புதிய புத்தாயிரம் பிறந்தபோது என்னுடைய சொந்த மாநிலமான கர்நாடகத்தில் பொருளாதார தாராளமயத்தின் எழுச்சி நாயகனாகத் திகழ்ந்தார் என்.ஆர்.நாராயண மூர்த்தி. மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர், குடும்பத்தில் யாரும் தொழில்தொடங்கி நடத்தியவர்கள் அல்ல. 1981-ல் ஆறு பேருடன் இணைந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதற்கு ‘இன்ஃபோசிஸ்’ என்று பெயர் சூட்டினார். புணே நகரில் மிகச் சாதாரணமான நிலையில் இன்ஃபோசிஸ் செயல்படத் தொடங்கி, மிகவும் வியக்கவைக்கும் பெரிய வளாகத்தில் பெங்களூருவில் தலைமையகத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வெளிநாடுகளிலும் நிறுவனத்தின் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. படித்த பொறியாளர்களை ஆயிரக்கணக்கில் பணியில் அமர்த்தியது, அமெரிக்காவின் பங்குச் சந்தையான ‘நாஸ்டாக்’ பட்டியலில் இடம்பெறும் பெருமையைப் பெற்று, கோடிக்கணக்கான டாலர்களை வருவாயாக ஈட்டத் தொடங்கியது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டம், அதன் லாப அளவு ஆகியவற்றுக்காக மட்டும் அதைக் கண்டு யாரும் வியப்பதில்லை; அறிவுசார் தொழில்நிறுவனமான இன்ஃபோசிஸ் உலகப் பொருளாதாரம் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள திறன் மிகுந்த பொறியாளர்களைப் பயன்படுத்திக்கொள்கிறது. அந் நிறுவனத்தின் ஊக்குவிப்பாளர்கள் ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையை வாழ்கிறவர்கள். இந்தியாவின் வடக்கு, மேற்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சிலரிடம் காணப்படும் செல்வச் செருக்கு அவர்களிடம் கிடையாது. ஊழியர்களுக்கோ, சமுதாயத்துக்கோ எதையும் கிள்ளியும் கொடுத்துவிடக் கூடாது என்று கருதும் கஞ்சப் பேர்வழிகள் அல்ல அவர்கள்; கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
2000-ல், கர்நாடகத்தின் நன்கு அறியப்பட்ட தொழிலதிபராக இருந்த நாராயண மூர்த்திக்குப் போட்டி என்று யாராவது இருந்தால், அது அசீம் பிரேம்ஜிதான். பிரேம்ஜியும் மிகப் பெரிய, தொழில்முறை நிர்வாகத்துக்கு உட்பட்ட, உலக அளவில் மதிக்கப்படும் மென்பொருள் நிறுவனமான ‘விப்ரோ’வின் தலைவர். விப்ரோவின் தலைமையகமும் பெங்களூருவில்தான் இருக்கிறது. அவருமே மிகவும் எளிமையாக, அடக்கமாக வாழ்ந்துகொண்டு சமுதாய நலனுக்குப் பெருமளவில் செலவழித்துவருகிறார்.
நாராயண மூர்த்தி, பிரேம்ஜி போன்றவர்கள் கர்நாடகத்துக்கும் இந்தியாவுக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தவர்கள். அதைவிட முக்கியம், சந்தை சார்ந்த பொருளாதார வளர்ச்சி நல்லது என்று உணர வைத்தவர்கள். பல்லாண்டுகளாக ‘முதலாளித்துவம்’ என்ற வார்த்தையே பல ‘அர்த்தங்களில்’ விளக்கப்பட்டது. இந்தியாவை நீண்ட காலம் ஆண்ட ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி என்ற இரு பிரதமர்களுமே முதலாளிகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தவர்கள், பொருளாதாரத்தில் அரசுதான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கருதியவர்கள். இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே ‘சமத்துவம்’ (சோஷலிஸ்ட்) என்ற வார்த்தையைச் சேர்த்தவர் இந்திரா காந்தி.
