புத்தகக் காட்சி இன்றுடன் இன்னும் 3 நாட்களில் நிறைவடைய விருக்கும் இந்தத் தருணத்தில் புத்தகக் காதலர்களுக்கு ஒரு செய்தி.
பல பதிப்பகங்களின் அரங்குகளில், நம்பவே முடியாத அளவுக்குத் தள்ளுபடி விலையில் மிகச் சிறந்த புத்தகங்கள் கிடைக்கின்றன. வழக்கமாகவே புத்தகக் காட்சியில் எல்லாப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இந்த ஆண்டு தள்ளுபடியில் ஒரு புரட்சியே நடக்கிறது என்றே சொல்லலாம்.
அரசு சார்ந்த புத்தக அரங்குகளில் 20% வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் ஃபவுண்டேஷன் போன்ற புத்தக ஸ்டால்களில் பழைய புத்தகங்களைக் குறைவான விலையில் வாங்கலாம். சாகித்ய அகாடமி, அடையாளம், காலச்சுவடு போன்ற அரங்குகளில் 20% முதல் 60% வரையிலும் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் கிடைக்கின்றன. லேசாகக் கிழிந்த புத்தகங்களையும், மழையில் நனைந்த புத்தகங்களையும் பல பதிப்பகங்கள் சிறப்புத் தள்ளுபடியில் விற்பனை செய்கின்றன. பல அரங்குகளில் 20 ரூபாய், 10 ரூபாய்க்குக் கூட புத்தகங்கள் கிடைக்கின்றன.
கடந்த டிசம்பரில் சென்னையைப் புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்த பதிப்பகங்கள், கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே இந்தப் புத்தகக் காட்சியில் கலந்துகொண்டிருக்கின்றன. பல்வேறு சிரமங்களுக்கு இடையில் முக்கியத்துவம் வாய்ந்த, தவறவிடக் கூடாத புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கும் பதிப்பகங்கள் வாசகர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. நம் அறிவுப் பசி தீர்க்க உழைக்கும் பதிப்புலகத்தின் நீடித்த வளர்ச்சி நம் சமூகத்தைச் செழிக்கச் செய்யும் முக்கியக் காரணிகளில் ஒன்று என்பதை மறந்துவிடலாகாது. புத்தகக் காட்சி இம்முறை பெரிய அளவில் சூடுபிடிக்காத நிலையில் பெரிய அளவில் புத்தகங்கள் விற்பனையாகாததால் கடைசி மூன்று நாட்களை நினைத்து பெரிய எதிர்பார்ப்போடு பதிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இழப்புகளோடு இருக்கும் பதிப்பாளர்கள் வருகிற மூன்று நாட்கள்தான் ஏதோ ஒருவகையில் ஆறுதலாக அமையும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். தள்ளுபடியில் கிடைக்கும் புத்தகங்களை வாங்க முந்திக்கொள்ளுங்கள் வாசகர்களே!