சிறப்புக் கட்டுரைகள்

நம் தலைமுறை முன் உள்ள கேள்விகள்

செய்திப்பிரிவு

யாருக்காகச் சட்டம் இயற்றப்பட்டதோ அவர்களுடைய நலனையே பாதிக்கும்படியாக அச்சட்டத்தைத் திருத்துவதிலும், திருத்தக் கோருவதிலும் கடந்த சில மாதங்களாக ஒருவித அவசரப் போக்கு காணப்படுகிறது. எதைக் கட்டிக் காப்பது கடமையோ அந்தக் கடமையை அரசு சரிவர நிறைவேற்றாததுதான் இதற்குக் காரணம்.

நாம் அனைவரும் கவலைகொள்ளத்தக்க ஒரு சட்டம், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால், ‘செல்லும்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹரியாணா மாநில அரசு கொண்டுவந்த ‘ஹரியாணா பஞ்சாயத்து ராஜ் (திருத்த) சட்டம், 2015’ என்பதுதான் அது. அந்த சட்டத் திருத்தத்தின் மேன்மையான நோக்கம் மேல்நிலைப்பள்ளி இறுதி வகுப்பு வரையில் படித்துத் தேறுவது முக்கியம் என்று அனைவரையும் நினைக்க வைப்பது, வீடுகளில் செயல்படும் வகையில் கழிப்பறைகளைக் கட்டுவது, அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை நிலுவை வைக்காமல் செலுத்துவது போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்பதாகும். உள்ளாட்சி மன்றங்களில் போட்டியிட நினைப்பவர்கள் பொதுப்பிரிவினராக இருந்தால் பத்தாவது வகுப்பும், பட்டியல் இனத்தவர் என்றால் 8-வது வகுப்பும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த மகளிராக இருந்தால் 5-வதும் படித்திருக்க வேண்டும் என்கிறது சட்டத் திருத்தம்.

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பாக சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருக்கிறது என்பதால் மட்டுமே நீதிமன்றங்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. நாம் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் இதே நிபந்தனைகள் அல்லது இவை போன்ற நிபந்தனைகள் நாளை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தலுக்கான சட்டத் திருத்தங்களாகவும் வரக்கூடும்.

இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய ‘அரசியல் சட்ட நிர்ணய சபை’ அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது குறித்தெல்லாம் மிக விரிவாக விவாதித்திருக்கிறது என்பதை மறந்துவிட்டோம். கல்வி, பாலினம், பொருளாதார அந்தஸ்து, மதம் போன்ற எதுவும் இந்தியர்கள் வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்று முடிவு செய்தே சட்டத்தை இறுதி செய்தார்கள். 100 சதவீத மக்களும் கல்வியறிவு பெற வேண்டும், எல்லா வீடுகளிலும் கழிப்பறை இருக்க வேண்டும் என்று தேசிய அரசுகள் முயற்சி செய்ய வேண்டும்; ஆனால் அவற்றைச் செய்துதரத் தவறிவிட்ட நிலையில், தேர்தலில் போட்டியிட மக்களுக்கு உள்ள உரிமையைப் பறிப்பது சரியல்ல.

பாடங்களைப் படிப்பதில் பாதிப்புகள்

கல்விபெறும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவரவுள்ள திருத்தங்கள் அடுத்து கவனிக்கத் தக்கவை. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு நன்மைகளும் தீமைகளும் கலந்தே ஏற்பட்டுள்ளன. பள்ளிக்கூடத்துக்கு வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அவற்றில் ஆண், பெண் விகிதமும் பாராட்டத் தக்க வகையில் உயர்ந்துகொண்டே வருகின்றன. ஆனால் பாடங்களை வாய்விட்டுப் படிப்பது, சொல்வதைக் கேட்டு பிழையில்லாமல் எழுதுவது, கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்குகளைப் போடுவது போன்றவற்றில் மாணவர்கள் அவர்களுடைய வயதுக்கும் அவர்கள் படிக்கும் வகுப்புக்கும் ஏற்ற திறனைப் பெறாமல் பின்தங்கியிருக்கிறார்கள்.

முதலாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரையிலான தொடக்கக் கல்விப் பருவத்தில் மாணவர்கள் சேர்வது தேசிய அளவில் 95% ஆக உயர்ந்திருக்கிறது. 2013-14-ம் ஆண்டில் மாணவியர்கள் சேர்வது 100.6% ஆகவே உயர்ந்திருக்கிறது. பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளியில் சேர்வது 102.8% ஆகவே உயர்ந்திருக்கிறது. நலிவுற்ற பிரிவினர் பள்ளிகளில் சேர்வது இப்படி அதிகரித்திருப்பதற்குக் காரணம் கல்வி பெறும் உரிமைச் சட்டம்தான் என்பதால் நாம் அதைக் கொண்டாடுவதிலும் நியாயம் உண்டு. ஆனால் இச்சட்டத்தின் இன்னொரு முக்கிய அம்சம், ஆண்டு பொதுத் தேர்வுகளுக்குப் பிறகு தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தோல்வி அடைய வைக்காமல், அடுத்த வகுப்புக்கு அனுமதிப்பது என்பது. இதனால் மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடை நிற்காமல் கற்கிறார்கள் என்றாலும் அவர்களுடைய வாசிப்புத்திறன் கவலைகொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது.

எட்டாவது வகுப்பு வரை மாணவர்களை அதே வகுப்பில் மீண்டும் படிக்கச் சொல்லாமல் அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிடுவது என்ற கொள்கையை வகுத்தபோதே, மாணவர்களின் கல்வித் திறனை அனைத்து அம்சங்களிலும் தொடர்ந்து மதிப்பிட்டு வர வேண்டும் என்ற நடைமுறையையும் கொண்டுவந்தனர். திறன் குறைவான மாணவர்களை மேம்படுத்த ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய செயல்முறைகளும் கூட வரையறுக்கப்பட்டன. அவை சரியாக அமல்படுத்தப்படவில்லை. எனவே இந்த நிலைமை.

ஆண்டுதோறும் தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் வடிகட்டுவது என்ற முடிவை மாநில அரசுகளும் மத்திய அரசும் அடுத்து எடுத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்த உடனேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போக ஆரம்பித்துவிடுவார்கள். பிற்காலத்தில் அந்த மாணவர்கள் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பையும் இழந்துவிடுவார்கள்.

இளம்பிராயக் குற்றவாளிகள் மறுவாழ்வு

மூன்றாவது சட்டத் திருத்தம், உணர்ச்சிகரமான விவாதத்துக்கு இட்டுச் சென்றது. ‘சிறார் சீர்திருத்த (பராமரிப்பு, பாதுகாப்பு) திருத்த மசோதா, 2015’ மக்களவையால் 2015 மே மாதம் ஏற்கப்பட்டு மாநிலங்களவையால் டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. சிறார் சட்டப்படி தண்டனைக்குரியவர்களின் அதிகபட்ச வயது 18 ஆக இருப்பது சில வகைக் குற்றங்களுக்கு 16 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதைச் சமூகத்தின் சில பிரிவினர் ஆதரிக்கின்றனர்.

சிறார்களை, பெரியவர்களுக்கான சட்டப்படி விசாரித்துத் தண்டிப்பதாலோ, பெரியவர்களுடன் சேர்த்து சிறையில் அடைப்பதாலோ குற்றங்களின் எண்ணிக்கைகள் குறைந்துவிடுவதில்லை என்பது புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவருகிறது; அவ்விதத் தண்டனை பெறும் சிறார்கள் மீண்டும் குற்றச் செயல்களுக்குத் திரும்பிவிடுகின்றனர்.

சிறார் சட்டப்படி விசாரித்து, சிறார்களுக்கான திருத்தப்பள்ளியில் சேர்த்து தனித்து வைத்திருப்பதால் மீண்டும் இன்னொரு குற்றத்தைப் புரிந்துவிட்டு கைதாவது குறைந்துவிடுகிறது என்று ஆய்வுகளும் புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன.

