சிறப்புக் கட்டுரைகள்

தாய்மொழி நாள் சொல்லும் மறக்கக் கூடாத வரலாறு!

வீ.பா.கணேசன்

இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிந்த பிறகு, பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகை 6.9 கோடி. இவர்களில் 4.4 கோடிப் பேர் கிழக்கு பாகிஸ்தானில் வசித்தனர். அவர்களுடைய மொழி வங்காளி. 1948 பிப்ரவரி 23 அன்று கூடிய பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபை, தனது உறுப்பினர்கள் சபையில் உருதுவிலோ அல்லது ஆங்கிலத்திலோ மட்டுமே பேசலாம் என முடிவெடுத்தது. இதை எதிர்த்த கிழக்கு பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர் திரேந்திரநாத் தத்தா "வங்காளியையும் அதில் சேர்க்க வேண்டும்" என்று முன்மொழிந்தார். ஆனால், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், கிழக்கு பாகிஸ்தான் முதல்வர் க்வாஜா நசீமுதின் உட்பட, பலரின் உதவியுடன் வங்காளிக்கு ஆதரவான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் போர்க்கோலம் பூண்டது இதற்குப் பின்னர்தான்.

1948 மார்ச் 11-ல் பொது வேலைநிறுத்தம் நடந்தது. மார்ச் 19-ல் பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னா டாக்காவில் கலந்துகொண்ட இரண்டு நிகழ்ச்சியிலுமே "பாகிஸ்தானின் அரசு மொழியாக உருது மட்டுமே இருக்கும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அரசியல் மட்டத்தில் துவங்கிய எதிர்ப்பு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவியது. 1948-ல் துவங்கிய தாய்மொழியான வங்காளிக்கு ஆதரவான இந்த இயக்கம் தொடர்ந்து வலுப்பெற்று 1952-ல் உச்சமெய்தியது. பிப்ரவரி 21 அன்று டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கிளர்ச்சியை ஒடுக்க ராணுவப் படைகள் நடத்திய தாக்குதலில் ரஃபீக் உதீன் அகமது, அப்துல் ஜப்பார், அப்துல் பரகத், அப்துல் சலாம் ஆகிய நால்வரோடு 9 வயதே ஆன ரஹியுல்லா என்ற சிறுவனும் உயிரிழந்தனர். பிப்ரவரி 23 அன்று இவர்கள் கொல்லப்பட்ட அதே இடத்தில் தற்காலிகமாகத் தியாகிகள் நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து பிப்ரவரி 21 மொழிப் போர் தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

தியாகிகள் உயிரிழந்த அதே இடத்தில் 1963-ல் நிரந்தரச் சின்னம் நிறுவப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் மக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து 1956 பிப்ரவரி 16 அன்று பாகிஸ்தானின் அரசு மொழிகளில் ஒன்றாக வங்காளியும் சேர்க்கப்பட்டது. ஆனால், முன்னதாக மேற்கு பாகிஸ்தானின் மனதிலிருந்த ஆதிக்க உணர்வையும், கிழக்கு பாகிஸ்தான் மீதான புறக்கணிப்பு உணர்வையும் இந்த மொழிப் போர் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது. ஆம், அவர்கள் விடுதலைப் போராட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டனர். இறுதியில் வங்கதேசம் உருவாகிவிட்டது.

இந்த மொழிப் போராட்டத்தினை அங்கீகரிக்கும் வகையில்தான் சர்வதேச கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, 1999 நவம்பர் 17-ல் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின் மூலம், ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஐ உலகத் தாய்மொழி தினமாக அனுசரிக்க அறைகூவல் விடுத்தது. தாய்மொழிக்கான போராட்டத்தின் மூலம் உருவான ஒரே தனிநாடு வங்கதேசம் என்றாலும், உலகில் தேசிய இனங்களுக்கான உரிமைகளையும் அவர்களுடைய மொழி, கலாச்சாரத்தை ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் கொண்டுவரக்கூடிய எந்த முயற்சியையும் மக்கள் எதிர்க்கவே செய்கின்றனர் - அப்படியான முயற்சிகளில் ஈடுபடும் அரசுகள் சிதைந்தே போகின்றன. உலகத்துக்கு ஒவ்வொரு பிப்.21 தாய்மொழி நாளும் சொல்லும் முக்கியமான செய்தி ஏதேனும் உண்டென்றால், அது இதுதான்: "ஒற்றைக் கலாச்சாரத்தைக் கனவு கண்டால் உங்களுடைய இருப்பே சிதறுண்டுபோகும்; பன்மைத்துவத்தைப் பாதுகாத்திடுங்கள்!"

- வீ.பா.கணேசன், எழுத்தாளர். | தொடர்புக்கு: vbganesan@gmail.com

SCROLL FOR NEXT