சிறப்புக் கட்டுரைகள்

சகாக்கள் செயல்பாடு எப்படி?

செய்திப்பிரிவு

சுரேஷ் பிரபு, ரயில்வே துறை

*

பிரபு கொஞ்சம் வித்தியாசமானவர்தான். ஏற்கெனவே போட்ட திட்டங்களை மறுஆய்வு செய்து, அவை அனைத்தையும் முடிக்கக் காலவரம்புடன் கூடிய இலக்கை நிர்ணயித்து அமல்படுத்துகிறார். ரயில் பயணிகளின் பாதுகாப்பு, முன்பதிவு சேவை, உணவு, சுகாதாரம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறார். நாடு முழுக்க எல்லா ரயில் நிலையங்களிலும் குடிநீர், கழிப்பிடம், மருத்துவ வசதி, தகவல் தொடர்பு வசதி, உணவு, குழந்தைகள் உணவு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார். இந்திய உருக்கு ஆணையம் (செய்ல்) - ரைட்ஸ் என்ற இரண்டையும் இணைத்து, ரூ.2,500 கோடிக்கு ஆண்டுக்கு 1,200 எவர்சில்வர் ரயில் பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அத்துடன் 300 பெட்டிகளைப் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆளற்ற லெவல்கிராஸிங்குகளில் டிரைவர்களை எச்சரிக்க, இஸ்ரோ உதவியுடன் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறார். மண்டலப் பொது மேலாளர்களுக்குச் செயல்பாட்டுச் சுதந்திரத்தை அளித்திருக்கிறார். அகல இருப்புப் பாதையில் கட்டுமானப் பணிகள் 85% அதிகமாகியுள்ளன. ஆளற்ற ரயில் பாதைச் சந்திப்புகளை முற்றாக ஒழிக்கத் திட்டமிட்டு வேலைகள் நடக்கின்றன. ரயில்வே துறைக்குத் தேவைப்படும் ரயில் பெட்டிகள், இன்ஜின்கள், இதர தளவாடங்கள் அனைத்தையும் உள்நாட்டிலேயே தயாரித்து வழங்க முன்னுரிமை தருகிறார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவைப்படும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி திரட்ட அந்தந்த மாநில அரசுடன் இணைந்து, தனி நிறுவனம் தொடங்கி, கடன் மூலம் நிதி திரட்டி முடிக்க ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.

ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர்.

*

பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் அமைச்சரவையில் இருப்பவர். ஆட்சிக்கு வந்தபோது பாஜகவின் தலைவர். ராஜ்நாத் உள்துறை அமைச்சராக இருந்தாலும், துறையின் முக்கிய முடிவுகளைப் பிரதமர் அலுவலகமே தீர்மானிக்கிறது. பதான்கோட் தாக்குதல் செய்தியே பிரதமர் அலுவலகம் மூலமாகத்தான் ராஜ்நாத்துக்குத் தெரியவந்தது. மணிப்பூரில் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக எச்சரிக்க உளவுத் துறை தவறியது. உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் காஷ்மீரில் பிரிவினைக் குரல்களுக்கான செல்வாக்கை உயர்த்தியிருக்கிறது. இடஒதுக்கீட்டின் பெயரால் குஜராத், தொடர்ந்து ஹரியாணா என்று பாஜக ஆளும் மாநிலங்களே ஸ்தம்பித்தது உள்துறை அமைச்சகத்தின் தோல்விகளில் அப்பட்டமானது. மத்திய ஆட்சிக்குட்பட்ட டெல்லியில் பெண்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பில்லாத நிலைமை நிலவுவது, பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தலைக் கண்காணிக்கவும் மாநில அரசோடு இணைந்து அதைக் கட்டுப்படுத்தவும் தவறியது, டெல்லி, ஹைதராபாத் பல்கலைக்கழகங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழல், சமீப காலமாக உத்தரப் பிரதேசத்தில் மத அடிப்படையிலான பிளவுகளை அதிகரிக்கும் வகையில் சர்ச்சைகள் தொடர வேடிக்கை பார்ப்பது என்று உள்துறையின் சறுக்கல்கள் பெரிய பட்டியலாக நீள்கிறது. வங்கதேசத்தின் நில எல்லைக்குள்ளிருந்த சில பகுதிகள் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டுப் பல மாதங்கள் ஆன பிறகும்கூட, அவர்களைக் குடிமக்களாக அங்கீகரித்து ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை அளிக்கத் தவறியதற்கான காரணங்களில் உள்துறைக்கும் பங்குண்டு. பிரதமர் மோடி நாட்டில் இல்லாதபோது நடக்கும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு ராஜ்நாத்தே தலைமை வகிக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. ராஜ்நாத்தின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் இறங்குவதன் அடையாளங்களில் இதுவும் ஒன்று!

SCROLL FOR NEXT