சிறப்புக் கட்டுரைகள்

மறக்கப்பட்ட போர்; மறைக்கப்பட்ட ரணங்கள்!

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பின்னர், அமெரிக்கா மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. சர்வதேசப் பொறுப்புகள் தொடர்பான வல்லரசின் விதிகளை மாற்றி எழுதும் ட்ரம்பின் பணி நடந்துகொண்டிருக்கிறது. அதேசமயம், முந்தைய அதிபர் ஒபாமாவின் சர்வதேசப் பயணங்களை நினைவுகூர்வது முக்கியமானது. கடந்த செப்டம்பரில் லாவோஸ் தலைநகர் வியன்டியானில் நடந்த தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்த ஒபாமா, அமெரிக்காவின் கடந்தகால நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கேட்கும் தொனியில் பேசினார். “லாவோஸில் அமெரிக்கா நடந்துகொண்ட நிகழ்வுகளின் வரலாற்றைப் பார்க்கும்போது, லாவோஸ் நலம்பெற உதவுவது அமெரிக்காவின் தார்மிகக் கடமை என்று நம்புகிறேன்” என்றார் ஒபாமா.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் மீதும் ஜெர்மனி மீதும் வீசிய குண்டுகளைவிட அதிகமாக, 1960-களிலும் 1970-களின் தொடக்கத்திலும் லாவோஸ் மீது எண்ணற்ற குண்டுகளை அமெரிக்கா வீசியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். லாவோஸின் பல பகுதிகளில் வெடிக்காமல் இன்றும் கிடக்கும் குண்டுகளை அப்புறப்படுத்தும் பணிக்காக அமெரிக்கா வழங்கும் நிதியுதவியை இரண்டு மடங்காக்குவதாகவும் (கிட்டத்தட்ட ரூ.200 கோடி) உறுதியளித்தார். நிலப் பகுதிகளால் சூழப்பட்ட நாடான லாவோஸ் மீது நிகழ்த்தப்பட்ட சேதங்களுக்கும், அதற்கு இழப்பீடாக இதுவரை அந்நாட்டுக்கு அளிக்கப் பட்டிருக்கும் உதவிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிக அதிகம்.

தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா நிகழ்த்திய பனிப்போரின் நீண்ட அத்தியாயம் எந்த அளவுக்கு மறக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அதைவிட ஆச்சரியப்படுத்தும் விஷயம்.

சமீபத்தில் ஒரு புதிய புத்தகம் வெளி யாகியிருக்கிறது. அமெரிக்கப் பத்திரிகை யாளர் ஜோஷுவா குர்லாண்ட்ஸிக் எழுதிய ‘எ கிரேட் ப்ளேஸ் டு ஹேவ் எ வார்: அமெரிக்கா இன் லாவோஸ் அண்ட் தி பர்த் ஆஃப் எ மிலிட்டரி சிஐஏ’ எனும் அந்தப் புத்தகம், கம்யூனிஸத்தைக் கட்டுப்படுத்த லாவோஸில் அமெரிக்கா நடத்திய ரகசியப் போர் பற்றிப் பேசுகிறது. புத்தகத்தில் ஜோஷுவா குர்லாண்ட்ஸிக் இப்படிக் குறிப்பிடுகிறார்: “சீட்டுக் கட்டு சரிவதுபோல், ஒவ்வொரு நாடும் கம்யூனிஸமயமாகி வந்த நிலையில், சீனாவிலிருந்தும் வடக்கு வியட்நாமிலிருந்தும், தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளுக்கு கம்யூனிஸம் பரவுவதைத் தடுப்பதற்கு வசதியாக, லாவோஸை ஒரு தடுப்புச் சுவராக அமெரிக்க அதிபர் ஐசனோவரும் அவரது அதிகாரிகளும் கருதினர்.”

உண்மையில், தனக்குப் பின்னர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்கவிருந்த ஜான் எஃப்.கென்னடியிடம், “லாவோஸ்தான் உலகில் வெளியுறவுக் கொள்கை தொடர்பான மிக முக்கியமான விவகாரம்” என்று ஐசனோவர் கூறியதாகக் குறிப்பிடுகிறார் குர்லாண்ட்ஸிக். வட வியட்நாம் ஆதரவு கொண்ட ‘பாதேட் லாவோ’ எனும் கம்யூனிஸ இயக்கத்துக்கு எதிராக லாவோஸ் நாட்டின் மொங் பழங்குடியினத்தவருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் ‘ஆபரேஷன் மொமெண்டம்’ எனும் திட்டத்துக்கு சிஐஏ அனுமதி பெற்றது. அந்தத் திட்டத்தை விரிவாக்கி ரகசியப் போரில் சிஐஏ ஈடுபட முடிவுசெய்யப்பட்டது. “அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, சிஐஏ தலைமையில் நடத்தப்பட்ட ரகசியப் போர் அது” என்கிறார் குர்லாண்ட்ஸிக். லாவோஸ் போர் சிஐஏ-வை பெரும் அளவுக்கு மாற்றியது என்றும், எதிர்காலத்தில் மத்திய அமெரிக்க நாடுகள் தொடங்கி, ஒபாமாவின் மேற்பார்வையில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் போர் வரை பல நாடுகளில் போர் நடத்த சிஐஏவுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது என்றும் குறிப்பிடுகிறார் குர்லாண்ட்ஸிக்.

லாவோஸ் போரில் பங்கேற்ற சிஐஏ அதிகாரிகள் பலர், பின்னாட்களில் உலகின் பல பகுதிகளில் நடந்த போர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்தினர். இரண்டே இரண்டு பேர் விரக்தியடைந்த நிலைக்குச் சென்றனர். ஒருவர் சிஐஏ அதிகாரியான பில் லேய்ர். மற்றொருவர், மொங் பழங்குடியினத் தலைவரும் கம்யூனிஸ எதிர்ப்பாளருமான வாங் பாவோ. இவர்கள் இருவர் தொடர்பாக, புத்தகத்தின் தொடக்கத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு. “என்ன ஆனாலும் சரி, மொங் மக்களைக் கைவிட மாட்டோம் என்று அமெரிக்கர்கள் உறுதியளித்தனர்” என்கிறார் வாங் பாவோ. ஆனால், அப்படி எந்த உறுதிமொழியும் அளிக்கப்பட்டதாகத் தனக்கு நினைவில்லை என்று பில் லேய்ர் மறுக்கிறார். இதுபோன்ற உறுதிமொழிகள் தொடர்பாக எழுத்துபூர்வமாக சிஐஏ எந்த உறுதிமொழியும் தரவில்லை என்பது தனிக் கதை!

SCROLL FOR NEXT