பணியிடங்களில் சிறார்கள்

கடைசியாக, இந்தியாவில் அதிகம் புறக்கணிக்கப்படும் சிறார் தொழிலாளர் சட்ட திருத்தம் பற்றிப் பார்ப்போம். அரசின் புள்ளிவிவரப்படியே நாட்டில் சுமார் 43 லட்சம் சிறார் தொழிலாளர்கள் இருக்கின்றனர். சிறார் தொழிலாளர் (தடை, ஒழுங்குபடுத்தல்) திருத்த மசோதாவானது, இச் சிறார்களைத் தொழில் செய்வதிலிருந்து மீட்டு அவர்களை மேம்படுத்துவதற்காக என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதன் உட்பிரிவுகளைப் பார்த்தால், உண்மையில் அதுதான் நோக்கமா என்று கேட்கத் தோன்றுகிறது.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான தொழில்களில், பணிச் சூழல்களில் 14 வயதுக்குட்பட்ட சிறார்கள் வேலை செய்வதை இப்போதைய சட்டம் தடை செய்கிறது. ஆனால் ‘அபாயகரமான தொழில்கள்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 83-ஐ வெறும் 3 ஆகக் குறைக்க அரசு உத்தேசித்திருக்கிறது. குடும்பமே சேர்ந்து வேலை செய்யும் தொழில்களில் சிறார்களைப் பயன்படுத்த புதிய திருத்தம் அனுமதிக்கிறது. அந்தப் பட்டியலில் ஜரிகைத் தொழில், வளையல் தயாரிப்பு, தரைவிரிப்புகள் நெய்தல் போன்றவை வந்துவிடும். உண்மையில் இந்தத் தொழில்கள் இளம் தொழிலாளர்களின் பிஞ்சு விரல்களைத்தான் பெருமளவுக்கு நம்பியிருக்கின்றன. இத்தகைய தொழில்களுக்கான அமைப்பு முறையானது மிகக் குறைந்த சம்பளத்தில் குடும்பம் குடும்பமாகக் கொத்தடிமைகளாக வைத்திருக்கவே உதவுகின்றன. பள்ளிக்கூட நேரம் முடிந்த பிறகு பாரம்பரியத் தொழில்களைச் சிறார்கள் கற்றுக்கொள்ளவும் சமூக, பொருளாதார யதார்த்த நிலைமைக்கு ஏற்பவும்தான் இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன என்று அரசு விளக்கம் அளிக்கிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணி நேரமாவது வேலை செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நின்றுவிடுவது 70% ஆக இருக்கிறது. குடும்பமே சேர்ந்து செய்யும் வேலையாக இருந்தாலும் ஒரு சிறுவன் அல்லது சிறுமி ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டும்தான் வேலை செய்ய நேர்கிறதா என்று கண்காணிக்க அரசிடம் என்ன ஏற்பாடு இருக்கிறது?

பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைக் கடத்துவோர் அவர்களுக்கு ‘மாமா’ அல்லது ‘அத்தை’ என்று சொல்லித்தான் வேலைக்குக் கூட்டிச் செல்வதைப்போல எங்கோ அழைத்துச் செல்கின்றனர். இதைத் தடுப்பதற்குக்கூட அரசிடம் போதிய அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் இல்லையே?

படித்துக் கொண்டே வேலை செய்யட்டும், குடும்ப வேலைகளில் சிறார்கள் ஈடுபடட்டும் என்று அரசே அனுமதித்தால் பள்ளிக்கூடத்திலிருந்து முதலில் நிறுத்தப்படுவது ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளாகத்தான் இருக்கும். இந்த சட்டத் திருத்தமே அவர்களைக் காப்பதற்காகத்தான் என்று கூறப்படுகிறது! இந்த சட்டத் திருத்தங்கள் சிறார் தொழிலாளர் முறையை ஒழிக்காது மாறாக, சட்டம் அளிக்கும் கல்வி பெறும் உரிமையை அவர்களிடமிருந்து பறித்துவிடும். அவர்களில் சிலர் குற்றச் செயல்களில் இறங்குவதற்குக்கூட களம் அமைத்துக் கொடுத்துவிடும்.

(கட்டுரையாளர் பர்கா தேவா அரசியல், அரசு நிர்வாகம், அரசின் கொள்கை ஆகியவற்றை ஆய்வுசெய்து விமர்சிப்பவர்.)

© தி இந்து ஆங்கிலம்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

SCROLL FOR NEXT