சிறப்புக் கட்டுரைகள்

நொந்த மீன்கள்

வெ.சந்திரமோகன்

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, டாலர் மதிப்புயர்வு போன்ற உள்நாட்டு மற்றும் உலகளாவிய பிரச்சினைகளால் பீதியடைந்திருக்கும் மக்களின் கவலையைத் தங்களால் முடிந்த மட்டும் போக்கிவிட வேண்டும் என்ற 'பரந்த நோக்க'த்தில் தற்போதைய தமிழ் சினிமா உலகம் செயல்படுவதாகத் தோன்றுகிறது. 'தங்க மீன்கள்' பார்த்துவிட்டு, குடும்பத்தோடு அழுதுவிட்டு வந்த (உணர்ச்சிப்பெருக்கில்தான்) நண்பர் சொல்லிப் படத்துக்குப் போயிருந்தேன்.

குழந்தை மீதான அன்பைக் காரணம் காட்டிப் பொறுப்பற்றுத் திரியும் தந்தை தன் மீதான தவறுகளைக் கடைசிவரை ஒப்புக்கொள்ளாமல், தன் நிலைக்குச் சமூகம்தான் காரணம் என்று தப்பித்துக்கொள்ளும் விதமாகப் படத்தை எடுத்துள்ள ராம், படத்துக்கு உள்ளேயும் வெளியேயும் செய்யும் பாவனைகளைத் தாங்க முடியவில்லை.

பிளஸ் டூ படிக்கும்போதே சக மாணவியைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறான் நாயகன். ஒரு பெண் குழந்தை பிறந்து அது வளர்ந்து பள்ளி செல்லும் வரை போதுமான சம்பாத்தியம் இல்லாமல் அப்பாவின் நிழலில் வாழ்கிறான். சம்பாதிக்க முடியாததற்குச் சப்பைக்கட்டு கட்டுகிறான் . பள்ளிக் கட்டணம் கட்டப் பணம் தரும் தன் தந்தை விரக்தியுடன் சொல்லும் ஒரு வார்த்தைக்காகக் கடும் ரோஷம் காட்டுகிறான் . ஆனால் 'கடன்கார மாமா' என்று தன் மகனிடம் சொல்லும் நண்பன் ஒருவனிடம் லஜ்ஜையே இல்லாமல் கடன் கேட்க மீண்டும் செல்கிறான்.

அவன் சொல்லும் அரைகுறைக் கற்பனைக் கதையை உண்மை என்று நம்பிக் குளத்தில் மூழ்கி இறக்கும் அபாயத்துக்கு ஆளாகிறாள் மகள். இதைக் கண்ட நாயகனின் தந்தை கோபத்தின் உச்சத்துக்குச் சென்று அவனைக் கண்டித்தவுடன் திடீர் ரோஷத்துடன் தனிக்குடித்தனம் செய்ய மனைவியை அழைக்கிறான். பாவப்பட்ட அந்த ஜீவன் புத்திசாலித்தனமாக மறுக்கவே, ஊரை விட்டு ஓடி, கொச்சினை அடைகிறான். அங்காவது போய் உருப்பட்டானா என்றால் இல்லை; சுயபச்சாதாபத்துடன் தாடியைப் பிய்த்துக்கொண்டு அழுகிறான். அப்புறம், விவரம் அறியாத தன் மகள் கேட்டாள் என்பதற்காகத் தன் சக்திக்கு மீறிய விலை கொண்ட உயர் ரக நாய்க்குட்டிக்காகக் காடு மலையென்று அலையோ அலை என்று அலைகிறானே… அதுதான் படத்தின் உச்சகட்ட நகைச்சுவை. பெற்ற குழந்தையே ஆதரவற்றுத் திரியும்போது அந்த வாயில்லா ஜீவன் இந்தக் குடும்பத்திடம் சிக்கி என்ன பாடுபடும் என்ற கவலை பார்வையாளனை நடுங்கச் செய்கிறது.

தன்னை மாபெரும் கலைஞனாக நிலைநிறுத்திக்கொள்ள ராம் எடுக்கும் முயற்சிகள் மோசமானவை. திரைக்கதையில் நம்பகத்தன்மையைக் கொண்டுவருவதில் அடைந்த தோல்வியைச் சரிகட்ட முனையும் அவர், படத்தை விமர்சிப்பவர்களை முட்டாள்கள், சர்வாதிகாரிகள் என்று அர்ச்சிக்கும் அளவுக்கு இப்போது இறங்கியிருக்கிறார். படத்தில் தான் காட்டும் 'குறியீடுகள்' பாமர விமர்சகர்களின் கண்களுக்குத் தட்டுப்படவில்லை என்று ஒரு போடு போடுகிறார். சிறந்த திரைக்கதைகளில் குறியீடுகள் வலிந்து திணிக்கப்படுவதில்லை என்ற எளிய உண்மைகூட அவருக்குப் புரிபடவில்லை.

ராம் சொல்வதுபடி, படத்தில் நாயகன் அலைந்து திரியும் மலை உலகமயமாக்கலின் பாதிப்பின் குறியீடு என்றால் எம்ஜியார் பாடல் காட்சிகளில் அணிந்து வந்த கருப்பு கண்ணாடி, புவி வெப்பமாதலின் குறியீடு என்ற உண்மை அறியாமல் கைதட்டி ரசித்த ரசிகன் கடும் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டியிருக்கும். 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?'என்று கவுண்டர் கேட்ட கேள்வி, பின்னாட்களில் தமிழகத்தில் கடும் மின்வெட்டு இருக்கும் என்பதைக் குறியீட்டால் உணர்த்திய வசனம் என்று மரியாதையாக ஒத்துக்கொள்ள வேண்டி வரும். இதுபோன்ற ஆபத்துகளைத் தவிர்க்க வேண்டுமானால், முப்பரிமாணப் படங்களுக்குத் திரையரங்கில் தரப்படும் சிறப்புக் கண்ணாடிகள்போல், காட்சிகளில் தான் மறைத்து வைத்திருக்கும் குறியீடுகளைப் பாமர ரசிகன் கண்டுகொள்வதற்கு ஏதுவாக உள்பரிமாணக் கண்ணாடிகளை ராம் தரப்பில் வழங்கி உதவலாம். எதிர்கால ரசிகச் சந்ததிகள் தெளிவடைய சிறிதளவேனும் உதவும்!

வெ.சந்திரமோகன் - தொடர்புக்கு: chandrabuvan@gmail.com

SCROLL FOR NEXT