சிறப்புக் கட்டுரைகள்

கேட்கப்படாத யானையின் குரல்!

செய்திப்பிரிவு

மனிதர் - யானை இரு தரப்பின் நலன்களையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் தீர்வு

யானைகள் இறப்பு விவகாரத்தில் மீண்டும் தகிக்கிறது கோவை வனம். ரயிலில் அடிபட்ட ஒரு யானையும் கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு யானையும் அடுத்தடுத்து இறந்திருக்கின்றன. கோவை வட்டாரத்தில் காட்டு யானைகள் மனிதர்கள் - எதிர்கொள்ளல் நீண்ட வரலாறு கொண்டது. 10 வருடங்களுக்கு முன்பு, கோவை - பாலக்காடு எல்லை வாளையாறு காட்டினுள் போகும் ரயில் தண்டவாளத்தில், ஒரு குட்டி யானையும், அதன் தாயும் அதிவேக ரயிலில் அடிபட்டுச் செத்தன.

8 வருடங்களுக்கு முன்பு மற்றொரு சம்பவம், குரும்பபாளையம் என்ற கிராமத்தின் அருகே நடந்தது. ரயில்வே தண்டவாளம் செல்லும் பள்ளத்தாக்கில் ரயில் வந்தபோது சில யானைகள் எந்தப் பக்கமும் நகர முடியாமல் அகப்பட்டுக்கொண்டன. மொத்தம் 3 யானைகள் துள்ளத்துடிக்க இறந்தன. அதில் நிறைமாத சினை யானையும் ஒன்று. ரயில் மோதிய வேகத்தில் அந்த யானையின் வயிற்றிலிருந்த குட்டியும் வெளியே விழுந்து இறந்திருந்தது.

பேச்சளவு உண்மைகள்

வழக்கம் போல, ரயில்வே - வனத்துறை அதிகாரிகள் கலந்து பேசினார்கள். ஏற்கெனவே அறிவித்ததையே மீண்டும் சொன்னார்கள். இங்கே வருகிற விரைவு வண்டிகளின் வேகத்தை 100-லிருந்து 70 கி.மீ. ஆகக் குறைப்பதாக. அது பேச்சளவில் இருந்ததே ஒழிய எழுத்தில் எழுதப்படவில்லை என்பதே நடைமுறை உண்மை. அடுத்த ஆண்டு ஆண் யானை ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்ததும், மேலும் ஓராண்டு கழித்து வாளையாறு அருகே ஆண் குட்டியொன்று அடிபட்டுச் செத்ததும் இதனை உறுதிப்படுத்தப் போதுமானவை.

எத்தனை விபத்துகள் நடந்தாலும் இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் குறையவில்லை. முக்கியமாக 8 மற்றும் 14 யானைகளைக் கொண்ட இரு கூட்டங்கள் தனித் தனியாகச் சுற்றிவருகின்றன. கூடவே, இந்தக் கூட்டத்திலிருந்தோ, 2008-ல் அடிபட்ட 3 யானைகள் கூட்டத்திலிருந்தோ பிரிந்த ஒற்றை ஆண் யானை (கொம்பன்) ஒன்றும் தனியாக இங்கேயே சுற்றிச்சுற்றி வருகிறது.

யானைகள் புத்திசாலிகள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். பிறகேன் உயிருக்கு ஆபத்தான பகுதியில் அவை நடமாட வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? காரணம் இல்லாமலில்லை. இந்த யானைகள் வசிக்கும் மலைக் காட்டில் மருந்துக்குக்கூடத் தண்ணீர் இல்லை. மலைகளை வெடிவைத்துத் தகர்த்து குவாரிகளாக மாற்றிவிட்டார்கள் மனிதர்கள். சிமென்ட் தொழிற்சாலைகளுக்காகத் தொடர்ந்து 40 ஆண்டுகளாக மலை குடையப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மலையும் மரமும் பச்சையை இழந்துவிட்ட இடத்தில், தண்ணீர் எங்கே கிடைக்கும்?

