சிறப்புக் கட்டுரைகள்

அர்விந்த் கேஜ்ரிவால்

செய்திப்பிரிவு

ஏனென்றால், தொடங்கிய ஓராண்டுக்குள் அரசியல் அறிமுகங்களுடன் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்கிய அவருடைய ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ், பா.ஜ.க. இரு தேசியக் கட்சிகளின் ஆட்சிக் கனவையும் தகர்த்தெறிந்தது. டெல்லி மக்களால் தங்கள் சொந்த பாட்டிபோல் பார்க்கப்பட்ட, மூன்று முறை முதல்வரான ஷீலா தீட்சித்தை 25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஏனென்றால், எந்த காங்கிரஸ் எதிர்ப்பில், 28 இடங்களை வென்றாரோ, அந்த காங்கிரஸுக்கே வலிய வந்து ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு தரும் நிர்பந்தத்தை இவர் உருவாக்கினார். ராகுல் காந்தியையும் ஆளும் காங்கிரஸையும் இவருடைய வெற்றி புரட்டிப்போட்டது. “ஆம் ஆத்மியிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று ராகுல் காந்தியைப் பகிரங்கமாகச் சொல்லவைத்தார்.

ஏனென்றால், ஊழலில் திளைத்து ரௌடி ராஜாங்கம் நடத்தும் இந்தியாவின் பல கட்சிகள் இவருடைய எழுச்சியால் கலங்கிப்போயிருக்கின்றன.

ஏனென்றால், இன்றைக்கு தேசத்தின் மிக செல்வாக்கான சொல்லாக ‘சாமானியன்’ (ஆம் ஆத்மி) என்ற சொல்லை மாற்றியிருக்கிறார். அரசியல் ஒரு சாக்கடை; அதில் நல்லவர்களுக்கோ பண பலம் இல்லாதவர்களுக்கோ இடம் இல்லை என்ற அவநம்பிக்கையை உடைத்து, தேசத்தின் எண்ணற்ற சாமானியர்கள் மத்தியில் அரசியல் நன்னம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

"என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் நான் இந்தப் பயணத்தில் இறங்கினேன். நாம் எவ்வளவு மோசமான ஒரு சூழலில் நாட்டை அவர்களிடம் ஒப்படைக்கப்போகிறோம் என்ற குற்ற உணர்வுதான் அரசியலை நோக்கி என்னைத் தெருவில் இறங்கவைத்தது. ஒருவேளை நான் தோற்றுப்போனால், அது ஒரு அர்விந்த் கேஜ்ரிவாலின் தோல்வியாக மட்டும் இருக்காது. இந்த நாட்டின் ஒவ்வொரு சாமானியனின் தோல்வியாகவும் இருக்கும். நான் தோற்கக் கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்!" - அர்விந்த் கேஜ்ரிவால்

SCROLL FOR NEXT