அன்புள்ள பிரதமர் அவர்களே,
என் அன்பான வாழ்த்துகள்!
நமது குடியரசு பிறந்த அதே ஆண்டில்தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். நமது குடியரசுக்கு 67 வயதாகிறது, உங்களுக்கும்தான்! இந்தியாவின் பிரதமராக, ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு உண்மையான நம்பிக்கையும் விசுவாசமும் உள்ளவராக இருப்பேன்’ என்று கடவுளின் பெயரால் உறுதியெடுத்துக்கொண்டீர்கள். சிறப்பு மிக்க அந்தப் பொறுப்பிலிருந்தபடி, ‘அரசியல் சட்டம்தான் இந்தியாவின் புனிதநூல்’ என்று குறிப்பிட்டீர்கள். எனவே, அரசியல் சட்டத்துடன் இரண்டு வகைகளில் தொடர்புடைய நபராக இருக்கிறீர்கள் பிறப்பாலும், பிரதமராகப் பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழியாலும்!
உறுதியெடுத்துக்கொண்டு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைக்கு அந்தப் பிணைப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
2014 முதல் இதுவரையிலான காலகட்டத்தில் உங்களது செல்வாக்கு அதிகரித்திருக்கிறது எனும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது. மூன்று காரணங்களால் உங்கள் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. முதலில், தீர்க்கமான நிலைப்பாடு கொண்டவராக, செயலாற்றுபவராக நீங்கள் பார்க்கப்படுகிறீர்கள். இரண்டாவதாக, ஊழலை எதிர்கொள்பவராக நீங்கள் கருதப்படுகிறீர்கள். மூன்றாவதாக, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில், கண்டிப்பானவராக முந்தைய பிரதமர்களைவிட மிகவும் கண்டிப்பானவராக நீங்கள் பார்க்கப்படுகிறீர்கள். விவாதிக்கப்பட வேண்டிய, நான்காவது பிம்பமும் உங்களுக்கு உண்டு உங்களுக்குப் பாராட்டு பெற்றுத்தரும் பிம்பமல்ல அது. இந்தியில் ‘ஹோஷியார்’என்று சொல்லப்படும் ‘சாமர்த்தியசா’லியாக நீங்கள் கருதப்படுகிறீர்கள். பணமதிப்பு நீக்கம் தொடர்பான உங்கள் ‘இன்று நள்ளிரவிலிருந்து’ அறிவிப்பு அப்படிச் சாமர்த்தியமான ஒரு அறிவிப்பு. “இது நாட்டுக்கு நல்லதுதானே!” என்று மறுநாள் காலை ஏ.டி.எம்கள் முன்னால் வரிசையில் நிற்கத் தொடங்கிய மக்கள் கூறினார்கள்.
ஆனால், ‘தீர்க்கமானவர்’, ‘ஊழலைக் கடுமையாக எதிர்கொள் பவர்’, ‘பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் கடுமையானவர்’ எனும் அந்த மூன்று பிம்பங்கள் உங்களை ‘அரசியல் சட்டத்துக்கு உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவராக’ உங் களை அடையாளப்படுத்துமா? இந்தக் கேள்வி முக்கியமானது!
பிரதமர் இந்திரா காந்தி ஒரு தீர்க்கமான பெண்மணி. 1975 - 1977 காலகட்டத்தில் தனது வழக்கமான ‘தீர்க்க’த்தைவிட மேலும் உறுதியானவராக இருந்தார். நெருக்கடி நிலையை அறிவித்த கையோடு குற்றவாளிகள், கறுப்புச் சந்தைக்காரர்கள், கறுப்புப் பணம் பதுக்குபவர்கள், ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். இன்றைக்கு நாம் பேசுவதுபோல் அந்தக் காலகட்டத்தில் பயங்கரவாதம் இல்லை. இந்திரா காந்தி தனது உறுதிமொழிக்கு உண்மையானவராக இருந்தாரா? அப்போது உங்களுக்கு 25 வயதிருக்கும் பிரதமர் அவர்களே! அரசியல் சட்டத்துக்கு மாறாக, தனது உறுதிமொழிக்கு விரோதமாக அவர் எப்படி நடந்துகொண்டார் என்றும், அதிகாரத்திலிருந்து எப்படி தூக்கியெறியப்பட்டார் என்றும் உங்களுக்கு நினைவிருக்கும்!
இந்திரா இந்தியா அல்ல. எந்தப் பிரதமரும் இந்தியாவாக முடியாது. இந்தியாதான் இந்தியா!
நீங்கள் இந்தியாவாகப் பார்க்கப்பட விரும்புகிறீர்கள் எனும் கருத்தும் நிலவுகிறது. அதாவது, உங்கள் மீதான விமர்சனம் என்பது இந்தியா மீதான விமர்சனமாக, தேசத்துரோகத்துக்கு இணையானதாக மாற்றப்படுகிறது. பணமதிப்பு நீக்கம் தொடர்பாகக் கேள்வி கேட்பது, கறுப்புப் பணம் தொடர்பான தரவுகளைச் சரிபார்ப்பது, பயங்கரவாதம் விஷயத்தில் மென்மையான அணுகுமுறை கொண்டிருப்பது, உங்கள் கணிப்பைக் கேள்வி கேட்பது என்று எல்லாமே தேசவிரோதம் என்றாகிவிடுகிறது. உங்களைச் சுற்றி ஒரு புனிதத்தன்மை நிலவுகிறது, உங்கள் அறிவிப்புகளில் தவறே இருக்காது எனும் கணிப்பு பரப்பப்படுகிறது. கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ஒளிவட்டம் இருப்பது அதனால்தான்!
