எப்போதுமே அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பின் ஆபத்து என்னவென்றால், அது உடனடியாக, ஏமாற்றத்துக்கும் அவநம்பிக்கைக்கும் இட்டுச்செல்லக் கூடும். ஆ.ஆ.க-வுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ‘எல்லாருக்கும் இலவசம்’ என்ற பாணியிலான நிர்வாகம் அதன் முதல் ஆபத்து.
டெல்லியின் தலைமைச் செயலகத்தை ‘ஜனதா தர்பார்’ ஆக மாற்றுவதற்கு எடுத்த (ஆனால் கைவிடப்பட்ட) முயற்சி, ஊழல் அதிகாரிகளைக் கண்டுபிடிப்பதற்கான ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களுக்கு விடுத்த அறைகூவல் போன்ற அவசர அவசரமான, குழப்பமான முடிவுகளில் இந்த முதல் ஆபத்து கண்கூடாகத் தெரிகிறது.
முறையான கட்டமைப்பும் நெறிமுறையும் இல்லையென்றால், மேற்கண்ட அணுகுமுறைகள் அதீதக் கண்காணிப்பின் ஆயுதங்களாக மாறிவிடும்; இதனால், சுதந்திரத்துக்கும் அத்துமீறலுக்கும் இடையிலான எல்லைக் கோடு மறைந்துவிடும். ஆ.ஆ.க. தன்னை சித்தாந்தரீதி யாக வரையறுத்துக்கொள்ளாதது இரண்டாவது ஆபத்து. ‘சிஎன்என்-ஐபிஎன்’ அலைவரிசைக்குக் கொடுத்த பேட்டியில், ஆ.ஆ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினர் யோகேந்திர யாதவ், தங்கள் கட்சி சோஷலிசக் கட்சியல்ல என்று மறுத்ததுடன் “20-ம் நூற்றாண்டின் எதிரெதிர் துருவங்களான இடதுசாரிகளாலும் சரி, வலதுசாரிகளாலும் சரி ஒரு பயனும் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.
ஆ.ஆ.க-வின் இணையதளத்தில் உள்ள ஒரு பதிவு, தற்போது நீக்கப்பட்டிருக்கும் பதிவு, அவர்களுடைய சித்தாந்தம் என்ன என்று எழுந்த கோரிக்கையைக் கேலிசெய்தது. சித்தாந்தம் என்பது பண்டிதர்களுக்கானது; ஆ.ஆ.க-வோ தீர்வு அடிப்படையிலானது; இடதுசாரி, வலதுசாரி ஆகிய இரண்டு தரப்புகளிலிருந்து கிடைக்கும் தீர்வுகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பது என்று அந்தப் பதிவில் ஆ.ஆ.க. தன்னைப் பற்றி விவரித்திருந்தது.
சித்தாந்தம் அற்ற அரசியல் எடுபடுமா?
தீர்வுகள் அடிப்படையிலான, நடைமுறைரீதியிலான அணுகுமுறை என்பதன் கவர்ச்சி சந்தேகம் இல்லாமல் அளப்பரியதுதான். முக்கியமாக, அரசியலின் சந்தர்ப்பவாத அம்சங்களால் நம்பிக்கை இழந்துபோயிருக்கும் மக்கள் இந்த அணுகுமுறையால் மிகவும் கவரப்பட்டிருக்கிறார்கள்.
இடது, வலது என்றும் மதச்சார்பின்மை, மதவாதம் என்றும் அரசியலைப் பாகுபடுத்திப் பார்க்கும் போக்கு அயர்ச்சியையும் சலிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல்வாதிகளும் கட்சிகளும் அற்பக் காரணங்களுக்காக மேற்கண்ட பாகு பாடுகளில் எல்லைகளைக் கூச்சமே இல்லாமல் கடக்கும்போது இன்னும் மோசமாகிறது.
எனினும், வரலாற்று உணர்வு இல்லாமலும், தன் சொந்த வேர்களைப் பற்றிய உணர்வு இல்லாமலும், இன்றைய வளர்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை அறியாமலும் ஒரு கட்சி இயங்க முடியுமா? அண்ணா ஹசாரேவின் இயக்கம் மிகவும் பிற்போக்குத்தனமான இயல்பைக் கொண்டது. இப்படியான தனது கடந்த காலத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமலும் அதை ஆய்வுக்கு உள்ளாக்காமலும், இதை விட்டு விலகி, ஆ.ஆ.க. சற்றே புத்திசாலித்தனமான ஸ்தானத்தை அடைந்திருக்கிறது.
