அவதூறு வழக்கொன்றில் ஆஜராக திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு வரவிருந்த தி.மு.க பொருளாளர் ஸ்டாலினை வரவேற்க அவரது கட்சி வக்கீல்கள் ஃப்ளக்ஸ் போர்டுகளை வைத்திருந்ததாகவும் அதை அ.தி.மு.க. வக்கீல்கள் அகற்றியதாகவும் அதையொட்டி நடந்த கலவரங்களுக்கும், காவல்துறையினரின் தடியடிப் பிரயோகத்துக்கும் எதிர்வினையாக மாவட்ட தி.மு.கவினர் வாய்தா தேதியன்று நீதிமன்றம் முன் பெருந்திரளாகக் குழுமி, அ.தி.மு.க-வினர் வைத்த ஃப்ளக்ஸ் போர்டுகளை அகற்ற முனைந்ததாகவும் செய்திகள் வந்தன.
நீதிமன்றங்களின் முன்னே…
குற்றம்சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் சம்மன் பெற்று நீதிமன்றத்துக்கு ஆஜராகும் அரசியல்வாதிகள் வெற்றிச் சின்னமாக இரு விரல்களை உயர்த்திக் காட்சிதருவதும், அவர்களை வரவேற்க அவர்களது கட்சி வக்கீல்கள் சீருடையுடன் பார்-கவுன்சில் விதிகளுக்குப் புறம்பாகப் பொதுவெளியில் நிற்பதும் கேலிக்கூத்தான செயல்களே. ஃப்ளக்ஸ் போர்டுகளும் கட்-அவுட்டுகளும் வைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை வரவேற்பது அவலங்களின் உச்சக்கட்டம். குற்றம்சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் நீதிமன்ற வழக்குகளில் தாங்கள் ஆஜராவதைத் திருவிழாக்கள்போல் நடத்த முற்படுவதும், அதையொட்டி நீதிமன்றங்களில் தள்ளுமுள்ளுகள் ஏற்படுவதும் இரு கழகங்களின் ஆட்சியில் பெருகிவிட்டன. தே.மு.தி.க. தலைவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராகியபோது ஏற்பட்ட சம்பவங்களில், அவர்மீது ஆளுங்கட்சி நியமித்த அரசு வக்கீல் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை செய்ய முயற்சித்ததாக வழக்கு போடப்பட்டதை மறந்துவிட முடியாது.
குடும்ப நிகழ்ச்சிகளிலும்…
ப்ளக்ஸ், விளம்பரத் தட்டிகள் வைக்கும் கலாச்சாரம் தமிழகத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காதுகுத்தல், பூப்பெய்தல், புதுமனை புகுதல், இருமுடி கட்டுதல், திருமணங்கள், நீத்தார் நினைவு என்று அனைத்து வைபவங்களுக்கும் பட்டிதொட்டிகளிலெல்லாம் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகள் கணக்கிலடங்காது. அரசியல் கட்சிகளின் விளம்பர விபரீதங்களைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டதே குடும்ப விழாக்களிலும் பெருகிவிட்ட விளம்பரங்கள். 2001 தேர்தலுக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவராயிருந்த கருணாநிதி, மெரினா கடற்கரையில் காற்று வாங்கச் சென்ற மக்களிடம் எச்சரிக்கையொன்றை விடுத்தார். “கொஞ்சம் ஏமாந்தால் உங்கள் முதுகிலும் அம்மையார் போஸ்டர் ஒட்டப்படும், ஜாக்கிரதை!”