தண்ணீர் தேடும் படலத்தில்தான் இந்த யானைகள் ஊருக்குள் வந்து புழங்கின. குறிப்பாக, ஒற்றையாகத் திரிந்த கொம்பன் ஒரு குறிப்பிட்ட தோட்டத்தில் கிணற்றை ஒட்டி இருந்த தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் பருகுவதை வாடிக்கையாக்கிக் கொண்டது. வந்து போகும்போது, வாழை, தென்னை போன்ற தோட்டப் பயிர்களையும் கபளீகரம் செய்ய ஆரம்பித்தது.

ஆபத்தான மனிதர்கள்

“ஒரு நாள் தொட்டித் தண்ணியில மாட்டுச் சாணத்தையோ எதையோ கரைச்சி வச்சிருக்காங்க. அன்னைக்கு ராத்திரி வந்த யானை ஒரு பொட்டுத் தண்ணியக்கூடத் தொடல. அடுத்த நாள் காலைல அந்தத் தோட்டத்துல 50 பேருக்கு மேல சோளத்தட்டு வெட்டிட்டு இருந்தாங்க. அப்ப ஆக்ரோஷமா வந்த ஒத்தை யானை, ஒரு பெண்ணைத் தூக்கிப்போட்டுக் கொன்னுட்டுப்போயிடுச்சு” என்று ஊரே பேசிக் கொள்கிறது.

ஒற்றை யானைகள்தான் ஆபத்தானவை, கூட்டமாக வருபவை சாந்தமானவை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. (உண்மையில், ஆபத்தானவை யானைகள் அல்ல, அவற்றின் வாழிடத்தையும் உணவு ஆதாரங்களையும் அழித்த நாம்தான் ஆபத்தானவர்கள் என்ற உண்மை ஒருபுறம் இருக்கட்டும்.) 8 மற்றும் 14 யானைகள் கொண்ட இரண்டு கூட்டங்கள் இப்பகுதியில் தோட்டம் தோட்டமாகச் சென்று பயிர்பச்சைகளை அழிப்பதும், அங்கேயே தண்ணீரைக் குடித்துவிட்டுக் கலைவதும் தொடர்ந்தது.

ஒரு பெரிய வாழைத் தோப்பில் 8 யானைக் கூட்டம் விடிய விடிய நின்று பசியாறிச் சென்றிருக்கிறது. ஒற்றை யானை புகுந்தாலே தோட்டம் காலியாகிவிடும், 8 யானைகள் என்றால் எந்த விவசாயியால் தாக்குப்பிடிக்க முடியும்? அவசர அவசரமாக மின்வேலி போட்டிருக்கிறார் தோட்டத்துக்காரர். ஒரு நாள் காலையில் மின்வேலிக்கு வருகிற மின்சாரத்தை நிறுத்த வந்த விவசாயிக்கு எதிரே மலை மாதிரி நின்றிருக்கிறது ஒற்றை யானை. “தப்பிச்சி ஓடப்போனவரைத் துரத்தித் தூக்கிப்போட்டு மண்ணோட மண்ணா வச்சுப் புரட்டுது யானை. சத்தம் கேட்டு ஓடிவந்த நாங்கெல்லாம் கும்பலா ஓடிப்போய் சத்தம் போட்டோம். உடனே அது ஓடிடுச்சு” என்கிறார்கள்.

குடியிருப்புப் பகுதிக்குள்ளும் யானைகள் புகுந்ததால், அவற்றை விரட்டுவதற்கான விசில் சத்தமும், சங்கு ஊதலும், பட்டாசு வெடிச்சத்தமும் கேட்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அப்படித் துரத்தும்போது வனத் துறை ஊழியர் ஒருவர் யானையிடம் மாட்டிக்கொண்டார். ஒரே தட்டு, ஒரே மிதி. மருத்துவமனை செல்கிற வழியில் இறந்துவிட்டார். தன் ஊழியரைத் தொட்ட பிறகு அரசு இயந்திரம் சும்மா இருக்குமா? அதுக்கப்புறம்தான் வந்தது வினை.

