அன்னை தெரசா 1997 செப்டம்பர் 5-ல் காலமானதற்குப் பிறகு, குறைந்த கால அவகாசத்தில், அதாவது 19 ஆண்டுகால இடைவெளியில், செப்டம்பர் 4-ல், அவருக்குப் ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. குணப்படுத்தவே முடியாத அளவுக்கு மூளையில் ஏற்பட்டிருந்த தொற்றால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையை எதிர்நோக்கிக் காத்திருந்த பிரேசிலைச் சேர்ந்த நோயாளி ஒருவரைத் தனது பிரார்த்தனையின் மூலம் அன்னை தெரசா குணப்படுத்தினார் என்று சொல்லி, அதை அவரது இரண்டாவது அற்புதச் செயலாக போப் பிரான்சிஸ் சமீபத்தில் அங்கீகரித்தார். 2003 அக்டோபர் 19-ல் அன்னை தெரசாவுக்கு ‘ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டு, 13 ஆண்டுகாலத்துக்குப் பிறகு, வாடிகன் நகரின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னை தெரசாவுக்கு ‘ஆசீர்வதிக்கப்பட்டவர்’ எனும் பட்டம் வழங்கப்படுவதற்கு, ஓர் அற்புதச் செயல் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் இரண்டாவது அற்புதச் செயல் நிரூபணமானால் ‘புனிதர்’ பட்டம் வழங்கலாம் என்றும் தேவாலயம் கூறியது. என்னைப் பொறுத்தவரை, அன்னை தெரசாவின் வாழ்க்கையே அசலானதொரு அற்புதம் என்று நம்புகிறேன். அவரது குழந்தைப் பருவம் முதல் இறப்பு வரை அவரிடம் இருந்த தெய்வீகத்தன்மையின் இழை ஒருபோதும் குன்றாமல் இருந்தது. வெளிப்படையான நற்பண்பும், பரிவும் கொண்ட அன்னை தெரசா, தனது வாழ்நாளில் ஒரு புனிதராகவே வழிபடப்பட்டார் என்றே நானும் உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்களும் நம்புகிறோம்.
நம்பிக்கையின் ஆரம்ப விதை
எங்கோ வெகு தொலைவில் உள்ள இந்தியாவில் தொண்டாற்றுவதுதான் தனது வாழ்வின் பணி என்று முடிவெடுத்தபோது, அவருக்கு 18 வயது. 1910 ஆகஸ்ட் 26-ல் அன்னை தெரசா பிறந்தார். அவர் பிறந்த ஸ்காப்ஜே நகரம், வங்காளத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்தியாவில் தொண்டாற்றுவது தொடர்பாக இளம் வயதில் அவரது ஆர்வத்தைத் தூண்டிய சில யூகோஸ்லோவிய கத்தோலிக்கர்களைத் தவிர, இந்தியா எந்தப் பக்கம் இருக்கிறது என்று அங்கிருந்த யாருக்கும் தெரியாது.
எனினும், அவரது நம்பிக்கையின் ஆரம்ப விதைகளும், தீர்மானமான முடிவும் நெருங்கிய பாசப்பிணைப்பு கொண்ட தனது குடும்பத்தை விட்டு வெளியேற அவரைத் தூண்டின. கிறிஸ்தவ கன்னியாஸ்திரீகளுக்குப் பயிற்சி அளிக்கும் லொரேட்டோ ஆர்டர் எனும் மத நிறுவனத்தில் சேர்ந்த பின்னர், இந்தியாவுக்குச் செல்லும் வழியை அவர் கண்டடைந்தார். அந்த கன்னியாஸ்திரீகளின் தலைமையகம் கொல்கத்தாவில் இருந்தது.
அங்கு சுமார் 20 ஆண்டுகள் ஆசிரியையாகப் பணியாற்றிய அவருக்கு, தெருக்களிலும் குடிசைப் பகுதிகளிலும் வாழும் ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவரது உள்ளுணர்வு தூண்டியது. ஒரு கடைநிலை சேவகராக அல்லாமல், மதரீதியிலான உணர்வுகளுடனேயே, ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ எனும் அறக்கட்டளையை அன்னை தெரசா உருவாக்கிக்கொள்ள வாடிகன் அனுமதியளித்தது.
