சிறப்புக் கட்டுரைகள்

என்று தணியும் இந்த ஆயுத மோகம்..?

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

வடகொரியா நேற்று காலையில் 4-வது முறையாக அணுகுண்டு (ஹைட்ரஜன்) சோதனையை நடத்தி இருக்கிறது. 1945-ல் ஹிரோஷி மாவில் வெடித்த அணுகுண்டை விடவும் 100 மடங்கு அதிக ஆற்றல் கொண்டது இது. சோதனை நடந்த இடத்தைச் சுற்றி, ரிக்டர் அளவுகோலில் 5.1 அளவுக்கு நில அதிர்வு உணரப் பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 30 சதவீதம் பேர் (200 கோடி) உணவுக்காக அன்றாடம் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் ஒரு அணுகுண்டு சோதனைக்கு என்ன அவசரம், அவசியம்?

'மிரட்டி மிரட்டியே பிறரைப் பணிய வைக்க முடியும்' என்கிற பேட்டை தாதாவின் அணுகுமுறை, இன்னமும் கூட செல்லுபடியாகும் என்று நம்பும் ஒரு சில நாடுகளில் வடகொரியாவும் ஒன்று.

அப்போதைய ஒன்றுபட்ட சோவியத் யூனியனின் உதவியால், ஜப்பானிடம் இருந்து பிரிந்த சில ஆண்டுகளில் (வட) கொரியாவின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தது. உலக நாடுகள் அனைத்தும் முன் மாதியாகக் கொள்ளத்தக்க அளவுக்கு முன்னேறிய நாடு, ஏன் இந்த அணுகுண் டைக் கட்டிக் கொள்ள வேண்டும்?

அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் விரிக்கும் வலையில் மாட்டிக் கொண்டால் என்ன நேரும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் - வட கொரியா. தானே சொந்தமாக 'ஹைட்ரஜன் குண்டு' சோதனை நடத்துகிற அளவுக்கு வட கொரியாவுக்குத் திறன் இல்லை.

வெளியில் இருந்து யாரேனும் உதவி செய்திருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக முன் வைக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிராகத்தான் தனது ஆயுத பலத்தைக் கூட்டிக்கொண்டு வருவதாக வட கொரியா வெளிப்படையாக அறிவித்து வருகிறது. எனவே, அவர்கள் உதவியிருக்க மாட்டார்கள். ரஷ்யாவின் தற்போதைய நிலையோ சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஆக, யார் உதவி இருப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

‘உள்ளே நடப்பது யாருக்கும் தெரியக் கூடாது' என்று செயல்பட்ட சோவியத் யூனியன், இன்றும் இந்தக் கொள்கையில் இருந்து இம்மியளவும் மாறாது செயல்படும் சீனாவைப் போலவே, வட கொரியாவும் இரும்புக் கோட்டைக் கதவுகளுக்குள் தன்னைத் தானே சிறைப் படுத்திக் கொண்டது.

தனது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருந்த சோவியத் யூனியன் சிதறுண்ட போதே, வட கொரியா விழித்துக் கொண்டிருக்க வேண்டும். சிறிது சிறிதாக, தனது நிதி நிலைமை சுருங்கிக் கொண்டே வந்த போதாவது சுதாரித்துக் கொண்டிருக்கலாம்.

சுமார் இரண்டரை கோடி மக்கள் தொகையை மட்டுமே கொண்ட வளமான நாடு, எந்தெந்த வகையில் எல்லாம் மனித குலத்துக்கு நன்மை செய்து இருக்கலாம்? மாறாக, தமது சொந்தக் குடிமக்களையே பொருளாதார விளிம்புக்குத் தள்ளி (பலர் ஒப்புக் கொள்ள மறுக்கலாம்) பிற உலக நாடுகளால் ஏறத்தாழ முற்றிலுமாகத் தனிமைப்பட்டு என்னதான் சாதித்து விடப் போகிறது..?

இந்தப் போர் வெறி, யாருக்கு எதிராக, எந்த நோக்கத்துக்காக இருந்தாலும், தீமையைத் தவிர ஒருவருக்கும் நன்மையைக் கொண்டு சேர்க்கப் போவதில்லை. இதை நன்கு உணர்ந்தும், சிறிய நாடுகள் ஏன் தமக்குள் தீராத பகைமை கொண்டு, தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்கின்றன?

உண்மையில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தமது போர் வெறிக்கு, சின்னஞ்சிறு நாடுகளைக் களமாக, கருவியாகப் பயன்படுத்திக் கொள் கின்றன.

எதிர்பார்த்தபடியே தென் கொரி யாவும் ஜப்பானும், தங்களின் பாதுகாப் புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா உடனடியாக கண்டனம் தெரிவித்து விட்டது; வடகொரியாவின் சோதனை எந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்பதை ஆராய்ந்து வருவ தாகக் கூறி இருக்கிறது.

அவசர அவசரமாக, ஐ.நா. பாது காப்புக் குழு கூடி இருக்கிறது. இனி, வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் மேலும் இறுகும். பதிலுக்கு, வடகொரியாவும் வீர வசனம் பேசும். வட கொரியா, தென் கொரியா இடையிலான 'உறவு' மேலும் விரிசல் அடையும்.

கொரியாவில் நடைபெறும் சம்பவங் கள் ஒரு விதத்தில் நமக்கு, நம்மை விடவும் நமது அண்டை நாட்டுக்கு, மிகப் பெரிய படிப்பினையாக அமைய வேண்டும்.

‘சகோதர யுத்தம்', எந்த அளவுக்கு வெளி சக்திகளின் அகோரப் பசிக்குத் தீனி போடும் என்பதை, கொரியாவைப் பார்த்தேனும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அளவில்லா ஆயுதப் பெருக்கம், பிரச்சினைக்குத் தீர்வு ஆகவே ஆகாது. உண்மையில் அது பிரச்சினையை மேலும் வளர்க்கவே உதவும். இது விஷயத்தில் இந்தியாவும் பாகிஸ்தா னும் மாறிமாறி அணுகுண்டு சோதனை நடத்திக் காட்டியதில் உறவுகள் மேம்பட்டனவா... சீர்குலைந்தனவா...?

இன்று வடகொரியா; நாளை வேறொரு நாடு. வடகிழக்கு ஆசியா வில் நிலை கொண்டுள்ள போர் மேகங் கள், ஆதிக்க நாடுகளின் ஆசியுடன் ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் பரவாது என்பது என்ன நிச்சயம்?

வெறுமனே கண்டனம் தெரிவிப்ப துடன் நமது கடமை முடிந்து விட்டது என்று இருந்துவிட முடியுமா? ஆயுதக் குறைப்புக்கு ஆதரவாக நாம் முனைப் புடன் களம் இறங்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

பதற்றத்தைத் தணிப்பதில், சமாதானத்தைக் கொண்டு வருவதில், இந்தியா தனது ராஜதந்திர நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்த வேண்டும். இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிற, உலக அமைதியில் உண்மையான அக்கறை கொண்ட நாடுகளின் தலைவர்களை உடனடியாகத் தொடர்பு கொண்டு, போருக்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவிக்க வேண்டும். இதுவே இப்போதைய உடனடித் தேவை.

SCROLL FOR NEXT