'அமெரிக்க அரசுக்கு நெருக்கடி', 'கடன்வரம்பை உயர்த்து வதில் முட்டுக்கட்டை', 'சிக்கலைத் தீர்ப்பதில் முழுத் தோல்வி' என்றெல்லாம் உலகம் முழுக்கப் பத்திரிகைகள் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்துச் செய்திகளை வெளியிடுகின்றன.
அமெரிக்க அரசு அலுவலகங்கள்தானே மூடப்பட்டிருக்கின்றன? இந்தியா போன்ற நாடுகளுக்கு அதனால் என்ன பாதிப்பு? 'கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அமெரிக்கா தவணை தவறுவது லெமேன் வங்கியின் வீழ்ச்சியைவிடப் பெரிது' என்று 'புளூம்பர்க் பிசினஸ் வீக்'என்ற பத்திரிகை அலறுகிறது. 'முழுத் தோல்வி' அல்லது 'பெரும் கேடு'என்று வர்ணிக்கக் கூடிய வகையில் இப்போது என்ன நடந்துவிட்டது?
2011-ல் இதே போல அரசின் கடன்பெறும் வரம்பை உயர்த்த குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மறுத்தபோதும் பத்திரிகைகள் இப்படித்தான் அலறின. அந்தத் தலைப்புகளால் பீதியடைந்து அரசில் இருப்போர் பணிந்தனர், நிபந்தனை விதித்தவர்கள் வெற்றிக்களிப்பில் மிதந்தனர். இப்போதும் 'கடன்பெறும் வரம்பை மேலும் உயர்த்த வேண்டும்'என்பதுதான் அதிபரின் கோரிக்கை. ஆனால், இப்போது யாரும் அந்தக் கோரிக்கை குறித்து பீதியடையவேயில்லை. கடன் பத்திரங்களுக்கான பணத்தை உரிய காலத்தில் திருப்பித்தர முடியாமல் அரசாங்கம் தடுமாற வேண்டும் என்றே குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்போது விரும்புகிறார்கள்.
அமெரிக்க அரசின் கடன் பெறும் வரம்பை உயர்த்த முடியாமல் தோல்வி ஏற்படுமானால், அமெரிக்க பெடரல் அரசு முடங்குவதைவிட வேறுவிதமான விபரீதங்களை ஏற்படுத்திவிடும். அதனால் ஏற்படும் வலியைத் தாங்கவே முடியாது. குடியரசுக் கட்சியினர் எதிர்பார்ப்பதைப்போல அரசின் அளவு சுருங்காது, அதன் சொத்துகள் குறையாது, ஆனால் அதன் நாணயம், நம்பகத்தன்மை சுருங்கிவிடும். 'தான் வெளியிட்ட கடன் பத்திரத்துக்கு உரிய பணத்தைத் திருப்பித்தர தவறிய நாடு' என்ற அவப் பெயர் அமெரிக்காவுக்கு ஏற்படும். 'அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரம் செல்லுமா செல்லாதா என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது' என்ற அரசியல் சட்டத்தில் 14-வது திருத்தம் செய்யப்பட்டது. இப்போது இருப்பதைப் போன்ற நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகச் சேர்க்கப்பட்டதுதான் அது.
இப்போது என்ன நடக்கிறது? நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒரு சிறு குழு, இந்தக் கடன் வரம்பு உயர்வு கோரிக்கையை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப் பார்க்கிறது. தான் விரும்பும் நிபந்தனையை ஏற்காவிட்டால் அரசின் செலவு அனுமதி கோரிக்கைக்கே ஒப்புதல் தர முடியாது என்கிறது. உலகத்திலேயே எந்த ஆபத்துக்கும் உள்ளாகாத ஒரு நிதி முதலீடு இருக்கிறது என்றால் அது அமெரிக்க அரசின் கடன் பத்திரங்கள்தான். அது உலகின் பெரும்பாலான நாடுகளின் நிதி ஆதாரத்தை இழுத்துக்கட்டியிருக்கும் சூத்திரக் கயிறாகும். அமெரிக்கக் கடன் பத்திரங்களுக்கு எப்போதுமே தேவை இருந்துகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், கடன்பத்திரம் முதிர்வுற்ற பிறகும் உரிய பணம் கைக்கு வரவில்லை என்றால், அதன் மீதான நம்பகத்தன்மை குலையும். தொடர் விளைவாக மற்ற எல்லா வகை சொத்துகளையும் மதிப்பிழக்க வைக்கும். பங்குச் சந்தையில் புள்ளிகள் சரிந்து பெரிய வீழ்ச்சி ஏற்படும். வங்கிகள் தரும் கடன்கள் மீதான வட்டி வீதம் அதிகரிக்கும். அடமானக் கடன்களுக்கான வட்டி வீதம் கடுமையாக உயரும். இப்போது அதிகரித்துவரும் வீடமைப்புத் திட்டங்களை இத்தகைய வட்டி உயர்வு சீர்குலைத்துவிடும். வட்டி வீதம் உயர்ந்தால் அரசுத்துறை, தான் வாங்கிய கடன்களுக்கான வட்டியையே உயர்த்தித் தர நேரிடும். அதனால், அமெரிக்க அரசின் நீண்டகாலக் கடன் சுமை அதிகரிக்கும். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எதிர்ப்பாளர்கள் இந்த நீண்டகாலக் கடன்களைக் குறைப்பதைத்தான் முக்கிய அம்சமாக வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்! அவர்களுடைய கோரிக்கைக்கு எதிரான செயலை அவர்களே செய்துவருகின்றனர்!