இந்தக் கலாச்சாரத்தின் தோற்றம்
இந்த கட்-அவுட், ப்ளெக்ஸ் போர்டு கலாச்சாரம் எப்படி உருவானது? ஐம்பதுகளிலும், அறுபதுகளி லும் அடுப்புக்கரியிலும், சாலை போடும் தாரிலும் எழுதிப் பொதுஇடங்களிலுள்ள சுவர்களில் கட்சிப் பிரச்சாரத்துக்கு அரசியல் கட்சிகள் களம் அமைத்தன. சிறிய அளவில் (20"x30") மர அச்சுக்களைக் கொண்டு தயாரித்த சுவரொட்டிகளுடன் பிரச்சாரப் பணி முடிந்தது. மிஞ்சிப்போனால் வர்ணப் பொடிகளில் வஜ்ரத்தைச் சேர்த்து சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
தடுக்கும் சட்டம்
இதையொட்டி 1959-ம் வருடம் தமிழ்நாடு திறந்த வெளிகள் (உருக்குலைப்பு தடுக்கும்) சட்டம் காங்கி ரஸ் அரசால் இயற்றப்பட்டது. பொதுஇடங்களிலும், மோட்டார் வாகனங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்படு வதைத் தடுக்கவும், குற்றமிழைப்போரைப் பிடியாணை யின்றிக் காவல்துறையினர் கைதுசெய்யவும், மீறுபவர்களுக்கு ஓராண்டுவரை சிறையில் தள்ளவும் சட்டம் வழிவகுத்தது. ஆளும் காங்கிரசை எதிர்த்துப் பொதுஇடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்த தி.மு.க-வினரையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும் தடுக்கவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஒப்புதலுடன் சுவரொட்டிகள்
1971-ல் கலைஞர் முதலமைச்சரான பின் லித்தோ அச்சகங்களில் வர்ணக் கலவைகளில் அச்சடிக்கப்பட்டு, அவரது உருவம் தாங்கிய மாபெரும் சுவரொட்டிகள் தமிழகத்தின் சுவர்களை அடிக்கடி ஆக்கிரமித்தன. எதிர்க்கட்சிகளின் சுவரொட்டிகளும், சினிமா விளம்பரங்களும் நகரத்தின் சுவர்களை அடைக்க முயன்றபோது, சுவரொட்டிகளுக்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி உருவாக்கியது. கட்டணம் செலுத்திவிட்டு மாநகராட்சி முத்திரையுடன் மட்டுமே சுவரொட்டிகளை ஒட்டலாமென்ற விதி உருவானது. ஒப்புதலற்ற சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டன.
விளம்பர ராஜ்ஜியம்
இதற்கிடையில் அரசியல்வாதிகளின் சொந்தங்களும், பினாமிகளும் விளம்பர ஏஜென்சிகளை உருவாக்கினர். அதன் மூலம் ராட்சத வடிவுள்ள இரும்பினாலான விளம்பரப் பலகைகளை (ஹோர்டிங்ஸ்) பொதுஇடங்களில் அமைத்து, பெரும் வருவாயை ஈட்டினர். நாளடைவில் நெடுஞ்சாலைகளின் இரு புறங்களையும் ஆக்கிரமித்த பலகைகளும், கட்-அவுட்டுகளும் சென்னை நகரத்தின் வானத்தையே மறைத்தன. விளம்பரப் பலகைகளுக்கு உரிமம் வழங்குவது வருவாய்த்துறையா மாநகராட்சியா என்ற சட்டச் சிக்கல்களுக்கிடையே விளம்பர ஏஜென்சிகள் குளிர்காய்ந்தன. பொதுஇடங்களில் பலகை வைத்தால்தானே பிரச்சினை வருகிறதென்று சாலைகளையொட்டிய தனியார் மனைகளிலும், கட்டடங்களின் மீதும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டன. விளம்பரப் பலகைகளில் பொருத்தப்பட்ட நியான் விளக்குகளின் வெளிச்சம் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பியது. போக்குவரத்துக் காவல்துறையினர் அத்தகைய விளம்பரப் பலகைகளுக்கு விதித்த தடை, நீதிமன்றத்தின் உத்தரவுகளால் முடக்கப்பட்டது.
அண்ணா சாலையிலுள்ள தர்கா அருகேயிருந்த சிக்னல் விளக்குகள்கூட நடைபாதையில் நட்டு வைத்த விளம்பரப் பலகைகளால் மறைக்கப்பட்டன. பிறகு பெரிய மனதுடன் விளம்பர ஏஜென்சிகாரர் விளம்பரப் பலகைக்கு இடையில் துவாரம் அமைத்து அதன் வழியாக சிக்னல் விளக்குகளைப் பார்க்க அனுமதித்த செயலிலிருந்து அவர்கள் ராஜ்ஜியம் எவ்வளவு கொடிகட்டிப் பறந்தது என்பதைத் தெரி்ந்துகொள்ளலாம்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே விளம்பரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளதாக அப்பலகைகளின் அடியில் எழுதப்பட்டிருந்ததைப் படித்த மக்களின் கோபம் நீதிமன்றத்தின் மீது திரும்பியது. ஆபாச விளம்பரங்களை எதிர்த்து மகளிர் அமைப்புகள் நடத்திய போராட்டங்கள், சட்டம்-ஒழுங்கு என்ற போர்வையில் தடுக்கப்பட்டன. விளம்பர ஏஜென்சிகளும் அரசியல்வாதிகளின் தொடர் ஆசிர்வாதம் பெற விழைந்து தலைவர்களின் கட்-அவுட்டுகளைப் பொதுஇடங்களில் நிறுவி, தங்கள் வருமானத்தைப் பன்மடங்கு பெருக்கிக்கொண்டனர். முதல் நாள் சினிமா ரிலீஸ் அன்று ரசிகர்கள் தங்களது இதய தெய்வங்களுக்கு கட்-அவுட்டுகள் வைத்து பாலபிஷேகமும், பீரபிஷேகமும் செய்து நேர்த்திக் கடன்களை முடித்துக்கொண்டதைக் கண்ணுற்ற வெளி மாநிலத்தினர் அதன் பிறகு தமிழர்களை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தனர்.