1991-ல் புதிய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவும் முடிவெடுத்தார். ‘பர்மிட்-லைசென்ஸ்-கோட்டா-ராஜ்’ என்ற அதிகார வர்க்கக் கட்டுப்பாடு மிகுந்த நிர்வாக அமைப்பைத் தகர்த்தார். நிறுவனங்களுக்கு இடையே, நியாயமான போட்டியை ஊக்குவித்தார். உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கட்டுப்பெட்டிகளின் ஆட்சேபங்களை நிராகரித்து, இந்தியப் பொருளாதாரத்தைச் சர்வதேச சந்தைக்குத் திறந்துவைத்தார். புரட்சிகரமான இந்தப் பொருளாதார முடிவுகளால்தான் விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் உலக அளவில் தலையெடுக்க முடிந்தது.
புரட்டிப் போட்ட ரெட்டி சகோதரர்கள்
புத்தாயிரமாவது ஆண்டு பிறந்தபோது கர்நாடகத்திலிருந்த நாங்கள், ‘தாராளமயம்’ என்ற சொல்லை - அறிவியல், மென்பொருள், விப்ரோ, இன்ஃபோசிஸ் - ஆகியவற்றோடு அடையாளம் கண்டோம். அந்த முதலாளித்துவம் ஆக்கபூர்வமானது, படைப்பூக்கம் மிக்கது, முற்போக்குச் சிந்தனையுள்ளது, சமூகத்துக்குப் பொறுப்பானது. ஆனால், அந்த பத்தாண்டின் இறுதிப் பகுதியில் இவை எல்லாமே மாறிவிட்டன. 2010-ல் கர்நாடகத்தில் அதிகம் பேசப்பட்டவர்கள் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்கள். தங்களுடைய அறிவுபூர்வமான செயல்களால் விப்ரோவும் இன்ஃபோசிஸும் முன்னேற்றம் கண்டபோது, தங்களுடைய அரசியல் தொடர்புகளால் பெரும் பாய்ச்சலில் வளம் கண்டார்கள். கணினி மென்பொருள் நிறுவனங்கள் சட்டத்தை மதித்து நடந்தபோது, ரெட்டி சகோதரர்கள் சட்டத்தைத் துச்சமெனக் கருதி மீறிச் செயல்பட்டனர். பிரேம்ஜியும் நாராயண மூர்த்தியும் அடக்கமாகவும் எளிமையாகவும் வாழ்க்கை நடத்தியபோது ரெட்டி சகோதரர்கள் விலையுயர்ந்த தங்க, வைர நகைகளை அணிந்தும், உலகிலேயே விலை அதிகமுள்ள ஆடம்பரக் கார்களில் வலம் வந்தும், தங்களுடைய செல்வ வளத்தைப் பகட்டாகக் காட்ட முயன்றனர். 2010 ஏப்ரலில் மெர்சிடஸ் பென்ஸ் கார் நிறுவனம் தங்களுடைய ஆடம்பரக் கார்கள் எப்படிப்பட்டவை என்பதை பெல்லாரி நகரில் அணிவகுத்து நிற்கவைத்துக் காட்டி வர்த்தகத்தைப் பெருக்க முயன்றது. பெல்லாரி மாவட்டத்தில் விற்பனைக்கான காட்சியகத்தையே திறப்போம் என்று பி.எம்.டபிள்யு. கார் நிறுவனம் ஒரு படி மேலே போய் அறிவித்தது.
ரெட்டி சகோதரர்கள் தங்களுடைய செயலால் கர்நாடகத்துக்கு, இந்தியாவுக்கு ஏன் - முதலாளித்துவத்துக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தினார்கள். இப்போதைய முதலாளித்துவம் என்பது அரசில் இருப்பவர்களுக்கு எதையாவது அன்பளிப்பாக அளித்து சலுகை பெறுவதாகவும், ஊழல் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகவும், வன் செயல்களின் பின்னணியில் செயல்படுவதாகவும், சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைப்பதாகவும் உள்ளது. இந்தப் போக்கில் கர்நாடகம் விதிவிலக்கல்ல. இந்தியா முழுவதிலுமே எங்கெல்லாம் கனிம வளத் தொழில் கொடிகட்டிப் பறந்ததோ அங்கெல்லாம் ஜனநாயகம் ஓரங்கட்டப்பட்டது. உத்தராகண்ட், கர்நாடகம், கோவா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நிகழ்த்திய சுற்றுப் பயணங்கள் மூலமாகவும், பிற மாநில கனிம வள நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிக் கேட்டதன் மூலமும் சுரங்கத் தொழிலால் விளைந்த ஆறு பெரிய பின் விளைவுகளைப் பட்டியலிட்டிருக்கிறேன்.