இறைவனுக்குச் சேவை
1948-ல் கொல்கத்தாவின் நடைபாதைகள் முழுவதும், தேசப் பிரிவினை காரணமாக வீடிழந்த லட்சக்கணக்கான மக்களால் நிரம்பி வழிந்தன. ஏற்கெனவே, வங்கப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த பரிதாபத்துக்குரிய மக்கள் கொல்கத்தாவில் இருந்தனர். வசிக்க வீடில்லாமல், நோய், விரக்தியில் தத்தளித்துக்கொண்டிருந்த அம்மக்களின் துயரக் கடலில், 38 வயதான அந்த கன்னியாஸ்திரீ காலடி எடுத்துவைத்தார். வழக்கமான கன்னியாஸ்திரீ பாணி உடையை அல்ல, நகராட்சித் துப்புரவாளர்கள் அணியும் உடையைப் போன்று சேலை அணிந்திருந்தார் அன்னை தெரசா. துணைக்கு உதவியாளர் இல்லை.
பணமும் இல்லை. லோரெட்டோ கான்வென்ட்டின் பாதுகாப்பை விட்டு வெளியேறி, பரம ஏழைகள், கைவிடப்பட்ட கைக்குழந்தைகள், சமூகத்தால் விலக்கிவைக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் செத்துக்கொண்டிருக்கும் தொழுநோயாளிகளின் வடிவில் உள்ள இறைவனுக்குச் சேவை செய்யுமாறு இறைவன் தன்னைப் பணித்திருக்கும் ரகசிய அழைப்பு மட்டுமே அவரிடம் இருந்தது.
1948 வாக்கில், சொல்லிக்கொள்ளுமாறு எந்த சுகாதாரத் திட்டமும் அரசிடம் இல்லாத நிலையில், ஒவ்வொரு மூலையிலும் மரணத்தையே அவர் காண நேர்ந்தது. தெருவில் மரணத்துடன் போராடிக்கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட அன்னை தெரசா, அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்றார். இறக்கப்போகும் ஒரு மனிதனுக்காக மருத்துவமனைப் படுக்கையை வீணாக்க முடியாது என்று சொல்லி, அம்மனிதரை அனுமதிக்க மறுத்துவிட்டது மருத்துவமனை. மருத்துவமனைக்கு முன்னர் அமர்ந்து அன்னை தெரசா போராட்டம் நடத்திய பின்னரே, மருத்துவமனை நிர்வாகம் இறங்கிவந்தது. சில மணி நேரங்களிலேயே அந்த மனிதர் இறந்துபோனார்.
தொடரும் கொள்கை
அதன் பிறகுதான், மருத்துவமனைகளால் நிராகரிக்கப்படும் நோயாளிகளைக் கொண்டு சென்று மருத்துவ உதவிகள் செய்யவும் (கொஞ்சம் மருத்துவப் பயிற்சியும் அவர் முடித்திருந்தார்), இறக்கும் தறுவாயிலாவது சற்றே இளைப்பாறி, கொஞ்சமேனும் மரியாதையுடன் அவர்கள் இறப்பதற்கு வழிசெய்யவும் தேவையான ஒரு இடத்தை அவர் தேடத் தொடங்கினார். அதிகார மையங்கள் பலவற்றிடம் சென்று கெஞ்சினார்.
இறுதியாக, கொல்கத்தா நகராட்சி அதிகாரி ஒருவர், காளி கோயிலுக்கு அருகில் உள்ள யாத்ரீகர்களுக்கான கூடத்தை அவருக்கு வழங்கினார். மருத்துவமனைகளால் கைவிடப்பட்டு இறக்கும் தறுவாயில் உள்ளவர்களை அங்கு கொண்டுவருமாறு, போலீஸாரிடமும் நகராட்சி அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார் அன்னை தெரசா. அந்தக் கொள்கை இன்றும் தொடர்கிறது.
அந்தக் கூடத்துக்கு நான் பல முறை சென்றிருக்கிறேன். அன்னை தெரசா ஏன் ஒரு மருத்துவமனையை உருவாக்கவில்லை என்று ஆங்கில எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் விமர்சித்ததைப் போல், அவரிடம் நான் கேட்க வேண்டியிருக்கவில்லை. ஒரு மருத்துவமனை என்பது அன்னை தெரசாவின் கன்னியாஸ்திரீகளை ஒரு ஒற்றை நிறுவனத்துடன் பிணைத்துவைத்துவிடும் என்று எனக்குத் தெரியும்.
பிறகு, சாலையில் விழுந்துகிடப்பவர்களை யார் கவனிப்பார்கள்? தெருவில் அநாதையாகக் கைவிடப்பட்ட குழந்தை, வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நோயாளிகள், முதியவர்கள், அருகில் வருவதற்கோ தொடுவதற்கோகூட யாரும் விரும்பாத தொழுநோயாளிகள், எயிட்ஸ் நோயாளிகளை யார் கவனிப்பார்கள்? தெருக்களில் நாம் காணும் ஏழைகளுக்கு ஏதேனும் செய்ய நம்மில் எத்தனை பேர் நமது காரிலிருந்து இறங்குகிறோம்? அன்னை தெரசாவை அவசரப்பட்டு விமர்சிப்பவர்கள், தங்கள் சொந்தக் கைகளால் யாருக்குமே எந்த உதவியும் செய்ய விரும்பாதவர்கள் என்பதுதான் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயம்.