சட்டமும் வழக்குகளும்
1998-ம் ஆண்டு ஒரு அவசர சட்டம் மூலம் சென்னை மாநகராட்சி சட்டம் திருத்தப்பட்டு, விளம்பரப் பலகைகள் வைப்பதை ஒழுங்குபடுத்தவும், அதற்குரிய கட்டணங்களை வசூலிக்கவும் விதிகள் உருவாக்கப்பட்டன. புதிய விதிகள் பொதுஇடங்களிலும், தனியார் இடங்களிலும் உள்ள விளம்பரப் பலகைகளைக் கட்டுப்படுத்துவதாய் அமைந்தன. அந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து, பல விளம்பர ஏஜென்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துத் தடையுத்தரவுகளைப் பெற்றன. தனியாருக்கு சொந்தமான மனைகளில் விளம்பரப்படுத்துவதை அரசு தடுக்க முடியாதென்று வாதாடப்பட்டது. ஆனால், தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அம்மனுக்களை 2007-ல் தள்ளுபடிசெய்து, சட்டத்தைக் காப்பாற்றியது. விளம்பரப் பலகைகளின் சதுரஅளவு, செலுத்தப்பட வேண்டிய கட்டணம், விளம்பரப் பலகை வைக்கக்கூடிய இடங்கள் ஆகியவற்றைப் பற்றி விதிகள் வரையறுத்தன
சென்னை நகருக்கு வெளியே அமைந்த விமான நிலையத்தையொட்டி செல்லும் நெடுஞ்சாலை எண் 45-ன் இருபுறங்களிலும் மாபெரும் விளம்பரப் பலகைகள் கண்ணைக் கூச வைக்கும் ஒளிவிளக்குகளுடன் நிறுவப்பட்டன. பல்லாவரம் மற்றும் புனித தோமையர் மலை கன்டோன்மென்டுகளிடம் அனுமதிபெற்று வைத்துள்ளதாக விளம்பர ஏஜென்சிகள் கூறிவந்தன. விமானம் இறங்கும் பாதையும், நெடுஞ்சாலையும் அருகருகில் இருப்பதால் விமான ஓட்டிகள் பலர் இரவு நேரத்தில் விமானங்களைத் தரையிறக்கும்போது குழப்பம் ஏற்படுவதாகக் கூறிய பின்னர் தேசிய விமான நிலையங்களின் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் விளம்பரப் பலகைகளை அகற்றக் கோரி வழக்கொன்றைத் தொடுத்தது. அதை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விமானப் பயணிகளின் பாதுகாப்பு கருதி விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்றவும், விளம்பரப் பலகைகளுக்கு அளித்துவந்த மின் இணைப்புகளைத் துண்டிக்கவும் உத்தரவிட்டது. இவ்விரு தீர்ப்புகளுக்கும் எதிராக விளம்பர ஏஜென்சிகள் போட்ட மேல்முறையீடுகளை உச்ச நீதிமன்றம் 2008-ல் தள்ளுபடி செய்தது. விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்ட பின்னரே சென்னை நகரச் சாலைகள் விரிவாகத் தோற்றமளித்ததுடன் இருபுறங்களிலும் இருந்த கட்டடங்களும் கண்ணுக்குப் புலப்பட்டன.
சாலைகளையும் நடைபாதைகளையும் மறைத்த விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டது மக்களின் பேராதரவைப் பெற்றது. என்ன ஒரு வருத்தமென்றால் அதில் குடியிருந்த காகங்கள் தங்கள் கூடுகளை இழந்தன. அதன் அடியில் கோணிப்பை குடிசைகள் அமைத்து வாழ்ந்த ஏழைகளுக்கு வானமே கூரையாகிவிட்டது.