நாட்டின் மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கும் யாரும் ஒரு சர்வாதிகாரியாக அல்லது குறிப்பிட்ட இனம், வர்க்கம், கலாச்சாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தையான ‘ஆதிக்கவாதி’யாக இருக்க முடியாது. ஆனால், பிரதமர் அவர்களே, இந்தியா பற்றிய உங்கள் பார்வையைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு ஆதிக்கவாதி.
ஆதிக்கவாதிகள் தங்களுக்கு ஆதரவான குறிப்பிட்ட ஒரு கூட்டத்தை நேசிக்கிறார்கள்; அந்தக் கூட்டமும் அவர்களை நேசிக்கிறது என்றால், அவர்கள் தனிப்பட்ட முறையில் தனிமையானவர்கள். தனிமை இரண்டு நண்பர்களைத் தேடிக்கொள்கிறது: ஒன்று ரகசியம், இன்னொன்று கண்மூடித்தனம். ஆதிக்கவாதியின் முடிவுகளில் தொடர்ச்சியற்ற சூழல்களின் மூடுபனி சூழ்ந்துகொள்கிறது. இந்த முடிவுகள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், தடாலடியாக எடுக்கப்பட்டவையாக இருக்கும். சில சமயம், இவை உத்வேகம் தருபவையாக இருக்கலாம். ஆனால், பல தருணங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதைவிடவும், மேலும் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிடும். ஆலோசனையின் பலன் களிலிருந்தும், அமைப்பின் பிற நபர்களின் கூட்டுழைப்பிலிருந்தும் இந்தத் தனித்த அதிகாரம் விலகியே இருக்கும். குடியரசின் கூட்டுழைப்பின் மூலம் கிடைக்கும் பெரும் பலனிலிருந்தும் விலகியிருக்கும். ஆதிக்கவாதி எந்த அளவுக்குத் தனது சொந்தக் குரலின் ‘இனிமை’யை ரசிக்கத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு அவரது செவிப்புலன் பலவீனமடைகிறது. மற்றவர்களின் குரல்களுக்குச் செவிசாய்ப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் தனது குரலைத்தான் அவர் கேட்கிறார். அதன்படியே நடந்துகொள்கிறார். தனது சொந்தப் பாடகராக, சொந்தப் பாடலாக, சொந்த ரசிகராக அவரே இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தலைவர் தன்னை மையமாகக்கொண்டு இயங்குவது என்பது ஜனநாயகத்தின்படி ஒரு முரண். குடியரசின் அடிப்படையில் ஒரு ஒழுங்கீனம். அது 1975-77 காலகட்டத்தைக் கறைப்படுத்தியது. அதே வடிவிலோ அல்லது மாறுபட்ட வடிவத்திலோ, சட்டப்படியோ அல்லது நடைமுறையிலோ, நமது அரசியலில், அரசியல் கலாச்சாரத்தில் அது மீண்டும் நிகழ அனுமதிக்கப்படக் கூடாது.
திட்டக்குழுவை ஒழித்தது, தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களின் சுதந்திரமான தலைமைப் பொறுப்புகளில் பாரபட்சமாக நடந்துகொள்பவர்கள் என்றறியப்பட்டவர்களை அமரவைத்தது, நீதிபதிகள் நியமனத்தைத் தாமதப்படுத்துவது, ராணுவத்தின் பதவி உயர்வுகளில் ஒரு சிலருக்குச் சாதகமாக இருப்பது, பிற துறைகளில் அதிகாரிகள் மட்டத்திலும் குறிப்பிட்ட சிலருக்குப் பதவி உயர்வு வழங்குவது, லோக்பால் மசோதா கோரிக்கையை நிறைவேற்றாமல் அந்தரத்தில் தொங்க விட்டிருப்பது, தகவல் உரிமைச் சட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவது, தொண்டு நிறுவனங்களைத் தடை செய்வது, பணமதிப்பு நீக்கம் என்று எல்லாமே சொல்வது இதைத்தான் ‘ஆதியும் அந்தமும் நானே, சிந்து நதியும் நானே, கங்கை நதியும் நானே’ என்பதே அது! அறியாத விஷயங்களை நோக்கிய, சிறிய அளவிலான ஆதிக்கவாதிகள் நெருக்கியடிக்கும் தங்க ரதத்தில் உத்தரவாதம் இல்லாத ஒரு பயணத்தை மேற்கொள்கிறீர்கள்.
