சிறப்புக் கட்டுரைகள்

பீட்சா தின்னும் சாத்திரங்கள்

செய்திப்பிரிவு

லிபியப் பிரதமர் அலி ஜெய்தீன் திரிபோலி நகரில் ஒரு ஹோட்டலில் வைத்து, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கிறார். இப்படி ஒரு தடாலடி சம்பவம் இதற்குமுன் நடைபெற்றதில்லை. ஒரு தேசத்தின் பிரதமரை, அவரது அத்தனை ரத கஜ துரக பதாதிகளையும் கடந்து நெருங்கி, நாங்கள் உங்களைக் கடத்தப் போகிறோம்; அடம் பிடிக்காமல் சமர்த்தாக வந்துவிடுங்கள் என்று சொல்லி, அழைத்துக்கொண்டு சிட்டாகப் பறந்து போய்விட்டார்கள் தீவிரவாதிகள். உடனிருந்த செக்யூரிடிகளெல்லாம் எங்கே போய் வறட்டி தட்டிக்கொண்டிருந்தார்களோ தெரியவில்லை. துரத்திச் சென்று மடக்கிப் பிடிக்கும் முயற்சிகள் கூட வேலைக்கு ஆகவில்லை. கடத்தல், கடத்தல்தான். தீர்ந்தது விஷயம்.

நாற்பத்திரண்டு வருஷகால கடாஃபி ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து, ஓராண்டு கால உள்நாட்டு யுத்தத்துக்கு ஓய்வு கொடுத்து, எலக்‌ஷனெல்லாம் நடத்தி, ஜனநாயகம் மாதிரி என்னமோ ஒன்றை அறிமுகப்படுத்தி புதிய ஆட்சியை அமைத்துக் கொடுத்து ரெண்டு வருஷம் கூட முடிந்தபாடில்லை. முன்பு கடாஃபி மட்டும்தான் தலைவிரித்தாடினார் என்றால் இன்று லிபியாவின் சந்துபொந்தெங்கும் சண்டியராட்சி. திரும்பிய பக்கமெல்லாம் கிளர்ச்சியாளர்கள், புரட்சிக்காரர்கள், போராட்ட வல்லுநர்கள். லிபியாவின் கிழக்கு மாகாணங்களெங்கும் புரட்சிக்குழுக்கள் சகட்டு மேனிக்குத் தலையெடுத்திருக்கின்றன. அதிகாரப் பகிர்வு, தன்னாட்சி கோரிக்கைகள் மிரட்டல்களாகி, கலவரங்களாகப் பரிமாணமெடுத்து இன்று பிரதமரைக் கடத்திக்கொண்டு போகிற அளவுக்கு வந்து நிற்கிறது.

உலக அரங்கில் இன்று லிபியா என்று சொன்னாலே ஐயோ பாவம் என்பதுதான் எதிரொலியாக இருக்கும். என்ன வளம்! எண்ணெய் வளம்! எப்படி இருந்த தேசம். எல்லாம் காலி. அழித்தது கடாஃபியா அமெரிக்காவா என்று நீயா நானாதான் நடத்தியாகவேண்டும். 'நாங்கள் தோற்றுத்தான் போயிருக்கிறோம். ஆனால் நிச்சயமாக மீண்டுவிடுவோம்' என்று இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னால்தான் அலி ஜெய்தீன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். லிபியாவின் சகல விதமான சீரழிவுகளுக்கும் அவர் கடாஃபியையே குற்றம் சாட்டுவது வழக்கம். நாற்பத்திரண்டு வருஷப் பேயராட்சியில் சாத்திரங்கள் பிணந்தின்னாமல் பின்னே பீட்சாவா தின்னும்?

ஆனால் லிபியர்களில் ஒரு சாரார் இந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுக்கிறார்கள். சொன்னால் நம்புவது சற்று சிரமமாயிருக்கும். கடாஃபி இருந்த காலத்தில் லிபியாவில் மக்களுக்கு கரெண்டு செலவு என்ற ஒன்று இருந்ததே இல்லை. தேசம் முழுதும் மக்களுக்கு எப்போதும் மின்சாரம் ஃப்ரீ. வங்கிகளில் கடன் வாங்கினால் வட்டி கிடையாது. புதுசாகக் கல்யாணம் கட்டிக்கொள்ளும் ஜோடிகளுக்கு வீடு வாங்க அரசாங்கமே அறுபதாயிரம் தினார் அன்பளிப்பாகக் கொடுக்கும். கல்வி இலவசம். மருத்துவம் இலவசம். கடாஃபி காலத்துக்கு முன்பு இருபத்தி ஐந்து சதவீத லிபியர்கள் மட்டுமே படித்தவர்களாக இருந்தார்கள். இப்போது லிபியாவின் எழுத்தறிவு சதவீதம் எண்பத்தி மூன்று சதவீதம். விவசாயப் பெருங்குடி மக்களுக்கு விதையிலிருந்து உரம் வரை, வீடிலிருந்து நிலம் வரை சகலமான விதங்களிலும் அரசு சகாயம் அவசியம் இருக்கும். இதெல்லாத்தையும்விடப் பெரிய விஷயம், கடாஃபி காலத்தில் அங்கே விற்ற பெட்ரோலின் விலை விகிதம். மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள். 0.14 டாலர். பதினஞ்சு காசு என்று சொல்லமாட்டோம்? அது.

அந்த லிபியா இப்போது இல்லை. அதனால்தான் இந்த அவஸ்தைகள் என்று எதிர்ப்பாட்டு பாடிக்கொண்டிருப்பவர்களைச் சற்று நகர்த்தி வைத்துவிட்டு யோசிக்கலாம். லிபியாவின் எண்ணெய் வளம் எண்ணிப் பார்க்க முடியாதது. கடாஃபி இப்படி கண்டமேனிக்கு சாப்பிடுகிறாரே என்று கவலைப்பட்டுத்தான் அவரை காலி செய்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஜனநாயகக் காவலர்கள் ஜனங்களையும் கொஞ்சம் கவனிக்க வேண்டாமா?

பிரதமர் மீட்கப்பட்டுவிடுவார். தீவிரவாதிகளின் கோரிக்கைகளோடு துவந்த யுத்தம் நிகழ்த்தி என்னவாவது ஒரு சமாதான எல்லைக்கு வந்து நிற்கத்தான் செய்வார்கள். சௌக்கியமாக இருக்கட்டும். ஆனால் தேசம் முழுதும் இன்று பெருகியிருக்கும் ஆயுததாரிகளை லிபிய அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது? எதை விற்றாவது ஜனநாயகத்தைக் காப்பாற்ற நினைப்பது உத்தமமான காரியம்தான். ஆனால் கொத்துக்கொத்தாக குடிஜனங்களையே பலி கொடுத்து எந்த ஜனநாயகத்தை இவர்கள் வாழவைக்கப்போகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

SCROLL FOR NEXT