லேசர் அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையைச் சரிசெய்துகொள்வதன் பின்னணியில், விண்வெளித் தொழில்நுட்பத்தின் கை மறைந்திருக்கிறது. கண்ணுக்கும் விண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றுகிறதா?
விஷயத்துக்குள் போகும்முன், ஒரு பரிசோதனை செய்து பார்ப்போம். சுவரில் தொங்குகிற கடிகாரத்தில் பார்வையைக் குவியுங்கள். பார்வையை விலக்காமல், தலையை இடவலமாக ஆட்டியும், மேலும் கீழும் அசைத்தும், ஒரு பக்கமாகச் தலைசாய்த்தும் பாருங்கள். தலையசைவு எப்படியிருந்தாலும் காணும் காட்சியில் மாற்றமில்லை அல்லவா? தலையைச் சாய்த்துப் பார்த்தாலும் கடிகாரம் நேராகத்தானே தெரிகிறது.
ஆனால், கேமராவை எடுத்துக்கொள்வோம். வீடியோ எடுக்கும் மோடில் வைத்துக்கொண்டு கேமராவை அதேபோல அசையுங்கள், சாயுங்கள். என்னாகும்? கேமராவை அசைத்தால் படம் தெளிவற்றும், சாய்த்து எடுத்தால் படம் சாய்ந்தும் தென்படுகிறது அல்லவா?
இந்தக் குளறுபடி நம் மூளைக்கு ஏற்படாமல் தடுப்பது, நம் உள்காதுக்குள் உள்ள ஒரு ‘ரசமட்டம்’. கட்டுமானப் பணியின்போது, தளமட்டம் நேராக இருக்கிறதா என்று பார்க்க, ரசமட்டக் கருவியைப் பயன்படுத்துவோம் அல்லவா? அதைப் போலவே நம் உள்காதுக்குள் ஒரு திரவமும், அதைத் தொட்டபடி ஒரு விசேஷ எலும்பும் இருக்கிறது. கணப்பொழுதுகூட விடாமல், நம் உடலின் நிலை குறித்து மூளைக்குத் தகவல் தெரிவித்துக்கொண்டே இருக்கிறது இந்த அமைப்பு. இடம், திசை குறித்த உணர்வையும், நமது உடல்மட்ட உணர்வையும் இந்தச் செய்திகளின் வழியாக அறிந்துகொண்டு, அதற்கேற்ப கண்களில் பதியும் பிம்பத்தைச் சரிசெய்து தெளிவான பார்வைக் காட்சியை ஏற்படுத்துகிறது நம் மூளை. அதாவது, தலை அசையும்போது, அதற்கு ஈடுசெய்வதுபோல கண்விழியும் அசைந்து, தெளிவாக பார்வைக்காட்சிக்கு வழிவகுக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும், நாம் நேராக இருக்கிறோமா, தலைகீழாக இருக்கிறோமா என்று எப்படி நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது? புவியீர்ப்பு புலமானது கீழ்நோக்கிய திசையைப் பிசகில்லாமல் நமக்குத் தெரிவித்துவிடுவதால், அதனைக் குறியாகக்கொண்டு கீழே மேலே உள்ளிட்ட திசை உணர்வுகளை மூளை பெற்றுவிடுகிறது. ஆனால், விண்வெளியில் இதுபோன்ற உணர்வுகளை நாம் பெற முடியாது. ஏனென்றால், அங்கே ஈர்ப்பு விசை கிடையாது.
இதனால், விண்கலங்களில் இருப்பவர்கள் எது கீழே, எது மேலே என்கிற உணர்வை அவ்வளவு சுலபமாக அறிந்துகொள்ள முடியாது. உடல் சமநிலையே பார்வைச் சமநிலைக்கு அடிப்படை என்பதால், விண்வெளி வீரர்கள் எப்படி பார்வைக் காட்சி பெறுகின்றனர் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குடியிருப்பில், விண்வெளி வீரர்களால் எப்படி கணினித்திரை மீது பார்வையைக் குவிக்க முடிகிறது என்பது ஆராயப்பட்டது. இதற்காக ஹெல்மெட் போல் தலையில் அணிந்துகொள்ளக்கூடிய, கண்விழி செல்தட கண்காணிப்புக் கருவியை (Eye tracking Device) உருவாக்கி, அதன் வழியே விண்வெளி வீரர்களின் கண்விழி சலனத்தை அளந்து படம்பிடித்து ஆராய்ந்தார்கள்.
நமது கண்விழி அனிச்சையாகவே நொடிக்கு 100 தடவை என்ற வேகத்தில் அங்குமிங்கும் அசைவது அந்த ஆய்வில் தெரியவந்தது. அறுவை சிகிச்சையின் போதும்கூட, நம் கண்விழி அவ்வாறு அசையும். இந்தச் சலனத்தைக் கவனித்து நுணுக்கமாக கருவிழி பகுதியில் வேண்டிய அளவு திசுக்களை லேசர் கதிர் கொண்டு அழித்து சரி செய்ய, அந்த விண்வெளிக் கருவியைச் சற்று மேம்படுத்திப் பயன்படுத்துகிறார்கள் நமது மருத்துவர்கள். அறுவை சிகிச்சை துல்லியமாக அமைவதற்கு இதுவே காரணம்.
- த.வி. வெங்கடேஸ்வரன், அறிவியல் எழுத்தாளர் மற்றும் மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி.
தொடர்புக்கு: tvv123@gmail.com