சிறப்புக் கட்டுரைகள்

தாதாபாய் நௌரோஜி கண்ட இந்திய தேசியம்

செய்திப்பிரிவு

மதம், மொழி, இன பேதமற்ற ஒன்றுபட்ட தேசியம், வறுமை அகற்றும் தேசியப் பொருளாதாரம் என்னும் இரு உயர் லட்சியங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியச் சமூகத்துக்குச் சொன்ன தீர்க்கதரிசி தாதாபாய் நெளரோஜி. வறுமையை ஒழிப்பதே இந்திய தேசியத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். வல்லரசாக அல்ல, வறுமையற்ற தேசமாக இந்தியா உயர வேண்டும் என கனவு கண்டவர் அவர். “இந்தியாவின் முதுபெரும் கிழவர்” என்று போற்றப்பட்ட தாதாபாய் நௌரோஜி மறைந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைந்தாலும், அவரது சிந்தனைகள் இன்றைய இந்தியச் சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கின்றன.

1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்குவதற்கு உதவிய அவர், அதன் தலைவராக 1886 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1893 மற்றும் 1906-ம் ஆண்டுகளில் மீண்டும் இரு முறை காங்கிரஸின் தலைவர் பதவியை வகித்தார். இந்தியா பழமையிலிருந்து விடுபட்டு நவீன யுகத்துக்கு மாறுவதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்தவர்களில் மிக முக்கியமானவர் அவர். அவரது குரல் ஆங்கிலேயர் ஆட்சியின் அநீதிகளுக்கு எதிரான ஒற்றைக் குரலாக ஓங்கி ஒலித்தது. அன்னிபெசன்ட் திலகர், கோகலே, காந்தி, ஜின்னா என்ற பலரும் அவரைத் தங்கள் தலைவராக ஏற்றனர்.

சுரண்டலைச் சுட்டிக்காட்டியவர்

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் அவர் கண்ட வறுமை, பஞ்சம், பட்டினிச் சாவுகள் அவரைப் பெரிதும் பாதித்தன. இவற்றுக்கு என்ன காரணம் என ஆழமாக ஆய்வு செய்தார். எண்ணற்றத் தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் திரட்டினார். பிரிட்டிஷ் அரசின் நிதி நிர்வாகத்துக்கும், இந்தியாவின் வறுமைக்கும் இடையில் உள்ள பொதிந்து கிடந்த தகவல்களைக் கவனத்துடன் சேகரித்தார். பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர் அவர் கண்ட முடிவு இந்தியாவில் நடப்பது ஆட்சி அல்ல கொள்ளை என்பதே ஆகும். இந்தியாவைப் பொருளாதார வேட்டை நிலமாக பிரிட்டன் மாற்றிவிட்டது. தொடர்ந்து நடந்த பொருளாதார வேட்டையின் காரணமாக இந்தியாவின் அரிய வளங்கள் தங்குதடையில்லாது கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. ரத்த நாளங்களை வெட்டி ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதுபோல் இந்தியாவின் வளங்களை, பிரிட்டன் வடித்தெடுத்தது. ‘வடித்தெடுக்கும் கொள்கை’(ட்ரெய்ன் தியரி) என்ற பிரிட்டிஷ் ஆட்சி குறித்த புரிதலை தாதாபாய் ஏற்படுத்தினார்.

1867-ல் அவர் எழுதி வெளியிட்ட ‘வறுமையும், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும்’ என்ற நூல் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பெரும் தாக்கத்தை, அதிர்வுகளை உண்டாக்கியது. அதன் விளைவாக பிரிட்டிஷ் ஆட்சி குறித்து சந்தேகங்களும் அச்சங்களும் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. அவரது ஆய்வின்படி 1857-ம் வருடம் முதல் 1867-ம் வருடம் வரை சுமார் முப்பது கோடி பிரிட்டிஷ் பவுண்டுகள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குக் கொள்ளையாகப் போய்ச் சேர்ந்திருந்தது. இவை திருடப்பட்ட செல்வம் என்பது அவரின் முடிவு. பொருளாதார விடுதலையை அரசியல் விடுதலைக்கு முன்னோடியாக எடுத்துச் சென்றதே தாதாபாய் நௌரோஜியின் மிக முக்கியப் பங்களிப்பு. நௌரோஜியின் சிந்தனைகள் அவரின் காலத்தைக் காட்டிலும் தற்போதைய இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைச் சீராய்வு செய்வதற்கு மிக உதவியாக இருக்கின்றன. சுதேசி உணர்வு இந்தியாவில் முளைவிட அவரது சிந்தனைகளே காரணமாயிருந்தன. வெளிநாட்டவருடனான பொருளாதார உறவுகள் இந்திய மக்களுக்கு எதிரானதாக, குறிப்பாக ஏழைகளுக்கு எதிரான விளைவுகளை தரக்கூடும் என அவர் எச்சரித்தார்.