ஆ.ஆ.க-வின் தொண்டர் படையானது சித்தாந்தத்தைச் சுமை என்றே நினைக்கும் முனைப்புடன் இருப்பதோடு அல்லாமல், இந்தக் கட்சியை மகத்தான தனிப்பெரும் நிகழ்வாகப் பார்க்கவே விரும்புகிறார்கள். ஆனால், இது கானல்நீராகிவிடக்கூடும். ஏனெனில், மறக்க வேண்டிய பாடங்கள் என்று வரலாறு நமக்குச் சொல்வதைத் திரும்பவும் நிகழ்த்தினால் மோசமான விளைவுகள்தான் ஏற்படும்.
முந்தைய இயக்கங்கள்
இந்தியாவில் இதற்கு முன் தோன்றிய ஊழல் எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏற்பட்ட கதியைக் கொஞ்சம் பாருங்கள். இந்தியாவில் பொதுமக்கள் இயக்கங்களில் இரண்டு வகைகள், இறுதியில் கட்சிகளின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கின்றன: சுயமரியாதையையும் அடையாளத்தையும் அடிப்படையாகக் கொண்டவர்கள், இந்திய தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியலில் ஊழலையும் மோசமான ஆட்சியையும் எதிர்த்தவர்கள். முதல் வகை, பெரும்பாலும் தி.மு.க., தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கண பரிஷத், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற பிராந்தியக் கட்சிகளை உள்ளடக்கியது.
இரண்டாவது வகை, ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள். அவற்றில் இரண்டு இயக்கங்கள் இந்திய அரசியல் வரலாற்றில் மைல்கற்களாகக் கருதப்படுகின்றன: முதலாவது, 1974-1975 காலகட்டத்தின் ‘முழுப் புரட்சிக்கான அழைப்பு’, இரண்டாவது, 1988-89 காலகட்டத்தின் ‘போஃபர்ஸ் ஊழல் எதிர்ப்பு இயக்கம்’.
முறையே, ஜெயப்பிரகாஷ் நாராயணனாலும் வி.பி.சிங்காலும் வழிநடத்தப்பட்ட இந்த இரண்டு இயக்கங்களும் காங்கிரஸை எதிர்த்து உருவானவையே, இவை இரண்டின் முடிவிலும் அரசியல் கூட்டணிகள் உருவாயின - 1977ல் ஒரு குடையின் கீழ் உருவான ஜனதா கட்சி, 1989-ல் உருவான ஜனதா தளம் கூட்டணி- சித்தாந்தத்தைக் கிடப்பில் போட்டுவிடலாம் என்று மேற்கண்ட இரண்டு கூட்டணிகளின் தலைவர்களும் நினைத்ததால்தான், கடைசியில் அவற்றுக்குச் சீர்குலைவு ஏற்பட்டது. இரண்டு கூட்டணிகளிலுமே
ஆர்.எஸ்.எஸ். இடம்பெற்றிருந்தது. ‘ஊழல் கறை படிந்த’ காங்கிரஸை எதிர்த்துப் போராடுவதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கேற்பும் அவசியம் என்று நினைத்துவிட்டார்கள். இதன் பின்னணியில் சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கிறது.
வலதுசாரி சார்பின் தோற்றுவாய்
இந்த இரண்டு இயக்கங்களின் வலதுசாரி சார்பின் தோற்றுவாய் 1971-ம் ஆண்டுதான். அப்போதுதான் இந்திரா காந்தியின் ‘பேரழிவு’ அரசியலை எதிர்த்து எதிர்க்கட்சிகள் எல்லாம் ‘மாபெரும் கூட்டணி’யை ஏற்படுத்தின. அந்தக் கூட்டணி மோசமாகத் தோல்வியடைந்தது.
ஆனபோதிலும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1974-ம் ஆண்டு விடுத்த முழுப் புரட்சிக்கான அழைப்பும், அப்போது குஜராத்தில் முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டங்களும் ‘மாபெரும் கூட்டணி’யின் அங்கத்தினர் மறுபடியும் ஒருங்கிணைவதற்கான கச்சிதமான சூழலை ஏற்படுத்தித்தந்தது. அந்த அங்கத்தினருக்கு ஜெயப்பிரகாஷ் நம்பகத்தன்மையைக் கொடுத்தார்.
பதிலுக்கு அவர்கள் ஜே.பி-யின் இயக்கத்துக்கு அரசியல் பலத்தைக் கொடுத்தனர். பரஸ்பரமான இந்த ஆதரவால் 1974-லேயே ஜனதா மோர்ச்சா என்ற கட்டுக்கோப்பு இல்லாத கூட்டணி உருவானது. குஜராத்தில் 1975 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸை இந்தக் கூட்டணி தோற்கடித்தது. இந்தப் பின்னடைவும், மக்களவைத் தேர்தலில் ரே பரேலியில் இந்திரா காந்தி வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தன.
