விவசாயம் செய்கிறவர்களாக வடகிழக்குப் பருவ மழையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். மக்கள் கிடாவெட்டி அம்மனுக்குப் பொங்கல் வைத்து மழையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். திண்டுக்கல் பக்கம் ஒரு ஊரில் மழையை வேண்டி ஒரே நாளில் 150 கிடா வெட்டியிருக்கிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் ஆண்டாண்டுகளாகத் தொடரும் ஒரு துயரத்திற்காக இந்த வடகிழக்குப் பருவமழையைச் சபிப்பவர்களும் இருக்கிறார்கள்.
முதன் முதலாக சென்னை வந்தபோது கண்ட காட்சியொன்று இப்போதும் நினைவில் இருக்கிறது. அப்போது கொட்டிக்கொண்டிருந்தது மழை. நேரு ஸ்டேடிய வாசலில் ஒரு குடும்பம், பிளாஸ்டிக் தார் பாய்களால் தங்களை மூடிக்கொண்டு அந்த மழையில் அந்தச் சாலையில் அமர்ந்திருந்திருந்தது மறக்கவே முடியாதது.
சென்னை சர்வதேசப் பெருமை மிக்க ஒரு நகரம். இங்கு கிடைக்காத உணவுகள் இல்லை. இங்கில்லாத வசதிகள் இல்லை. சென்னையின் நட்சத்திர விடுதிகளை எடுத்துக்கொள்வோம். சென்னையின் சர்வதேச முகத்திற்கு ஒரு உதாரணம்தானே இவை? ஆனால், அவற்றுக்கு நேரெதிரான சித்திரமாய் அந்த விடுதிகளுக்குப் நூறடி தூரத்தில், எவ்வளவு பேர் வீடில்லாத ஆதரவற்றவர்களாக மழைக் காலங்களில் ஒதுங்க இடமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்?
அரசுசார் அமைப்பு ஒன்றின் கணக்கெடுப்பின்படியே, சென்னையில் மட்டும் வீடில்லாமல் சாலைகளில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை 40,533. கிட்டத்தட்ட 11,000 குடும்பங்கள் அவை. இவற்றில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எண்ணிக்கை கணிசமானது. கடை வாசல்கள், நடைமேடைகள், மேம்பாலங்கள் அடியில் என எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் தங்களைச் செருகிக்கொள்கின்றனர். தாம்பத்யம் தொடங்கி அத்தனை ஆசாபாசங்களையும் வானத்தைப் பார்த்தபடிதான் இவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
தலைக்கு மேல் ஒரு கூரை என்பதுதான் மனிதனின் அதிகபட்ச எதிர்பார்ப்பு. வாழ்வில் எப்போதாவது ஒருநாள் அண்ணாந்து பார்த்து நட்சத்திரங்களை எண்ணி குதூகலப்படலாம். ஆனால், திறந்த வானத்தின் அடியில்தான் வாழ்க்கையின் அத்தனை விஷயங்களும் என்று விதிக்கப்பட்டால்? பொந்துகளில் வசிக்கும் எலிகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமில்லாத வாழ்க்கை யைத்தான் அவர்களுக்கு இந்தப் பளபளப்பான நகரம் வழங்கியிருக்கிறது. இவர்களில் மூன்று தலைமுறைகளாகத் தங்கியிருப்பவர்களும் இருக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.
ஒரு மழைக்கே புலம்பி ஒப்பாரி வைத்த நம்மால் வருடம்தோறும் நடக்கும் இந்தத் துயரைக் கண்டும் காணாததுபோல நடந்து கடக்க முடிகிறது?