சிறப்புக் கட்டுரைகள்

கடினம் அல்ல கெமிக்கல் இன்ஜினியரிங்!

ஜெயபிரகாஷ் காந்தி

பிளஸ் 2-வில் கணிதம், வேதியியல், இயற்பியல் படிப்பவர்கள் கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவைத் தேர்வு செய்யலாம். இதிலும் மேற்படிப்பு கூடுதல் பலன் தரும். உரம், பெட்ரோலிய நிறுவனங்கள், மருந்து உற்பத்தி, கெமிக்கல் தொழில் துறையில் வேலைவாய்ப்பு பெறலாம்.

கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத் திட்டம் கடினமானது என்ற தவறான கருத்து மாணவர்கள் மத்தியில் உள்ளது. பிளஸ் 2-வில் வேதியியல் பாடத்தில் நன்றாகத் தேறியவர்களுக்கு கெமிக்கல் இன்ஜினியரிங் எளிமையானதே. அதேபோல, ரசாயன ஆலைகளில் வேலை பார்த்தால் உடல்நலம் பாதிக்கும் என்றும் நினைக்கிறார்கள். உடல்நலம் பாதிக்காதபடி பணியாற்றுவதற்கு இன்றைக்கு நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இத்துறையில் தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களில் வேலைவாய்ப்பு கூடுதலாக உள்ளது. இதனால் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பவர்கள் கூடவே ஹிந்தியும் கற்பது வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.

உலக அளவில் ஆடை வடிவமைப்பு ஃபேஷன் தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துவருகிறது. இதனால், ஃபேஷன் டெக்னாலஜி இன்ஜினியரிங் பாடப் பிரிவுக்கும் வரவேற்பு அதிகம். ஃபேஷன் டெக்னாலஜி பெண்களுக்கு மட்டுமானது என்று நினைப்பது தவறு. இது இருபாலருக்கும் பொதுவானது.

பிளஸ் 2-வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப் பிரிவு படித்த மாணவர்கள், ஃபேஷன் டெக்னாலஜி படிப்பில் சேரலாம். சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட வளர்ந்த நகரங்களில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) கல்லூரிகளில் இந்த பாடத் திட்டம் உள்ளது. இதற்கு தனியாக நுழைவுத் தேர்வு உண்டு. இதில் தேர்ச்சி பெறாதவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக். - ஃபேஷன் டெக்னாலஜி சேரலாம். ஃபேஷன் மேனேஜ்மென்ட், ஃபேஷன் டிசைனிங், ஃபேஷன் மெர்ச்சண்டைசிங், ஃபேஷன் ரீடெய்ல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு உண்டு.

மெக்கோட்ரானிக்ஸ் பாடப் பிரிவு மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இணைந்தது. ரோபோடிக், ஆட்டோமிஷன் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இப்பிரிவைத் தேர்வு செய்யலாம். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் இத்துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதனால், அந்நாடுகளில் இதில் மேற்படிப்பு படிப்பது புத்திசாலித்தனம். ‘கேட்’ நுழைவுத் தேர்வில் இப்பாடப் பிரிவு இடம்பெறாது. இப்பிரிவு படித்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மெக்கானிக்கல் துறையிலும் வேலைவாய்ப்பு உண்டு.

SCROLL FOR NEXT