சீனப் போரின்போது, மாணவர்கள் ஒரு தொகையை திரட்டி முதல்வர் காமராஜரிடம் தர விரும்பினர். ஆனால், அவரைப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்து, அந்தத் தொகையை வழங்க ஏற்பாடு செய்தபோது, அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார், துணைவேந்தர் ஏ.எல்.முதலியார் என்று அழைக்கப்பட்ட ஆற்காடு லட்சுமணசாமி முதலியார். மாணவர்களில் ஒரு பிரிவினர் அதிருப்தி அடைந்து, இதை ஒரு புகாராக காமராஜரிடமே எடுத்துச் சென்றார்கள். அதற்கு காமராஜர் சொன்னாராம், “துணைவேந்தர் சொல்வதுதான் சரி. நீங்கள் நிதியை எடுத்துக்கொண்டு உங்கள் விடுதிக்கு வெளியே நில்லுங்கள். நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்!” - இப்படிப்பட்ட தமிழ்நாட்டில்தான் இன்றைக்கு வரிசையிலே காத்திருக்கிறார்கள் எல்லா துணைவேந்தர்களும், எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஒருவரைப் பார்ப்பதற்காக!
கல்வியாளர்களே இப்படி இருக்கும் ஓரிடத்தில், அதிகாரிகள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் மேலும் தலைகுனிவை வைக்கிறார்கள். சமீப காலமாக, தமிழகத்தில் நிகழ்ந்துவரும் சம்பவங்கள் பலவும் மொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவருகின்றன. தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனை அவற்றின் உச்சம்.
கலாச்சார உருவாக்கம்
தலைமைச் செயலகத்திலேயே சோதனை எனும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. அவர் பதவிநீக்கம் செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில், செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய வார்த்தைகள் இன்னும் மோசம். ஒரு ஐஏஎஸ் அதிகாரியான அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் ‘புரட்சித் தலைவி’ என்று விளித்தார். இன்னமும் தலைமைச் செயலாளர் பதவியில் நீடிப்பதாகவும் சொன்னார். ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் அவரது பேச்சு தொடர்பாக, தமிழக அரசின் தரப்பிலிருந்து சின்ன மறுப்புகூட வெளியிடப்படவில்லை. எப்படி இந்த மாதிரியான ஒரு சூழல் உருவானது?
முன்பெல்லாம் நிலைமை இவ்வளவு மோசம் இல்லை. முதலில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாறுதலின்போது முதல்வரைச் சந்தித்துப் பூங்கொத்து தந்து வாழ்த்துப் பெற்ற பின்னர் பணியில் சேரும் வழக்கமே கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் உருவானதுதான். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளில் திமுக ஆதரவு அதிகாரிகள், அதிமுக ஆதரவு அதிகாரிகள் என இரண்டு கோஷ்டிகளாகப் பிளவு உண்டானதும், இவர்கள் ஆட்சியில் அவர்களும் அவர்கள் ஆட்சியில் இவர்களும் ஓரங்கட்டப்படுவதும் கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் உருவான கலாச்சாரம்.
இருவர் ஆட்சியிலும் குளறுபடிகள்
கருணாநிதி ஆட்சியில் உள்துறைச் செயலாளராக இருந்த நாகராஜன் திமுக ஆதரவு ஏட்டில் ‘கில்ஜி’ எனும் புனைபெயரில் கட்டுரைகள் எல்லாம் எழுதினார். அவரது அறையில் கரை வேட்டிக்காரர்கள் சிபாரிசுக்காகக் காத்திருப்பார்கள். இவரைக் கைதுசெய்து வழக்குகூடத் தொடர்ந்தார்கள். ஜெயலலிதா ஆட்சியில் ஆட்சியாளரின் உத்தரவுக்குப் பணியவில்லை என்றால், அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். சந்திரலேகா ஐஏஎஸ் மீது அமிலவீச்சு நடந்தது நினைவிருக்கலாம்.
