டெங்கு பயம் மீண்டும் இந்தியாவை ஆட்கொண்டிருக்கிறது; தமிழகமும் தப்பவில்லை
டெங்கு பயம் மீண்டும் இந்தியாவை ஆட்கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் புது டெல்லியில் தொடங்கிப் பல மாநிலங்களில் டெங்கு தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 8 மாதங்களில் கேரளத்தில் 5,192 பேரும், கர்நாடகத்தில் 3,788 பேரும், மேற்கு வங்கத்தில் 5,129 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகமும் தப்பவில்லை.
மத்திய அமைச்சகம் தந்திருக்கும் புள்ளிவிவரப்படி, ஜனவரி தொடங்கி செப்டம்பர் முதல் வாரம் வரை தமிழ்நாட்டில் மட்டும் 2,357 பேர் டெங்குவால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். இதில் 5 பேர் இறந்திருக்கிறார்கள். சென்ற ஆண்டோடு ஒப்பிடும்போது இது இரு மடங்கு அதிகம்.
எது டெங்கு?
டெங்கு (Dengue) வைரஸ் கிருமிகள்தான் டெங்கு காய்ச்சலுக்குக் காரணம். இந்தக் கிருமிகளைச் சுமந்து திரியும் ‘ஏடிஸ் எஜிப்தி’ (Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது நோய் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி ஆகியவை டெங்குவுக்கே உரித்தான அறிகுறிகள். உடலில் அரிப்பு ஏற்பட்டுச் சிவப்புப் புள்ளிகள் தோன்றுவதும் முக்கிய அறிகுறி. எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயை இனங்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள்.
பெரும்பாலானோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) உருவாகும். இவர்கள்தான் ஆபத்து மிகுந்தவர்கள். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை ( Platelets ) அழித்துவிடும். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல், ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை ஆகியவற்றில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இதற்கான சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.
இதுநாள் வரை டெங்கு நோயாளியிடமிருந்துதான் மற்றவர்களுக்கு நோய் பரவும் என்று சொல்லப்பட்டது. இப்போது, ‘எச்ஐவி கிருமியைப் போல, உடலில் டெங்கு கிருமிகள் இருந்தும் வெளியில் தெரியாமல் பல ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களிடமிருந்தும் அடுத்தவர்களுக்கு நோய் பரவலாம்’ என்கிறது புதிய ஆராய்ச்சி. எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிக முக்கியம். இதன்மூலம் டெங்குவின் ஆபத்தான பின்விளைவுகளைத் தவிர்க்க முடியும். என்எஸ்1 ஆன்டிஜென் (NS1 Antigen), டெங்கு எலிசா ஐ.ஜி.எம் (Dengue ELISA IgM),பிசி.ஆர் (PCR) ஆகிய நவீனப் பரிசோதனைகளில் டெங்கு பாதிப்பு உடனே தெரியும். இந்த வசதிகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்தால், ஏழை எளியவர்கள் இந்தக் காய்ச்சலால் உயிரிழப்பதைத் தவிர்க்கலாம்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஒரே வழி கொசுக்களை ஒழிப்பதுதான். கடந்த சில ஆண்டுகளாக, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்தான் நம் நாட்டில் டெங்கு அதிகமாகப் பரவுகிறது. மத்திய - மாநில அரசுகள் இந்தப் பருவத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
உதவும் நவீனத் தொழில்நுட்பங்கள்
கொசுக்களை ஒழிக்க உலக அளவில் பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்கள் கைகொடுக்கின்றன. உதாரணத்துக்கு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, பிற நீர்நிலைகளில் ‘கம்பூசியா அஃபினிஸ்’
(Gambusia affinis) எனும் மீன்களை வளர்க்கின்றனர். இவை கொசுக்களின் லார்வாக்களைத் தின்றுவிடும். இதனால் கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பில்லாமல் போகும். கொசுக்களை வேரோடு அழிக்கும் தொழில்நுட்பம் இது.
பிரேசில் நாட்டில் கொசுக்களை மலடாக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, குறிப்பிட்ட பருவத்துக்குப் பிறகு கொசுக்கள் வளர்வதற்கு டெட்ராசைக்ளின் மருந்து தேவைப்படும் வகையில், கொசுக்களின் மரபணுக்களை மாற்றி அமைத்து, அந்தக் கொசுக்களை ஒரு பண்ணையில் வளர்த்து வெளியில் விடுகின்றனர். இந்தக் கொசுக்களோடு மற்ற கொசுக்கள் இணைந்து இனப்பெருக்கம் செய்து பிறக்கிற கொசுக்கள், தொடர்ந்து வளர வேண்டுமானால் அவற்றுக்கு டெட்ராசைக்ளின் மருந்து தேவைப்படும். அது கிடைக்காதபோது அவை வளரவும் முடியாமல், இனப்பெருக்கமும் செய்ய முடியாமல் இறந்துவிடும்.
அடுத்ததாக, ஒரு நவீன நடவடிக்கை வடக்கு ஆஸ்திரேலியாவில் கேய்ர்ன்ஸ் (Cairns) நகரில் நடந்துள்ளது. வால்பேட்சியா ( Wolbachia ) எனும் பாக்டீரியாவை ஆண், பெண் கொசுக்களின் உடலில் செலுத்திவிடுகின்றனர். இந்த பாக்டீரியா உள்ள ஆண் கொசுவோடு இது இல்லாத பெண் கொசு இனவிருத்தி செய்யுமானால், அந்தக் கொசுவால் முட்டை பொரிக்க முடியாது. பாக்டீரியா உள்ள பெண் கொசுவுடன் பாக்டீரியா உள்ள ஆண் கொசு இனவிருத்தி செய்யுமானால், பிறக்கிற கொசுவுக்குள் வால்பேட்சியா பாக்டீரியா நுழைந்துவிடும். இப்படிப் புதிதாகப் பிறக்கிற கோடிக்கணக்கான கொசுக்களுக்குள் இந்தப் பாக்டீரியா புகுந்து புதிய கருத்தரிப்புக்குத் தடை போடும். ‘இதனால் கொசு உற்பத்தி குறையும். டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவுவது கட்டாயம் குறையும்’ என்கிறது ‘லேன்சட்’ மருத்துவ ஆராய்ச்சி இதழ். இந்தியாவிலும் இம்மாதிரியான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கு நம் அரசுகள் புதிய திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.
மக்கள் கடமை
டெங்குவை ஒழிப்பதில் மக்களுக்கும் கடமை உண்டு. வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பூந்தொட்டிகள், அழகு ஜாடிகள், சிறு பாத்திரங்கள், தகர டப்பாக்கள், பயன்படாத டயர்கள், தேங்காய்ச் சிரட்டைகள், ஆட்டு உரல் போன்றவற்றில் தண்ணீர் தேங்கக் கூடாது. தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போதெல்லாம் தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கும் வழக்கம் எல்லா ஊர்களிலும் உள்ளது. அப்போது அந்தத் தொட்டிகளைச் சரியாக மூடி வைக்க வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, சாக்கடைகளைச் சுத்தப்படுத்துவது போன்றவற்றில் சுகாதாரப் பணியாளர்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கொசுக்களை ஒழிக்கும் புகை அடிக்கும் பணிகளை உள்ளாட்சிகள் தீவிரப்படுத்த வேண்டும். குடிநீர்த் தொட்டிகளில் குளோரின் கலக்க வேண்டும். இம்மாதிரியான நடவடிக்கைகள்தான் ஓரளவேனும் கொசுக்களைக் கட்டுப்படுத்த உதவும்.
- கு.கணேசன்,
பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com