காங்கிரஸ் (ஸ்தாபனம்), சுதந்திரா கட்சி, ஜனசங்கம், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றுசேர்ந்து 1971-ல் ‘மாபெரும் கூட்டணி’ உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் (ஸ்தாபனம்) பெரும் முதலாளிகள், அரச குடும்பத்தினர், ஊடகங்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றது. சுதந்திரா கட்சியின் உறுப்பினர்கள் எல்லாம் அரச குடும்பத்தினரும், பெருநிறுவன முதலாளிகளும் தீவிர வலதுசாரிகளும்தான்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்பட்ட ஜனசங்கம், இந்து தேசியம் என்ற குறிக்கோளில் தெளிவாக இருந்தது. இந்தக் குழுக்களோடு சோஷலிஸ்ட் கட்சிகளும் சேர்ந்துகொண்டன; ஏனெனில், இந்தக் கூட்டணியின் பிற கட்சிகளைப் போலவே அவர்களும் இந்திரா காந்தியை வெறுத்தார்கள். இந்திரா காந்தியின் கொள்கைகள் எல்லாம் அழிவுக்கு வழிவகுக்கக் கூடிய அளவுக்கு இடதுசாரி சார்பு கொண்டிருந்ததாக அவர்கள் கருதினார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்காக ஒருங்கிணைந்து உருவான 1974-
1975-ம் ஆண்டின் ‘ஜனதா மோர்ச்சா’ கூட்டணி, காங்கிரஸ் (ஸ்தாபனம்), ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி (இரண்டு சோஷலிஸ்ட் கட்சிகளையும் ஒன்றுசேர்த்து உருவானது), பாரதிய லோக் தளம் ஆகியவற்றை உள்ளடக்கியது. பாரதிய லோக் தளம் என்பது ஏழு கட்சிகளின் கூட்டணி. சரண்சிங் தலைமையிலான பாரதிய கிராந்தி தளமும் சுதந்திரா கட்சியும் அந்தக் கூட்டணியில் அடக்கம். 1977-ல் உருவான ஜனதா கட்சி, காங்கிரஸ் (ஸ்தாபனம்), ஜனசங்கம், பாரதிய லோக் தளம், சோஷலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சேர்க்கை.
குழப்பமாக இருக்கிறதா? மேற்குறிப்பிட்ட பத்தி சொல்வது வேறு எதையுமல்ல, வலதுசாரியின் தொடர்ச்சியைத்தான். 1971-ன் ‘மாபெரும் கூட்டணி’, 1974-75-ன் ‘ஜனதா மோர்ச்சா’, 1977-ன் ஜனதா கட்சி ஆகிய எல்லாவற்றிலும் இடம்பெற்ற உறுப்பினர்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான். இந்தக் கூட்டணிகள் எல்லாவற்றுக்கும் அமைப்புரீதியான ஆதரவை
ஆர்.எஸ்.எஸ். வழங்கியது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜனதா தளம் உருவாகும்போதும் ஆர்.எஸ்.எஸ். அப்படியே ஆதரவு வழங்கியது. உண்மையில், 1989-க்குள் ஜனதா இயக்கத்தின் முன்னணி நட்சத்திரங்கள் எல்லாம் ஒளி மங்கிப் போயின. ஆனால், முன்பு போலவே, ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் அரசியல் வழித்தோன்றலாகிய பாரதிய ஜனதா கட்சியும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றன.
ஆர்.எஸ்.எஸ். மாறிவிட்டதாக ஜெயப்பிரகாஷ் நம்பினார். “ஆர்.எஸ்.எஸ். பெரும் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது/உள்ளாகிக்கொண்டிருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ‘முழுப் புரட்சிக்கான இயக்க’த்தில் இந்த அமைப்புகளை எல்லாம் இணைத்துக்கொள்வதன் மூலம், இவற்றின் மதவாதத் தன்மையை நீக்குவதற்கு நான் முயற்சி செய்திருக்கிறேன். இப்போதோ அவர்கள் மதவாத அமைப்புகள் அல்ல.”
இதற்கு, வழக்கம்போல் ஏளனமான பதில் ஒன்றை வைத்திருந்தார் இந்திரா காந்தி: “ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் உரைகளை யாரெல்லாம் படித்திருக்கிறார்களோ அவர்களே முடிவுசெய்துகொள்ளட்டும் ஆர்.எஸ்.எஸ். எப்படி என்று. இதற்கு முன்பு அவர்கள் போய்ச் சேராத பகுதிகளில் தற்போது கால்பதிக்கத் தற்போது வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படுவது நம் நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் ஆபத்தானது.”
