போஸ்னியாவின் தலைநகரம் சரயேவோவைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய நகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்ந்த அங்கிள் மிசோவின் மறைவால் ஆறாத் துயரம் அடைந்துள்ளனர். அவருடைய நினைவாக அவர் இருந்த நகர வீதியில் அவருடைய உருவப் படத்துக்கு மாலையிட்டு, வீதியெங்கும் மெழுகுவத்தி ஏற்றிவைத்து மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.
அங்கிள் மிசோ யார்?
யார் இந்த அங்கிள் மிசோ?
எழுத்தாளரா, பாடகரா, இலக்கிய வாதியா, கவிஞரா, நாடாளுமன்ற உறுப்பினரா, மக்கள் சேவகரா?
இவர்களில் எவரும் இல்லை. காலணிகளுக்கு பாலீஷ் போடும் ஒரு சாமானியர்.
சரி, அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், அவர் மீது ஏன் இத்தனை பாசம்? அதற்குப் பின் சுவாரஸ்யமான ஒரு கதையே இருக்கிறது.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, கொசாவோ பிரதேசத்திலிருந்து சரயேவோ நகருக்கு வந்த ரோமா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் அங்கிள் மிசோ. அவருடைய 21-வது வயதில் தந்தையுடன் இந்நகருக்கு வந்தார். அவருடைய தந்தை பிழைப்புக்காக காலணிகளுக்கு பாலீஷ் போட ஆரம்பிக்க, அவரை அடியொற்றி தானும் அதே தொழிலில் இறங்கினார் மிசோ.
உண்மையில், மிசோவின் பெயர் ஹுசைன் ஹசானி. அவருக்கு குத்துச் சண்டை சொல்லிக்கொடுத்த குரு, ஹங்கேரி நாட்டவர். அவருக்கு இந்தப் பெயர் வாயில் நுழையவில்லை. எனவே, அவர் தன்னுடைய மாணவனை ‘மிசோ’ என்று அழைத்தார். அந்தப் பெயரே பின்னாளில் அவருக்கு நிலைத்துவிட்டது.
திருவாளர் சுத்தம்
காலணிக்கு பாலீஷ் போடுவதுதான் வேலை என்றாலும், மிசோ நன்றாக உடை அணிவார். தினமும் தோய்த்து இஸ்திரி செய்த வெள்ளைச் சட்டையை அழகாக அணிந்துவருவார். தலையை வெகு கவனமாகச் சீவி, கவர்ச்சியாகத் தொப்பி போட்டிருப்பார். மீசை எப்போதும் அளவாகத் திருத்தப்பட்டிருக்கும். முகத்தில் எப்போதும் மலர்ச்சி, காந்தத்தைப் போல ஈர்க்கும் சிரிப்பு. அந்தச் சிரித்த முகமும் தேர்ந்த வேலைத்திறமும் பணிவான சேவையும் எல்லோரையும் கவர்ந்துவிட்டது.
தாக்குதல்களுக்கு இடையே ஒரு நன்னம்பிக்கை
சரயேவோ நகரம் 1992-95-ல் மிகப் பெரிய வான் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு அஞ்சி நகர மக்களே ஊரைக் காலி செய்துவிட்டு ஓடிய கதையெல்லாம்கூட உண்டு. ஆனால் மிசோ, தான் வேலை செய்த இடத்தைவிட்டு நகரவில்லை. வழக்கம்போல் அவருடைய தொழிலை மேற்கொண்டிருந்தார்.
வான் தாக்குதலில் சரயேவோ நகருக்குக் கடும் சோதனைகள் நேரிட்டபோதும் வீதியில் மிசோ பாலீஷ் போடக் காத்திருப்பதைக் கண்டதும் மக்களுக்கு நிம்மதி பிறக்கும். போர் எப்படியாக நடந்தாலும் நாளை நாம் உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையை அவரைப் பார்த்து நகரவாசிகள் பெற்றார்கள். எத்தனை இடர்கள், சோதனைகள் வந்தாலும் ‘நகரில் நாம் மட்டும் இல்லை; கூட மிசோ இருக்கிறார் துணைக்கு’ என்ற எண்ணத்தை அவர்களுக்குள் அவர் விதைத்தார். இத்தனைக்கும் மிசோ அவருடைய இடத்திலிருந்து ஷூ பாலீஷ் போட்டதைத் தவிர, வேறு எதையும் செய்யவில்லை.
போர் நடந்த காலத்தில் கடும் உணவுப் பஞ்சமும் வறுமையும் கோரதாண்டவமாடியபோதும்கூட, தெரு நாய்களுக்கு அவரிடமிருந்தவற்றைப் போட்டுப் பசியாற்றினார். ‘விசுவாச முள்ள தோழர்கள்’ என்று அவற்றை அழைத்தார். கடந்த 2009-ல் நகர நிர்வாகம் அவருக்குப் பாராட்டு விழா நடத்தி, பதக்கம் அணிவித்ததுடன், குடியிருக்கச் சிறிய குடியிருப்பை ஒதுக்கியதுடன் ஓய்வூதியமும் வழங்கி நன்றி பாராட்டியது.
இந்தத் தகவலை தன்னிடமிருந்த தகரப் பெட்டியை பூட்ஸ்களால் தட்டி ஒலி எழுப்பி, தனது வாடிக்கையாளர்களுக்கும் நண்பர் களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து மகிழ்ந்தார் மிசோ. ஆனால், இந்தக் கௌரவத்தைப் பார்க்கக் கொடுத்துவைக்காமல் மனைவி ஜெமிலா மறைந்துவிட்டாளே என்று கண்ணீருடன் அந்த சோகத்தையும் பகிர்ந்துகொண்டார்.
கர்மயோகி மிசோ
போஸ்னியப் பத்திரிகைகளில் மிசோவைப் பற்றி நிறைய பேட்டிகள், துணுக்குச் செய்திகள் வெளிவந்துவிட்டன. உள்நாட்டுப் பத்திரிகைகள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பத்திரிகைகளும் எழுதின. அவற்றை எல்லாம் அவர் பிரதி எடுத்து வீட்டில் வைத்திருந்தார். பூட்ஸ்களுக்குப் பாலீஷ் போடும் முன்னால் கையில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு அவர் ஆடிய ஆட்டம்கூட புகைப்படமாக அவருடைய வீட்டை அலங்கரித்தது.
தன்னுடைய வாழ்நாளைத் தானும் மகிழ்ச்சியாகக் கழித்து, மற்றவர்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டிய கர்மயோகி மறைந்துவிட்டார். அவர் இருந்த இடத்தில் ஒரு நாற்காலியைப் போட்டு அதில் அவருடைய புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து சுற்றிலும் மெழுகுவத்திகளை ஏற்றிவருகின்றனர் மக்கள்.
“மிசோ எங்களுக்கு விசேஷமாக எதுவும் செய்யாமல் இருக்கலாம்; ஆனால், போர்க் காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தபோதும், வீட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிக்கிடந்தபோதும் தனியாளாக வெளியே வந்தார்; நாங்கள் ஒவ்வொருவரும் வெளியே வர நம்பிக்கை தந்தார். இந்த நகரத்தையே இயங்கவைத்தார். அதற்குச் சின்ன நன்றி இந்த அஞ்சலி” என்கிறார்கள். இப்போது அந்த இடம் மிசோவின் நினைவிடம் அல்ல, மக்களின் நெகிழ்விடம்!