சிறப்புக் கட்டுரைகள்

புள்ளி (விவர) ராஜாக்கள்

செய்திப்பிரிவு

புள்ளிவிவர மேத்தமேடிக்ஸில் ஐநாவை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. ரெண்டாயிரத்தி எட்டில் உலகில் எத்தனை லட்சம் பேர் அகதிகளாக இருந்தார்கள்? அந்த எண்ணிக்கை ரெண்டாயிரத்தி ஒன்பதில் எவ்வளவாக உயர்ந்தது? தற்போதைய புவி நிலவரம் என்ன? ஐரோப்பிய யூனியனில் இருக்கிற பல நல்ல தேசங்களில் அடைக்கலம் போன அகதிகளாகப்பட்டவர்கள் எந்தெந்த நாட்டவர்கள், எத்தனையெத்தனை ஆயிரம் பேர் எந்தெந்த நாடுகளில் அடைக்கலம் கேட்டுப் போயிருக்கிறார்கள் என்று விலாவாரியாக ஒரு பெருங்கணக்கு கொடுத்திருக்கிறார்கள்.

படித்தால் யாருக்கும் பகீரென்றுதான் இருக்கும். மேற்கே சூடானில் தொடங்கி, தென் கிழக்கில் இலங்கை வரைக்கும் மேப்புதோறும் பிரச்னைகள். திண்டாடும் மக்களும் குண்டாடும் அரசுகளும் இல்லாத பிராந்தியமில்லை. சிரியாவில் சிவில் வார் நடக்கிறதா? உடனடியாகக் குறைந்தது சில லட்சம் ஜனங்களுக்காவது அக்கம்பக்கத்து தேசங்கள் அடைக்கலம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. அப்புறம் ஆப்கன் அகதிகள். இராக்கியர்கள். பாலஸ்தீனியர்கள். பல்வேறு ஆப்பிரிக்க தேசத்தவர்கள்.

இரண்டு விதங்களில் இவர்கள் இடம் பெயர்கிறார்கள். ஒரு சாரார் கள்ள போட் பிடித்து மத்திய தரைக்கடல் வழியே ஐரோப்பாவுக்குள் நுழைவார்கள். இன்னொரு சாரார் அதே கள்ளபோட் மார்க்கத்தில் இந்தோனேஷியா வரை வந்து அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் போவார்கள். வழியில் என்ன ஆனாலும் யாருக்கும் கவலையில்லை.

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத தேசங்கள், எப்போதும் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் தேசங்கள், சொந்த நாட்டு மக்களையே சூறையாடும் நல்லரசு வாழும் தேசங்கள் உலகமெங்கும் காலந்தோறும் இருந்து வருகின்றன.

இருப்பிடமும் உணவும் பிரச்னையாகி இடம் பெயரும் இந்நாடுகளின் மக்கள் படும் பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. சில தேசங்கள் அடைக்கலம் கொடுக்கும். சில தேசங்கள் மறுகப்பல் ஏற்றி அனுப்பிவைத்துவிடும். வாழ்க்கை முழுதும் லோல்பட்டுக்கொண்டேவா இருக்க முடியும்? சிக்கல், பெரும் சிக்கல்.

2009ம் ஆண்டு இறுதி நிலவரப்படி அறுபது தேசங்களைச் சேர்ந்த 6.6 மில்லியன் மக்கள் நாடற்றவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இது தவிர கணக்கில் வராத இன்னும் சில மில்லியன் உள்நாட்டு அகதிகள் எண்ணிக்கை தனி. அதாவது, வெளிநாடுகளுக்கு இடம்பெயர வழியின்றி, உள்நாட்டிலேயே இருப்பிடம் இழந்து அகதிகளாகத் திரிபவர்கள்.

புள்ளிவிவரங்கள் என்ன செய்யும்? அகதிகள்தாம் என்ன செய்வார்கள்? பெரும்பாலான அரசுகளுக்குத் தமது மக்களைக் குறித்த கவலையோ அக்கறையோ இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் சூதாட்டங்களே மிகுதி. அதில் களப்பலியாகும் இத்தகு மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை எண்ணிப் பார்க்கக் கூட யாருக்கும் நேரமின்றிப் போய்விடுகிறது.

என்ன வித்தியாசமென்றால், லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக அடைக்கலம் கோரி உலகெங்கும் அலைந்து திரிந்த காலங்களிலெல்லாம் தியானத்தில் இருந்தவர்கள் இப்போது சிரியாவிலிருந்து மக்கள் அடைக்கலம் கேட்டு ஐரோப்பிய தேசங்களுக்குக் கொத்துக் கொத்தாகப் போய்ச்சேரும்போது மட்டும் தவம் கலைந்து கவலையுறுகிறார்கள்.

நல்லது. உலகம் அப்படித்தான். ஏதாவது செய்ய வேண்டும் என்றாவது நினைக்கத் தோன்றுவது வரைக்கும் சந்தோஷமே. ஆனால், என்ன செய்யலாம்?

இந்த ஐநா இதுவரை வெளியிடாத ஒரு புள்ளிவிவரம் உண்டு. அது, எந்தெந்த நாட்டுப் பிரச்னைக்கு யார் காரணம் என்பது. கொஞ்சம் ஒழுங்காக பேப்பர் படிப்பவர்களுக்கே இது தெரியும் என்பதால் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்ட அரசியல் ஊசலாட்டத் திருவிழாக்கள் பலவற்றுக்குப் பின்னால் இருந்து பீமபுஷ்டி அளித்தது அமெரிக்கா. ஒன்று கம்யூனிஸ்டு நாடாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் எண்ணெய் வளம் கொழிக்கும் நாடாக இருக்கவேண்டும். இந்த இரண்டில் என்னவாக இருந்தாலும் அந்த தேசம் படும் அவதிகளின் அடிப்படைக் காரணகர்த்தா அமெரிக்காதான் என்பது சரித்திரம் படித்தால் புரியும்.

ஆனால் ஐநா அமெரிக்காவின் சட்டையைப் பிடிக்குமா? அட, நடக்கிற கதையைப் பேசப்பா. இப்போதைய அஜண்டா, அகதிகளின் எண்ணிக்கையை எடுத்துக் கடைவிரிப்பது. மற்றதுக்கு காலக்கிரமத்தில் வேறு செஷன் அறிவிப்பார்கள். அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

வாழ்க வையகம்.

SCROLL FOR NEXT