கள் தேர்தல்களில் மட்டுமல்ல; சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில்கூடத்தான் தவறுகள் நடக்கின்றன. தவறுகளைத் திருத்த வேண்டுமே தவிர, தேர்தல்களை முடக்கக் கூடாது. சாதி, மதங்களைத் தாண்டி மாணவர்கள் ஜனநாயகப் படியில் ஏற அது வழிவகுக்கும்.
இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் புழங்குகிறார்களே?
நான் சமூக வலைத்தளங்களில் இரண்டு நிலைகளைப் பார்க்கிறேன். ஒன்று மிக அருமையான புத்திகூர்மையான, தர்க்கங்கள் நிறைந்த வாதங்கள், செய்திகள் இடம்பெறுகின்றன. இன்னொரு பக்கத்தில் நம்பகமற்ற செய்திகளையும், அருவெறுப்பான நடையையும் பார்க்க முடிகிறது. என்றைக்கும் எந்த ஒன்றிலும் வைரங்கள் மட்டுமே வந்து விழும் என்று சொல்ல முடியாது, குப்பைகளும் சேர்ந்துதான் வந்துவிழும். வைரங்களைப் பொறுக்கிக்கொள்வது அவரவர் திறன், திறமை, தெளிவு சார்ந்தது.
தமிழ் இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய மூன்று நூல்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?
‘பெரியார் அன்றும் இன்றும்’ தொகுப்பு (விடியல் வெளியீடு), முரசொலி மாறனின் ‘திராவிட இயக்க வரலாறு’ (திமுக வெளியீடு), அம்பேத்கரின் ‘நான் இந்துவாக சாக மாட்டேன்’ (தலித் முரசு வெளியீடு).