பணி மூப்பின்படி அதிகாரிகளைப் பணியில் அமர்த்துவதிலும்கூட இருவருடைய ஆட்சியிலும் குளறுபடி நடந்தது. தங்களுக்கு வேண்டிய அதிகாரியைத் தலைமைச் செயலகத்தில் அமர்த்த, அவருக்கு முன் சீனியராக உள்ள நான்கு ஐந்து பேருக்குத் தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி, மற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைச் சமாதானப்படுத்தினார்கள். இதே திருவிளையாடல் ஐபிஎஸ் அதிகாரிகளிடமும் நடத்தப்பட்டது.
ஆதரவு அதிகாரிகள்
ஒவ்வொரு தேர்தலின்போதும் ‘இவர்கள் எல்லாம் ஆளும் கட்சி அதிகாரிகள். இவர்களைத் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தக் கூடாது’ என்று ஒரு பெரிய பட்டியலைத் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் தருவது வழக்கமாகி விட்டது. தேர்தல் ஆணையம் அவர்களை ஒதுக்கிவைப்பதும் வழக்கமாகிவிட்டது.
ஆளும்கட்சிக்கு எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இவர்களுக்குச் சலுகைகள் கிடைக்கும். கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் ஆட்சியிலுமே தங்கள் ஆதரவு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அடிமாட்டு விலையில் முக்கியமான இடங்களில் உள்ள வீட்டுவசதி வாரிய மனைகளை வாரி வழங்கிய குற்றச்சாட்டுகள் உண்டு. இன்னும் விசுவாச அதிகாரிகள் ஓய்வுக்குப் பின் கட்சியில் சேர்வதும், அவர்களுடைய விசுவாசத்துக்கான விலையாக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் அளிக்கப்படுவதும் உண்டு. மலைச்சாமி ஐஏஎஸ் முதல் டிஜிபி நடராஜ் வரை நீளமாகப் பட்டியலிடலாம். இன்னும் சிலரைப் பதவி ஓய்வுக்குப் பின், அவர்களைத் தங்கள் ஆலோசகராக வைத்துக்கொள்ளும் பழக்கமும் நடக்கிறது.
மத்திய அரசும் விலக்கல்ல
மத்தியில் ஆளும் அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. ஓய்வுபெற்ற நீதிபதி சதாசிவத்தை ஆளுராக ஆக்கியது; முன்னாள் தலைமைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் உளவுத் துறைத் தலைவராக இருந்த எம்.கே.நாராயணன் போன்றவர்களை ஆளுநராக்கியது ஆகியவற்றைச் சொல்லலாம். இப்போதுகூட டெல்லி ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பவர் மத்திய அரசின் செயலாளராக இருந்தவர்தான். உயர் பதவியில் இருப்பவர்கள் ஓய்வுக்குப் பின் ஆறு ஆண்டுகளாவது, ஆதாயம் பெறும் பதவி வகிக்கக் கூடாது என்று நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் வலியுறுத்தினார். எந்த அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
விளைவின் உச்சத்தைத்தான் தமிழகம் தொடர்ந்து எதிர்கொண்டுவருகிறது. இதற்கு முன் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன், தமிழ்நாடு மின்வாரியப் பொறுப்பில் இருந்த போது முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆலோசனையின்பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டார். ராம மோகன ராவ் அலுவலக அறையிலேயே வருமான வரித் துறையின் சோதனை நடைபெற்றிருக்கிறது. இதன் மூலம் ஐஏஎஸ் பதவிக்கு காலாகாலத்துக்குமான களங்கம் உருவாகிவிட்டது. இன்னும் என்னென்ன அவலங்களையெல்லாம் காணப்போகிறோமோ? சகாயம் போன்ற சில ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்களே என்று குரல்கள் கேட்பது புரிகிறது. விதிவிலக்காக அல்ல; ஒவ்வொரு அதிகாரியிடத்திலும் அப்படியான தன்மான உணர்வும் நேர்மையும் பாரபட்சமற்ற நிர்வாகமும் வேண்டும். அதற்கு அரசியல் சூழலிலும் மாற்றம் வேண்டும்!
- ஜாசன், மூத்த பத்திரிகையாளர்.
தொடர்புக்கு jasonja993@gmail.com