குறுகிய கண்ணோட்டத்துடன் ஜெயப்பிரகாஷ் வழிநடத்திய ‘ஊழலுக்கு எதிரான போராட்டம்’ இறுதியில் தோல்வியில் முடிந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸுடன் ஜனசங்கம் தொடர்ந்து உறவில் இருப்பதை சோஷலிஸ்ட்டுகள் எதிர்த்தார்கள்; இதனால், கடைசியில் ஜனதா அரசு கவிழ்ந்தது. 1989-ல் வி.பி. சிங்கின் அரசும் கிட்டத்தட்ட இதையேதான் செய்தது. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடம் அளித்ததால் பா.ஜ.க. தனது 1984-ன் படுதோல்வியிலிருந்து மீள்வதற்குத் தான் வாய்ப்பளித்துவிட்டதாக மிகவும் தாமதமாகவே வி.பி. சிங் உணர்ந்தார். சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலோ ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் ஒன்று.
சுவாரஸ்யமான மூன்று உண்மைகள் இதனால் புலனாகின்றன. ஊழலுக்கு எதிரான தேசம் தழுவிய எல்லா இயக்கங்களும் காங்கிரஸுக்கு எதிராக உருவானவைதான். இவை எல்லாமுமே தீவிர வலதுசாரி பங்கேற்பைக் கொண்டவை. அதனாலேயே அழிவைத் தேடிக்கொண்டவை. மேற்கண்ட இயக்கங்களில் பங்குகொண்டதால் ஜனசங்கம்/பா.ஜ.க-வுக்கு மதிப்பும் செல்வாக்கும் கிடைத்தது.
விந்தையான ஒற்றுமை
அண்ணாவின் இயக்கத்துக்கும் முந்தைய ஊழல் எதிர்ப்பு இயக்கங்களுக்கும் இடையே விந்தையான ஒற்றுமை இருக்கிறது. ஜெயப்பிரகாஷ், அண்ணா இருவருடைய இயக்கங்களும் அரசையே தூக்கியெறிய முயன்றன. ஊழல், கட்டுப்பாடு இல்லாத பணவீக்கம், அதிகாரத்தில் இருப்போருக்கு எதிராக வெடித்த மக்களின் கோபம் ஆகியவைதான் இரண்டு இயக்கங்கள் தோன்றுவதற்கும் பின்னணி. இன்று அலைக்கற்றை முறைகேடு முதலான ஊழல்கள் மக்களிடையே எழுப்பியது போன்ற அதே வலுவான உணர்வைத்தான் வி.பி. சிங் தலைமையிலான போஃபர்ஸ் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரமும் மக்களிடையே ஏற்படுத்தியது. தனது முன்னோடிகளைப் போலவே அண்ணா ஹசாரேவும் இந்த இயக்கத்தின்போது எந்த சித்தாந்தத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால், பாபா ராம்தேவோடு கை கோத்தார், மோடியை லட்சிய முதலமைச்சராக முன்வைத்தார். அவருடைய தொண்டரான கிரண் பேடி வெளிப்படையாகவே மோடிக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிராக அர்விந்த் கேஜ்ரிவால் மேற்கொண்ட பயணத்தில் பாபா ராம்தேவ்தான் முதல் வழித்துணை. அண்ணா ஹசாரேவை நோக்கிச் சென்றது பிற்பாடுதான். ஆனால், ஆ.ஆ.க-வின் உருவாக்கத்துக்குப் பிறகு, சற்றே முற்போக்கான திசையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மல்லிகா சாராபாயைப் போன்ற ஒருவர் இந்தக் கட்சியில் சேருவதற்கு இதுதான் காரணம். அதே நேரத்தில், மிகவும் பிற்போக்கானவரும் ஆணாதிக்கவாதியுமான குமார் விஸ்வாஸ் போன்றவர்களுக்கும் ஆ.ஆ.க. தஞ்சம் அளித்தி ருக்கிறது. அவருடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகளையெல்லாம் பார்த்தால், அருவருப்புதான் தோன்றும்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகவும் முக்கியமானதுதான். ஆனால், சித்தாந்தமே இல்லாமல் செயல்படுவது இந்தப் போராட்டத்துக்கு அழிவைத் தருவதாக முடிந்துவிடக் கூடும். கடந்த காலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுச் செயல்படுதல்; முறையான, ஒட்டுமொத்த சீரமைப்புடன் முற்போக்கான, தெளிவான சிந்தனையை ஒன்றுசேர்த்தல்; இவற்றை மேற்கொள்ளும் கட்சியாக உருவாவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு ஆ.ஆ.க-வுக்கு இருக்கிறது.
தொடர்புக்கு: vidya.s@thehindu.co.in,
© தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: ஆசை