சிறப்புக் கட்டுரைகள்

ஏன் என் புத்தகம் பேசப்படவில்லை?

ஆர்.அபிலாஷ்

புத்தகம் வெளியிட்டிருக்கும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்த ஆவலாதி இருக்கும். நம்மைப் பிறர் வேண்டுமென்றே கவனிக்கவில்லை, திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்கள், நம்மிடம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை, இதற்குப் பின் ஒரு சதித்திட்டம் உள்ளது என்று கூடத் தோன்றும். சில நண்பர்களின் புத்தகங்கள் வெளியானதும் ஒரு பரபரப்பு தோன்றும். குறிப்பாய், சமூக வலைதளங்களில். யாராவது அதைக் குறிப்பிட்டு எழுதலாம். ஒரு நாளிதழில் ஒரு குறிப்பு வரலாம். அப்போது நம் வயிறு எரியும். ஆனால், இந்த எதிர்பார்ப்பு, ஏமாற்றம், வயிற்றெரிச்சல், தர்மாவேசம் எல்லாம் நம் கற்பனையால் விளைகிறவை என்பது நமக்குச் சில வருடங்களில் புரிந்துவிடும்.

எழுத்துலகம் என்பது மிக மிகச் சிறியது. ஒரு எளிய குடும்பத்தின் வளைகாப்புக்குக் கூடுகிற கூட்டத்தை எடுத்துக்கொண்டால் அதுதான் வாசகர்களும் எழுத்தாளர்களும் சேரும் நம் கூட்டம். இதற்குள்தான் பரபரப்பும் புரொமோஷனும் நடக்கிறது. சமூக வலைதளங்களில் இன்று சினிமாவும் அரசியலும் பேசும் இடத்தில் இலக்கிய சர்ச்சைகளும் நடப்பதால் நமக்கு மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும் ஒரு மாயத்தோற்றம் கிடைக்கிறது.

பணமும் நேரமும் செலவழித்துச் செயல்பட்டால் புத்தகம் வெளியாகும் சில வாரங்கள் முன்பே கடுமையாய் உழைத்தால் நிச்சயம் உங்கள் நூல் பற்றி ஒரு பரபரப்பு ஏற்படுத்தலாம். ஆனால், இதற்கு நீங்கள் கடுமையாய் உழைக்க வேண்டும். 9-5 வேலையில் இருந்துகொண்டு, வீடு திரும்பும் வழியில் காய்கறி வாங்கிக்கொண்டு, நேரத்துக்கு பஸ் வருமா என கவலைப்பட்டுக்கொண்டு, மனைவி திட்டுவாளா என நடுங்கிக்கொண்டு தினம் தினம் அல்லல்படுவோருக்கு இந்த மாதிரியான புரொமோஷன் எல்லாம் சரிப்படாது.

சில வருடங்களுக்கு முன்பு எஸ். ராமகிருஷ்ணன் தன் நூல் வெளியீடு ஒன்றின்போது வருத்தப்பட்டார்: “புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடுவது கிணற்றில் கற்களைப் போடுவது போல் இருக்கிறது.” அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? ஏனென்றால் மற்றொரு சமூகத்தில் அவர் இப்படியான பணிகளைச் செய்திருந்தால் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார். இங்கு எதுவும் நடக்காது.

சமீபத்தில் அராத்துவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயமோகனும் இதே உணர்வைதான் வெளிப்படுத்தினார். ”என் நாவலுக்கு மூன்று பேர்தான் முன்பதிவு செய்வார்கள் என்று நினைத்தேன். 300 பேர் முன்பதிவு செய்த ஆச்சரியம் எனக்கு இன்னும் நீங்கவில்லை. நம்மூருக்கு இதுவே அதிகம்,” என்றார் அவர். ஆனால் இந்த 300 எனும் எண்ணைத் தொடுவதற்கு அவர் கடந்த கால்நூற்றாண்டாக வருடாவருடம் ஆயிரக் கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறார். நூறே பக்கம் எழுதிவிட்டு நாமெல்லாம் ஒன்றுமே இங்கு எதிர்பார்க்கக் கூடாது.

தமிழில் இளம் எழுத்தாளர்கள் எதையுமே எதிர்பாராத துறவி போல் இருக்க வேண்டும். இதற்குத் துணிவு இல்லாதவர்கள் இங்கு வரவே கூடாது என்பேன்!

- ஆர். அபிலாஷின் ஃபேஸ்புக் பதிவிலிருந்து சில பகுதிகள்.

SCROLL FOR NEXT