சிறப்புக் கட்டுரைகள்

அறிவோம் நம் மொழியை: பஞ்சபூதங்களும் மொழி வடிவாகும்

ஆசை

வாசகர்களே கடந்த சில வாரங்களாக ஐம்புலன்களின் உலகில் திரிந்தோம். இனி வரும் வாரங்களில் ஐம்பூதங்களின் உலகில் திரியலாம்.

மேற்கத்திய மரபில் ஐம்பூதங்கள் கிடையாது. ஆகாயம் நீங்கலாக, அங்கே நான்கு பூதங்கள்தான் (எலி மன்ட்ஸ்- elements). ஆகாயம் என்று அழைக்கப்படும் வெளியையும் ஒரு அடிப்படை இயற்கைப் பொருளாக வைத்திருப்பது இந்திய மரபின் சிறப்பு. பிரபஞ்சம் முதல் நம் உடல் வரை ஐம்பூதங்களின் சேர்க்கைதான் என்று இங்கே நம்பப்படுகிறது. பௌதிகம் என்ற சொல்லுக்கு ஐம்பூதங்களால் ஆனது என்பது பொருள். உயிரற்ற நமது உடலை பூதவுடல் என்று மரி யாதையாகச் சொல்வதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். அதே போல், பஞ்சதம் என்ற ஒரு சொல் மரணத்தைக் குறிக்க முன்பு பயன்பட்டி ருக்கிறது. பஞ்ச பூதங்களும் பிரிந்து தனித்தனியாவதால் மரணம் ஏற் படும் என்பது இதன் அடிப்படைப் பொருள். பஞ்சபூதங்களின் சேர்க்கை இயற்கையாக நடைபெற்றதேயொழிய கடவுளின் முயற்சியால் அல்ல என்று நம்பும் உலகாயதவாதத் தத்துவம்தான் பூதவாதம்.

ஐம்பூதங்கள் தொடர்பான சில சொற்கள்

அலோகம் - ஐம்பூதங்களுக்குத் தொடர் பில்லாதது (தற்காலத்தில் அலோகம் என்ற சொல்லுக்கு உலோகம் அல்லாதது என்பது பொருள்.)

கால் - ஐம்பூதம்

தாது - ஐம்பூதம்

பஞ்சதை - ஐம்பூதம்; மரணம்

பஞ்சபூதம் - ஐம்பூதம்

பூதபஞ்சகம் - ஐம்பூதம்

பூதம் - ஐம்பூதம்

பூதவிகாரம் - ஐம்பூதங்களின் மாறுபாடு

பூதவீடு - ஐம்பூதங்களால் ஆகிய உடல்

ஐம்பூதங்களில் அடுத்த வாரம் காற் றில் ஏறிப் பறக்கப்போகிறோம். வாச கர்கள் ‘காற்று’ குறித்த சொற்களை இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.

வட்டாரச் சொல் அறிவோம்

ஆள்காட்டிப் பறவையில் செம் மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing) என்றொரு வகை இருக்கிறது. இந்தப் பறவையை வேலூரை ஒட்டிய பகுதிகளில் ‘தித்தித்தூ குருவி’ என்று அழைப்பார்கள் என அந்தப் பகுதியைச் சேர்ந்த தோழி ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். வயல் வெளிகளிலும், திறந்த வெளிகளிலும் திரிந்துகொண்டிருக்கும் இந்தப் பறவை ஆளரவம் கேட்டாலோ ஆபத்து நேரிடுவதுபோல் தோன் றினாலோ ‘தித்தித்தூ… தித்தித்தூ’ என்று அலறியபடி அங்கு மிங்கும் பறந்துகொண்டிருக்கும். அந்தப் பறவையின் ஒலியை ஆங்கி லத்தில் ‘டிட் ஹி டூ இட்’(Did-he-do-it?) ‘அவனா செய்தான்?’ என்ற பொருள் வரும்படி ஒலிபெயர்ப்பு செய்வார்கள். அதனாலேயே அந்தப் பறவைக்கு ஆங்கிலத்தில் ‘டிட்-ஹி-டூ-இட் பேர்ட்’ என்ற பெயரும் உண்டு. அதைப் போன்றே தமிழிலும் ஒரு பெயர் இருக் கிறது என்று அறிந்துகொண்டதில் பெரு மகிழ்ச்சி!

வாசகர்களே, உங்கள் வட்டாரத்தின் தனித்தன்மை மிக்க சொற்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சொல் தேடல்

கடந்த வாரம் கேட்டிருந்த ‘ஈக் வினாக்ஸ்’ (equinox) என்ற சொல்லுக்கு வாசகர்களின் பரிந்துரைகளில் சில:

தே. சேஷாத்திரி - அல்பகல் சமநாள்

கோ. மன்றவாணன் - சமப்பொழுது, சமன்பொழுது, சமப்பொழுதுநாள், பகலிரவு சமநாள், இராப்பகல் சமநாள்,

நடுநிலக் கதிர்நாள், சமப்பகலிரவு

சுபா- மத்திம நாள்

ஆறுமுகம் - சமகால நாள்

அரு. சிங்காரவேலு - சமநாள், சமதினம்,

சமப் பொழுது, சீர் நாள், சீர் பொழுது

அடுத்த வாரத்துக்கான சொல் தேடல்

ஸோல்ஸ்டிஸ் (solstice) என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

- ஆசை

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

SCROLL FOR NEXT