சிறப்புக் கட்டுரைகள்

இசை பிரியர்களுக்கான இனிமையான படிப்புகள்

ஜெயபிரகாஷ் காந்தி

உலகில் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று கூறலாம். நவீன யுகத்தில் இசைக் கலையின் அபரீத வளர்ச்சியை எடுத்துக்காட்ட வேண்டுமெனில், மருத்துவ துறையில் மியூசிக் தெரபி கொடுத்து, நோயை குணமாக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 5 நட்சத்திர ஹோட்டல்களிலும், வெளிநாடுகளிலும் கர்னாடிக் மியூசிக்குக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஒவ்வொரு நாளும்,ஸ்டார் ஹோட்டல்களில் இந்தியன் கிளாசிக் மியூசிக் இசைக்க விட்டு வாடிக்கையாளர்களை கவர்கின்றனர். சில ஹோட்டல்களில் மேலும் ஒரு படி மேலே சென்று, ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய இசையை, கலைஞர்களை பணிக்கு நியமித்து தங்களது தரத்தை மேம்படுத்திக் காட்டுகின்றனர். கோயில் விசேஷம் முதல் திருமண விழாக்கள் வரை இசைக்கு என்று தனி இடத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்.

இசையை முழு மனதுடன் விரும்பி, ஆர்வமுடன் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவர்கள், இசை தொடர்பான படிப்பை பயிலலாம். தமிழகத்தில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் தமிழ்நாடு இசைக் கல்லூரி, அமைதியான சூழலில் அற்புதமாக அமைந்துள்ளது. பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமே, இசைப் பள்ளியில் சேர முடியும் என்ற தவறான கருத்து உள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே, இசைக் கல்லூரியில் சேர்ந்து பயிலலாம். இதற்கு 13 வயது முதல் 18 வயது உள்ளவர்கள் வரை கல்லூரியில் சேர்த்துக் கொள்கின்றனர்.

இசை கலைமணி பட்டயப் படிப்பில், வயலின், குரலிசை, வீணை ஆகியன கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வாத்திய கலைமணி பட்டயப் படிப்பில், புல்லாங்குழல், மிருதங்கம், கடம், தவில், நாதஸ்வரம் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. பெண்களுக்கான ஆடர் கலைமணி பட்டயப் படிப்பில் பரதம் கற்றுக் கொடுக்கின்றனர். இவை மூன்று ஆண்டுகள் படிப்பு. இரண்டு ஆண்டு படிப்பான, இளநிலை இசை கலைமணி பட்டயப்படிப்பில் குரலிசை கற்பிக்கப்படுகிறது.

பாடல் ஆசிரியராக செல்ல விரும்புபவர்களுக்கு ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு உள்ளது. மேலும், கிராமத்தின் பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் வகையில், நாட்டுப்புறக் கலை பட்டயப் படிப்பு 3 ஆண்டுகள் கற்பிக்கப்படுகிறது. இதே கல்லூரியில் மாலை நேர வகுப்புக்கு செல்ல விரும்புபவர்கள் 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், கலைக் காவிரி நுண்கலை கல்லூரி பரத நாட்டியத்துக்கான பிரத்யேக கல்லூரியாக விளங்குகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள், பி.எஃப்.ஏ., (பேச்சுலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்) பரத நாட்டிய வகுப்பில் சேரலாம். 10-ம் வகுப்பு முடித்தவர்கள் கூட, நேரடியாக ஐந்தாண்டு பரத வகுப்பில் சேர்ந்து பயில முடியும். ஜெர்மன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அயல் நாடுகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் இக்கல்லூரியில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் நேரடி பயிற்சியாக வெளியிடங்களுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் சென்று கோயில் விசேஷம், பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்கின்றனர்.

இசையில் தனியாத ஆர்வம் கொண்டவர்கள், சாதிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்களின் தனித்திறன் மூலம் சாதனையில் உச்சத்தை அடைய நல்லதொரு வாய்ப்பை இசைக்கல்லூரிகள் ஏற்படுத்திக் கொடுக்க காத்திருக்கின்றன.

SCROLL FOR NEXT