போதாக்குறைக்கு, ‘சுட்டுக் கொல்லுங்க. மயக்க ஊசி போட்டுப் பிடிங்க!’ என்று விவசாயிகளும் போராட ஆரம்பித்தார்கள். உடனே, இந்த ஒற்றை யானையைப் பிடித்து வனத் துறை முகாமில் வைத்துப் பழக்க தனி உத்தரவே போட்டது அரசு. இந்த ஆபரேசனுக்குப் பெயர்தான் ‘மிஷன்’ மதுக்கரை மகராஜ்.

“இதுல மகராஜ் யாரு? சோளத்தட்டு வெட்டிட்டு இருந்த பெண்ணை அடிச்ச ஒத்தைக் கொம்பனா? ஃபாரஸ்ட்டுக்காரரைக் கொன்றதே அதுவா?” என்று பலருக்கும் பல குழப்பம். “இதிலென்ன குழப்பம்? ரெண்டு ஆண் யானைகளைக் கூட்டீட்டும் அப்பப்ப தனியா பிரிஞ்சும் திரியுதே. அதுதான் மதுக்கரை மகராஜ்!” என்று உறுதிபடச் சொன்னார்கள் வனத் துறையினர். கும்கி யானைகள், மயக்க மருந்து துப்பாக்கிகள் சகிதமாக அதைப் பிடித்து வெற்றிக்களிப்பிலும் மிதந்தார்கள்.

ஆனால், இந்தக் களிப்பு ஒரே ஒரு நாள்தான். அதற்கு அடுத்த நாளே மகராஜனைப் பிடித்த இடத்திலிருந்து, 3 மைல் தூரத்தில் எட்டிமடை பக்கத்தில் ரயிலில் அடிபட்டுச் செத்துக்கிடந்தது 40 வயது மதிக்கத் தக்க பெண் யானை. அது மக்களின் குழப்பத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

‘அப்படி எதுவுமில்லை. ‘நேத்து பிடிச்சது ஒத்தையா திரிஞ்ச மகராஜ்தான். இப்ப செத்த யானைக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை. இதோட கூட்டத்துல மொத்தம் அஞ்சு பேரு. அதுல ஒண்ணுதான் இப்படி வந்து சிக்கிடுச்சு. மீதியை வாளையாறு பக்கமா விரட்டி விட்டிருக்கோம்!’ என்று வனத்துறை அதிகாரிகள் சொன்னார்கள்.

இதற்கிடையே, பிடிபட்ட மகராஜ் மயக்க நிலையிலேயே உயிரிழந்துவிட்டது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது அரசு.

மனிதர்களின் ராஜாங்கம்

“இது மனிதர்களின் ராஜாங்கம். இங்கே விலங்குகளின் குரல்கள் கேட்கப்படுவதுமில்லை, உணரப்படுவதுமில்லை. மகராஜ்கள் திரண்டு வந்து மனு கொடுக்கப்போவதுமில்லை. ஏனென்றால், அவை வாயில்லாத, வாக்குரிமையில்லாத மகராஜ்கள்” என்கிறார்கள் வன ஆர்வலர்கள்.

யானைகள் - மனிதர்கள் மோதல் என்பது யானைகளின் வாழிடத்துக்குள் மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து, அவற்றின் வாழிடம், புலம்பெயரும் தடம் போன்றவற்றை அழிக்க ஆரம்பித்த பிறகுதான் தொடங்கியது. இந்த விவகாரத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் அழிவுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில், யானைகளின் நலனும் பாதுகாக்கப்படுவது அவசியம். சிக்கலான இந்தப் பிரச்சினையை ‘யானைகள் அட்டகாசம்’ என்று ஒரு வரியில் சுருக்கிப் புரிந்துகொள்ளவே முடியாது என்பதைப் பொதுமக்களிலிருந்து வனத் துறையினர், ஆட்சியாளர்கள் வரை உணர்ந்துகொண்டால்தான் பிரச்சினையின் தீர்வு நோக்கி முதல் அடியை எடுத்து வைக்க முடியும். அந்தத் தீர்வு, மனிதர் - யானை இரு தரப்பின் நலன்களையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்!

- கா.சு.வேலாயுதன்,

தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT