தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியம், இயற்கை நிலவாயுத் துறை
முதல் முறை அமைச்சர். தர்மேந்திர பிரதானின் அதிர்ஷ்டம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிரடியாகக் குறைந்தது. தொடர்ந்தும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவாகவே நீடித்தது. இதையே சந்தர்ப்பமாக்கி டீசலுக்கு அரசே விலை நிர்ணயிக்கும் முறையை நீக்கினார். அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகத்தைச் சீரமைத்து, இழப்பைப் போக்கி, உற்பத்தித் திறனைப் பெருக்கி, லாபம் ஈட்ட வைத்தார். வசதியுடையோருக்கும் சமையல் எரிவாயு மானியம் செல்வதைத் தடுக்கும் வகையில் செயல்திட்டங்களை அறிவித்து, ஒரு கோடிக்கும் மேற்பட்டோரிடம் சம்மதத்துடன் மானியச் சுமையைக் குறைத்தார். சமையல் எரிவாயுப் பயனீட்டாளர்களின் கணக்குக்கே வங்கி மூலம் நேரடியாக மானியத்தை வழங்கி, மானிய விரயத்தைக் கோடிக்கணக்கில் குறைத்தார். அயல்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களையும் வலுப்படுத்திவருகிறார்.
ராம்விலாஸ் பாஸ்வான் - உணவு, பொது விநியோகத் துறை
பாஜக தோழமைக் கட்சியான லோக் ஜனசக்தியின் தலைவர். இந்தியாவின் மொத்த பருப்புத் தேவையைவிட 70 லட்சம் டன் பற்றாக்குறையாக இருப்பது அரசுக்கு முன்னரே தெரியும். அடுத்தடுத்த இரு பருவங்களாக மழை பெய்யவில்லை என்பதும் தெரியும். இருப்பினும் கடைகளில் பருப்பு விலை கிலோ ரூ.200 ஆகும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போதுதான் அதிகாரிகளை மியான்மருக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறார் ராம் விலாஸ் பாஸ்வான். வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றைப் போல தக்காளியின் விலையும் உயர்ந்தது. கடந்த முறை தக்காளி அபரிமிதமாக விளைந்தபோது நியாயமான விலை கொடுத்து வியாபாரிகள் வாங்குவதை உறுதிப்படுத்த அரசு தவறியதால், தக்காளிச் சாகுபடியாளர்கள் பரப்பைக் குறைத்துவிட்டார்கள். அது விளைச்சலில் எதிரொலிக்கிறது. மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டன என்று பிறர் மீது பழிபோடும் பாஸ்வான், லாப நோக்கில் வியாபாரிகள் பதுக்குவதாலும் விலை உயர்கிறது என்கிறார். ஆனால், கள்ளச் சந்தை மீது நடவடிக்கை எடுப்பது யாருடைய பொறுப்பு என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அனைத்து மக்களுக்கும் அதிலும் குறிப்பாக வறுமைக் கோட்டின் கீழே வாழும் அனைத்து மக்களையும் குடும்ப அட்டைகள் சென்றடைவதை உறுதிப்படுத்த இன்னமும் பாஸ்வானின் அமைச்சகத்தால் முடியவில்லை.