குறைவான ரொக்கத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்து கிறீர்கள். குறைவான தண்ணீரைப் பயன்படுத்துவது எப்படி என்று சொல்லித் தருவீர்களா? ஏ.டி.எம்களில் பணம் குறைந்துபோகட்டும், பண அட்டைகளை டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்துங்கள் என்கிறீர்கள். நமது ஏரிகள் வற்றிப்போனால் என்ன செய்வது, ‘டிஜிட்டல்-தண்ணீர்’ பயன்படுத்தி நாம் வாழ முடியுமா? பருவநிலை மாற்றம் தொடர்பாக - தெரிந்த, தெரியாத பயங்கரங்களைப் பற்றி, மின்சாரம், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவிருப்பதைப் பற்றி, நீர் மூலம், காற்று மூலம் பரவும் தொற்று நோய்கள் பற்றி நாட்டை நீங்கள் எச்சரிப்பதில்லை. தூய்மையாக இருக்குமாறு எங்களுக்குச் சொல்கிறீர்கள். ஆனால் அசுத்தத்தின் ஊற்றாக இருக்கும் பிளாஸ்டிக் பற்றி, பிளாஸ்டிக் தொழிலதிபர்களின் ‘லாபி’ பற்றிப் பேசுவதில்லை. யோகாவின் நன்மைகளைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால், குட்கா, புகையிலை ‘லாபி’யால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிப் பேசுவதில்லை. நிலம், சுரங்கம், வனங்கள் ஆகியவற்றின் மீது மாபியாக்கள், தரகர்கள், ‘பெரும் வளர்ச்சித் திட்டங்களை’ மேற்கொள் வோரின் ஆதிக்கம் எந்த எதிர்ப்பும் இன்றித் தொடர்கிறது.
அப்புறம், காஷ்மீர்..! வஜாஹத் ஹபிபுல்லாவின் முயற்சியில் யஷ்வந்த் சின்ஹா தலைமையில் காஷ்மீர் சென்ற குழு, தான் கண்டறிந்த விஷயங்களை நேர்மையாக வழங்கியதுடன், மிக முக்கியமான பரிந்துரைகளையும் முன்வைத்தது. பிரதமர் அவர்களே, தெளிவான அந்தக் குரலுக்குச் செவிசாயுங்கள். 1960-களில் ஜெயபிரகாஷ் நாராயண் வழங்கிய எச்சரிக்கையும், வழிகாட்டல்களும் செவிசாய்க்கப்பட்டிருந்தால் இன்றைக்குக் காஷ்மீர் அனுபவிக்கும் வேதனைகள் காணாமல் போயிருக்கும். நாட்டின் ஒரு பகுதி தொடர்ந்து ரத்தம் சிந்த வேண்டும் என்பதல்ல நமது அரசியல் சட்டத்தின் நோக்கம். நாட்டின் மிக அழகிய பகுதியை, மிக அமைதியான பிரதேசமாக மாற்றுவதற்கான துணிச்சலான நடவடிக்கையை எடுக்க வரலாறு நமக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.
உங்கள் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்று தொடக்கத்தில் குறிப்பிட்டேன். அதேபோல், உங்கள் செல்வாக்கு சரிந்தும்வருகிறது. பிறப்பாலோ, உறுதிமொழியாலோ அரசியல் சட்டத்துக்குக் கடமைப்பட்டவர்கள் இல்லையென்றாலும் மாற்றுக்கருத்து கொண்டிருப்போர் மீதான சகிப்பின்மை வளர்ந்துவருவது, அரசை விமர்சிப்பவர்களை தேசத் துரோகிகள் என்று தவறாகச் சித்தரிப்பது போன்றவற்றால் அரசியல் சட்டத்தின் முக்கிய விழுமியங்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ஆழ்ந்த கவலையும், கலக்கமும் அடைந்திருக்கிறார்கள்.
குஜராத்தின் கிர்னார் மலைப் பகுதியின் பாறைகளில் அசோகச் சக்கரவர்த்தி செதுக்கிவைத்திருக்கும் நான்காவது அரசாணை இப்படிச் சொல்கிறது: “விழிப்புடன் கூடிய எனது வேலையிலோ, பணி முடிவிலோ நான் ஒருபோதும் முழுத் திருப்தி அடைவதில்லை”. அசோகச் சக்கரவர்த்தியின் இந்த ஒப்புதலையும், ‘மாகதி பிராகிருதம்’என்றழைக்கப்படும் மொழியில் ‘அனுசயா’என்று அவர் அழைத்த குற்றவுணர்வையும் தயவுசெய்து நினைவில் கொள்ளவும். அழகான உங்கள் தாய்மொழியான குஜராத்தி மொழியில் இதற்கு அற்புதமான இன்னொரு வார்த்தை இருக்கிறது அனுதாபா. பரிகாரமும், பரிவும் பலவீனத்தின் அறிகுறிகள் அல்ல; அவை ஒரு தலைவரின் அடையாளமான மாண்பின் அறிகுறிகள்!
நமது குடியரசின் மீதான பெருமையுடனும், விரக்தியிலிருந்து மீண்டுவர நம்பிக்கை அளிக்கும் அதன் ஆற்றல் மீது நம்பிக்கையுடனும்,
சக குடிமகன்!
கோபாலகிருஷ்ண காந்தி, © ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில்: வெ.சந்திரமோகன்