நீர்த்துப்போன சட்டம்
இவ்விரு தீர்ப்புகளும் விளம்பர ஏஜென்சிகளை மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. தங்கள் படங்களை வீதிகள்தோறும் தினசரி கண்டு மகிழ்ந்த சுயமோகத்துக்கு வந்த முடிவு அவர்களை யோசிக்க வைத்த பின்னர் விளைந்ததே ஒரு புதிய அரசாணை. அரசியல் கட்சிகள் விழா நடத்தும்போது மூன்று நாட்களுக்கு டிஜிட்டல் பேனர்கள் வைத்துக்கொள்ளவும், பின்னர் இரண்டு நாட்களுக்குள் அவற்றை அகற்றவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல்துறை ஆணையர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இவ்வுத்தரவு எந்தச் சட்டத்தின் அடிப்படையில் போடப்பட்டதென்பதை அரசு விளக்கவில்லை. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் போட்ட உத்தரவுகளை நீர்த்துப்போகச் செய்வதே இவ்வுத்தரவின் உண்மை நோக்கம். புதிய ஃப்ளக்ஸ் போர்டுகளை அரசியல் கட்சிகள் ஐந்து நாட்களுக்குப் பொதுஇடங்களில் வைத்துக்கொள்ள அனுமதியளிக்கும் உத்தரவை எதிர்த்து ‘டிராபிக்’ ராமசாமி போட்ட பொதுநல வழக்கின் விவரம் தெரியவில்லை. தமிழகமெங்கும் ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்கும் கலாச்சாரம் மீண்டும் தழைக்கவும் அரசு அதிகாரிகள் தங்கள் விருப்பத்துக்கேற்ப அனுமதி வழங்குவதும் ஆளுங்கட்சிக்கு விரோதமான குழுக்கள், கட்சிகளின் ஃப்ளக்ஸ் போர்டுகளை வெட்டிச்சாய்ப்பதும் தினசரி போக்காகிவிட்டது.
வருக! வருக!
கட்சியின் பொதுச்செயலாளர் ஒருவர் தனது கட்சி அலுவலகத்துக்கு வருவதை வரவேற்று நூற்றுக் கணக்கில் ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்கப்படும் கூத்து இங்கு மட்டுமே நடைபெறும். முதலமைச்சர் வீட்டிலிருந்து புறப்பட்டுக் கோட்டையிலுள்ள தனது அலுவலகத்துக்குச் செல்லும் பாதைகளின் இரு பக்கங்களிலும் தொடர்ந்து வெளிப்படும் ஃப்ளக்ஸ் போர்டுகள் வாகன ஓட்டிகளுக்குக் கவனச் சிதைவை ஏற்படுத்துவதோடு அவை நடைபாதையிலே ஊன்றப்படுவதால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய அவலமும் தினசரி நிகழ்வாகிவிட்டது. அந்தப் பலகைகளை வைப்பதற்கு யார் அனுமதி தருகிறார்கள் என்றோ, அவற்றின் பயன்பாட்டுக்குப் பிறகு அக்குப்பைகளை எங்கு கொண்டுசேர்க்கிறார்களென்றோ யாருக்கும் தெரியாது. பல கோடி ரூபாய் செலவழித்து வைக்கப்படும் ஃப்ளக்ஸ் போர்டுகள் யாரைத் திருப்திப்படுத்துகின்றன என்பதும் புரியவில்லை.
காவல்துறையின் மௌனம்
1959-ம் வருடத்திய தமிழ்நாடு திறந்தவெளிகள் (உருக்குலைப்பு தடுக்கும்) சட்டத்தின்கீழ் ஏன் இதுவரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. கூண்டுக்கிளியாகிவிட்ட காவல்துறையை விடுவித்து, அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட ஏற்பாடொன்றைச் செய்ய முற்படுவதே இன்றைய தேவை.
நீதிபதிகள் தினசரி பயணிக்கும் பாதையிலேயே இந்தச் சட்டவிரோதக் குற்றங்கள் இழைக்கப்படுவதைக் கண்டும் அவர்கள் காணாதிருப்பதுபோல் இருந்துவிடாமல் சென்னை உயர் நீதிமன்றம், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நலன்கள் கருதி இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு 1959-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் காவல்துறையினரைத் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட முன்வருமா?
நீதிமன்றங்கள் குறுக்கிடுவதைத் தவிர்த்துச் சட்டத்தை நிர்வகிப்பவர்களே தங்களது சுயமோகங்களைக் களைந்து இந்த கட்-அவுட் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டுவார்களா?
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்
(குறள் 979) என்ற வள்ளுவன் வாக்குப்படி வாழ முற்படுவார்களா?