லெமேன் வங்கிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். அந்த வங்கி மீது மக்களுக்கு நம்பிக்கை போனவுடனேயே வங்கியால் குறுகிய காலக் கடன் வாங்கி, தன்னிடம் பணம் கோரியவர்களுக்குக் கொடுக்க முடியாமல்போனது. வங்கிகள் தங்களுக்கு நேரிடும் நெருக்கடிகளிலிருந்து மீளக் குறுகிய காலக் கடன் பெறுவது அவசியம். அதற்கு வழியே இல்லாமல்போனதால்தான் அந்த வங்கி வேகமாக நொடித்தது. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களுக்கும் அதே கதி ஏற்படலாம். அதை வாங்கி வைத்திருப்பவர்கள், அதை உரிய காலத்தில் டாலர்களாக மாற்ற முடியாதோ என்று சந்தேகப்பட்டால், கிடைத்த விலைக்கு விற்க முற்படுவார்கள். மீண்டும் அது பெரிய சிக்கலில்தான் கொண்டுபோய்விடும். அரசுக் கடன் பத்திரங்களே வேண்டாம் என்று ஒதுக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும். நிலைமை இப்படியே போனால் கடுமையான முடிவுகளை எடுத்தே தீர வேண்டும்.
“யாருக்கு முதலில் கடன் தொகையைத் திருப்பிக் கொடுப்பது, யாருக்கு அப்புறம் கொடுப்பது என்பதை முடிவுசெய்ய முடியவில்லை” என்று அரசு கருவூலத்துறை இப்போதே சொல்கிறது. கடன் பத்திரங்களுக்குப் பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலைமை அரசுக்கு ஏற்பட்டால், யாருக்கு முதலில் பணத்தைத் திருப்பித் தர வேண்டும், யாரைக் காத்திருக்கச் சொல்லலாம் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம்கூட அதனிடமிருந்து போய்விடும்.
அமெரிக்காவில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழான பயனாளிகளுக்குப் பணம் கிடைப்பதற்கு முன்னால், சீனத்தில் உள்ள கடன் பத்திர முதலீட்டாளர்களுக்குப் பணம் தந்தாக வேண்டிய நிலைமை அரசுக்கு ஏற்படலாம். இப்படிச் சொல்வதன் மூலம் அமெரிக்கர்களுக்குக் கோபம் ஏற்படலாம். அமெரிக்காவில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வரும் பயனாளிகளுக்குப் பணம் தராமல் இருப்பதைவிட, கடன் பத்திரங்களை வாங்கி வைத்திருப்பவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தராததே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
முதலீட்டாளர்களுக்குச் சேர வேண்டிய தொகையுடன், வட்டியாகவும் ஆண்டுதோறும் நூற்றுக் கணக்கான டாலர்களைக் கூடுதலாகத் தர வேண்டியிருக்கும். 2011-ல் இதே போல ஏற்பட்ட நெருக்கடியின்போது நுகர்வோரின் நம்பிக்கையில் 22% அளவுக்குச் சரிவு ஏற்பட்டது. நுகர்வோருக்கு நம்பிக்கை குறைந்தால், அவர்கள் தங்களுடைய செலவுகளைச் சுருக்கிக்கொள்வார்கள். வியாபாரத்திலும் முதலீடும் செலவும் குறையும். இப்படித்தான் தொழில் - வர்த்தகத் துறைகளில் சுணக்கம் அதிகமாகும்.
'நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக' குடியரசுக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் அதிதீவிர நடவடிக்கைகளே பொருளாதார நிலைத்தன்மையைப் பாதித்துவிடும். அமெரிக்கக் கடன்பத்திரம் என்றாலே உலகின் எந்தப் பகுதியிலும் செல்லும் என்பதால் அதற்குச் செல்வாக்கு அதிகம். அப்படி அனைவரும் நம்பிக்கை வைக்கும் சொத்து தங்களுடையது என்பதால், அமெரிக்காவுக்கும் நன்மைகள் அதிகம். அதையெல்லாம் சீர்குலைப்பதா என்ற கேள்வியைக் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளட்டும்.
- நியூயார்க் டைம்ஸ்
தமிழில்: சாரி