சுயராஜ்ய இயக்கத்தின் தொடக்கம்

1906-ல் ஆண்டு வங்கப்பிரிவினை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான பெருங்கொந்தளிப்பை இந்திய அரசியலில் ஏற்படுத்தியது. ஆனால், தேசிய இயக்கம் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளால் வலுவிழந்துபோனது.

இந்த நிலையில் இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டு மாநாடு கல்கத் தாவில் கூட்டப்பட்டது. தேசிய இயக்கம் பிளவுபடும் ஆபத்தான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியையும், தேசிய இயக்கத்தையும் சரியாக வழிநடத்த தகுந்த தலைவர் என அனைவராலும் ஒருமு கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாதாபாய் நௌரோஜி.

1906-ல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம் தேசிய இயக்கத்தின் ஒரே லட்சியம் என நௌரோஜி அறிவித்தார். அதோடு அவர் நின்றுவிடவில்லை. சுதேசி இயக்கம், அந்நியப் பொருட்களை ஒழித்தல் என்ற இரு புரட்சிகரமான செயல்திட்டங்களை தேசிய இயக்கத்தில் முன்வைத்தார். சுயராஜ்யம் அரசியல் விடுதலைக்கானது; சுதேசி அந்நியப் பொருட்களை விலக்குவது, பொருளாதார விடுதலைக்கானது. சுதேசி இல்லாது சுயராஜ்யம் இருக்க முடியாது என்பது மிகத் தெளிவான அணுகுமுறை. விடுதலை இயக்கத்தின் எல்லைகளை, நோக்கங்களை அவர் விரிவுபடுத்தினார்.

‘பொருளாதார தேசியம்’ என்ற புதுச் சிந்தனை அவரால் எழுந்தது. காந்தி இந்தச் சிந்தனையை மேலும் விரிவுபடுத்தினார். சுதேசி இல்லாத சுயராஜ்யம் உயிர் இல்லாத உடல் போன்றது என்பது காந்தியின் கருத்து. சுயராஜ்ய, சுதேசி இயக்கங்கள் வெகு ஜனங்களை இந்திய தேசிய இயக்கத்துக்குள் கொண்டுவந்தன. எளிய மக்களின் கவனத்தை அது ஈர்த்தது. விடுதலை இயக்கம் நாடு முழுவதுமான பேரியக்கமாக உருவாவதற்கான அடித்தளத்தை அவர் அமைத்தார். தனது இறுதிக்காலத்தில் பம்பாயில் வசித்த அவர் வயதினால் தளர்ந்தபோதிலும் தேசிய இயக்கத்துக்கு வழிகாட்டிவந்தார். குறிப்பாக திலகர், கோகலே, காந்தி போன்ற தலைவர்கள் அவரிடம் ஆலோசனை பெற்றனர். “இந்திய தேசியத்தின் பிதாமகர், தேசத்தின் தந்தை, விடுதலை இயக்கத்துக்கு வித்திட்டவர்”என காந்தி அவருக்குப் புகழாரம் சூட்டியது மிகப் பொருத்தமானது!

- வ. ரகுபதி, பேராசிரியர், காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம்,

தொடர்புக்கு: ragugri@rediffmail.com

ஜூன் 30 - தாதாபாய் நௌரோஜியின் 100-வது ஆண்டு நினைவுநாள்

SCROLL FOR NEXT