நம் ஊரில் கோழி திருடி மாட்டிக்கொண்ட திருடனை மரத்தில் கட்டிவைத்து எம தர்ம அடி கொடுப்பதைப் பார்த்திருக்கிறோம். போலீஸ் வந்துதான் திருடனைக் காப்பாற்ற வேண்டியிருக்கும்.மேற்கத்திய நாடுகளில் மிகப் பெரிய கொள்ளையர்கள், தொடர் கொலைகாரர்கள் ஒரு கட்டத்தில் கதாநாயகர் அந்தஸ்தைப் பெற்றுவிடுவார்கள்.
மாபெரும் ரயில் கொள்ளை
அமெரிக்காவின் பிரபலமான தொடர்-கொலைகாரனான (சீரியல் கில்லர்) சார்லஸ் மேன்ஸன் 60-களின் இறுதியில் பல கொலைகள் செய்தான். அவனது கும்பலால் கொல்லப்பட்டவர்களில் திரைப்பட இயக்குநர் ரோமன் போலன்ஸ்கியின் மனைவி ஷரோன் டேட்டும் ஒருவர். தற்போது சிறையில் இருக்கும் சார்லஸ் மேன்ஸனுக்கு வயது, 79. இன்றும் அந்த மனிதருக்கு ரசிகர்கள் உண்டு. சார்லஸை, 25 வயது நிரம்பிய ஒரு பெண் காதலிக்கிறாளாம். அடிக்கடி சார்லஸைச் சிறையில் சந்தித்துத் தனது காதலை வளர்த்துக்கொள்கிறாள் அந்தப் பெண். அதேபோல், பிரிட்டனில் புகழ்பெற்ற கொள்ளையர்களில் ஒருவரான ரோனி பிக்ஸ் கடந்த புதன் அன்று மரணமடைந்தார். இந்தச் செய்தியை ‘தி டெய்லி மெயில்’ உள்ளிட்ட பிரிட்டனின் பல நாளேடுகள் வெளியிட்டிருக்கின்றன. பலர் ஆன்லைனில் ஆர். ஐ. பி. (RIP – Rest In Peace) சொல்லியிருக்கின்றனர். மனிதர் சாமானியக் கொள்ளையர் அல்ல. ஆங்கிலக் கனவான்கள் ஆச்சரியத்துடன் புகழ்பாடும் மாபெரும் ரயில் கொள்ளை (தி கிரேட் ட்ரெய்ன் ராபரி) என்ற ரயில் கொள்ளைச் சம்பவத்தில் முக்கியப் பங்கேற்றவர். 15 பேர் கொண்ட எமகாதகக் கொள்ளைக் குழு அது. 1963-ல் பிரிட்டனின் கிளாஸ்கோ நகரத்திலிருந்து தலைநகர் லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த ரயிலை செடிங்டன் என்ற இடத்தில் நிறுத்தி, அதிலிருந்த ஒரு பெருந்தொகையை, இந்தப் பெருந்தகைகள் கொள்ளையடித்துச் சென்றனர். பணத்தின் இன்றைய மதிப்பு ரூ. 467 கோடி. சம்பவத்தை முடித்தவுடன் சங்கத்தைக் கலைத்துவிட்டு திசைக்கு ஒருவராக ஓடி, தலைமறைவாக வாழ்ந்தார்கள். பிடிபட்டவர்களில் சிலர் சிறையிலிருந்து தப்பி வெளிநாடுகளில் பதுங்கினார்கள். பிரிட்டன் சிறையிலிருந்து தப்பிய ரோனி, பிரான்ஸுக்குச் சென்று முகச்சீரமைப்பு அறுவைசிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) செய்துகொண்டு, கடைசியில் பிரேசிலில் தஞ்சமடைந்தார்.
பிரிட்டன் பாரில் பீர்
பிரேசிலில் ஒரு உள்ளூர்ப் பெண்ணை மணந்துகொள்ள, அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். மனிதருக்குக் கடைசிக் காலத்தில் ஒரு விபரீத ஆசை. “ஒரு ஆங்கிலக் கனவானாக பிரிட்டன் பாரில் பீர் சாப்பிடுவதுதான் என் இறுதி லட்சியம்” என்று சொல்லிவிட்டு, பிரேசில் குடும்பத்தின் பேச்சைக் கேட்காமல், 2001-ல் பிரிட்டன் வந்து பிடிபட்டார். எட்டு ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ரயில் கொள்ளைச் சம்பவம் நடந்து 50 வருடங்கள் ஆன நிலையில், அதுகுறித்த தொடர் ஒன்றை பி.பி.சி. ஒளிபரப்பியது. அதற்கு முதல்நாள் ரோனி இறந்தார்!
தொடர்புக்கு: chandramohan.v@kslmedia.in