நான் பார்த்துக்கொள்வேன்
மதரீதியான ஏகாதிபத்தியவாதி என்று அழைக்கப்பட்ட, பொதுவாகவே புனிதர் என்று கருதப்பட்ட அன்னை தெரசா, பல தருணங்களில் மிகச் சாதாரணமான பெண்ணாகவே இருந்தாலும், தனது காலகட்டத்தில் அசாதாரணமான வாழ்க்கை வாழ்ந்தவர். அபரிமிதமான நம்பிக்கையை மட்டுமே ஆயுதமாகத் தரித்துக்கொண்ட அவர், சிறிய ஆனால் உறுதியான நடவடிக்கையில் காலடி எடுத்துவைத்தார். 19 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இறந்தபோது, 123 நாடுகளில் கிளை பரப்பியிருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கியிருந்தார். பரம ஏழைகளுக்கு அந்நிறுவனம் சேவை செய்துவருகிறது.
தனது வாழ்நாள் முழுவதும் கத்தோலிக்க விசுவாசத்துடனேயே இருந்தார் என்றாலும், பிற மதத்தினரை விலக்கிவைக்கும் பாணி அல்ல அவரது மத நம்பிக்கை. தான் சேவை செய்யும் எவரையும், துன்பத்தில் இருக்கும் இயேசுவாகவே கருதிய அன்னை தெரசா, எல்லா வித மத நம்பிக்கை கொண்டவர்களையும் ஒன்றாக அணுகியவர். அவரைக் குறை சொல்பவர்கள், அவரை வலதுசாரி சதித்திட்டங்களின் வடிவமாகக் கருதினர். கருக்கலைப்புக்கு எதிராகவும், கருத்தடைக்கு எதிராகவும் வாடிகன் கொண்டிருக்கும் கருத்துகளின் முதன்மையான பிரச்சாரகர் என்றெல்லாம்கூட சொன்னார்கள்.
உண்மையில், அவருக்கு அந்தக் கருத்துதான் இருந்தது. அதுதொடர்பான விமர்சனங்கள் அவரைப் பாதிக்கவில்லை. எனக்கும் அவருக்கும் இடையில் ஒரு போதும் சரிவராத கருத்து அது. மக்கள்தொகை அதிகரிப்ப தால் வறுமையும் அதிகரிக்கும் என்ற வாதத்தை முன்வைத்த தாமஸ் ராபர்ட் மால்துஸின் சூத்திரத்தைப் பற்றி நான் குறிப்பிடும்போதெல்லாம், ‘புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு குழந்தையையும் நான் பார்த்துக்கொள்வேன்’ என்றே என்னிடம் சொல்வார் அன்னை தெரசா.
வாடிகனின் இதயத்தில் முத்திரை
ஹெயிட்டியை ஆண்ட சர்வாதிகாரியான டுவாலியே போன்ற நம்பகத்தன்மையற்ற மனிதர்களிடமெல்லாம் ஏன் பணம் வாங்குகிறீர்கள் என்று அவரது சுயசரிதையை எழுதுவதற்கான ஆய்வின் நோக்கில் கேட்டிருக்கிறேன். அவரது பதில் சுருக்கமானது. தானம் தருவதற்கு ஒவ்வொரு வருக்கும் உரிமை இருக்கிறது என்றார். ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கு உணவிடும் ஆயிரக்கணக்கான மக்களிடம் எப்படி வேறுபாடு பார்க்க முடியும்? “அவர் களை மதிப்பிட எனக்கு உரிமையில்லை. அந்த உரிமை இறைவனுக்கு மட்டும்தான் உண்டு” என்றார். “நான் சம் பளம் வாங்குவதில்லை. அரசு மானியம் வாங்குவதில்லை. தேவாலயத்தின் நிதி வாங்குவதில்லை. எதுவும் இல்லை. நான் பணம் கேட்பதில்லை. ஆனால், பணம் கொடுக்க மக்களுக்கு உரிமை உண்டு” என்றார் அன்னை தெரசா.
இறுதியில், வாடிகனின் இதயத்தில் அவர் தனது முத்திரையை மென்மையாக அதேசமயம் மிகச் சரியாகப் பதித்துச் சென்றிருக்கிறார்.
நவீன் சாவ்லா, அன்னை தெரசாவின் சுயசரிதையை எழுதியவர்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
© ‘தி இந்து’ (ஆங்கிலம்) தமிழில்: வெ.சந்திரமோகன்