பெரிய பின்விளைவுகள்
முதலாவதாக, சுரங்கங்களைக் குத்தகைக்கு விடும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்கிறது. கனிமத்தை அகழ்ந்து எடுப்பதற்கான தொழில்நுட்பத்தை வைத்திருப்பவர்களைக் காட்டிலும், ஆளும் கட்சியின் தலைமைக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கே குத்தகை உரிமை எளிதாகக் கிடைக்கிறது. இதனால் தொழிலதிபர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே கள்ளக்கூட்டு ஏற்படுகிறது. சட்டவிரோதமான பரிமாற்றங்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறுகிறது.
இரண்டாவதாக, கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் நிறுவனங்களுக்கு அரசியல் அரவணைப்பு கிடைப்பதால் அவர்கள் சுற்றுச் சூழல் கெடுவது குறித்தோ, தொழிலாளர்களுடைய உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ கவலைப்படுவதில்லை. குடும்பங்களை விட்டு வரும் வெளி மாநிலத் தொழிலாளர்களைத்தான் குத்தகை நிறுவனங்கள் அதிகம் வேலையில் ஈடுபடுத்துகின்றன. தங்களுக்குக் குடியிருப்பும் இதர வசதிகளும் வேண்டும் என்று கேட்டுப் பெறும் நிலையில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் அமைப்புரீதியாக வலுவாக இருப்பதில்லை. கனிமங்களை அகழ்ந்தெடுக்கும்போது காட்டை அழிக்கக் கூடாது, வனவிலங்குகளுக்குத் துன்பம் தரக் கூடாது, தண்ணீர் வளத்தை அசுத்தப்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. உள்ளாட்சி நிறுவனங்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் கனிம வள குத்தகை நிறுவனங்களுக்கு இருக்கும் நெருக்கத்தையும் செல்வாக்கையும் கண்டு அஞ்சி அனைவரும் பேசாமலிருந்துவிடுகின்றனர். அரசியல் தலைமையுடன் தங்களுக்கு இருக்கும் நெருக்கமான தொடர்பைப் பயன்படுத்தி, தாங்கள் குத்தகை எடுத்த பகுதிகளில் மட்டுமல்லாமல் பிற பகுதிகளிலிருந்தும் கனிமங்களை அகழ்ந்தெடுத்து இயற்கை வளத்தைச் சூறையாடுவதுடன் சுற்றுச்சூழலையும் கடுமையாகச் சேதப்படுத்துகின்றனர்.
மூன்றாவதாக, சுரங்கத் தொழில் துறை வலுவாக முறைப்படுத்தப்படாமல் இருப்பதால் கனிமங்களின் விலை அதிகமாக இருக்கும்போது எவ்வளவுக்கெவ்வளவு எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு, வேகவேகமாக அகழ்ந்தெடுத்து லாபம் ஈட்டுகின்றனர். குறுகிய காலத்தில் அதிகபட்ச அளவுக்கு கனிமங்களை வெட்டி எடுக்க வேண்டும் என்ற அவசரம் குத்தகை எடுத்த சுரங்கத் தொழிலதிபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒன்றுபோல இருக்கிறது. நாம் இன்னும் எத்தனை மாதங்கள் ஆட்சியிலிருப்போமோ அதற்குள் அதிகபட்ச வருவாயைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிடுகிறது.
நான்காவதாக, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீனக் கருவிகள் உதவியுடன்தான் சுரங்கங்களிலிருந்து கனிமங்களை எடுத்தாக வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவில்லை. எனவே, கரடு முரடான வகைகளில்கூட கனிமங்களை அவசர அவசரமாக வெட்டுகின்றனர். இதனால் நிலம், நீர், காற்று என்ற மூன்றுமே ஒருசேர கடுமையாக மாசடைகின்றன. காடுகளில் பெரும் பள்ளங்கள் ஏற்படும்வகையில் மரங்களை வேரோடு பறித்துவிடுகின்றனர். ஆறுகளில் கனிமங்கள் விழுவதையும் தண்ணீர் கலங்குவதையும் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. ஆற்று நீர் மாசுபடுவதுடன் ஊற்றுகளும் அடைபடுகின்றன. விவசாயச் சாகுபடி நிலங்கள் கனிமத் துகள்கள் படிவதால் களர் நிலமாகின்றன. சமுதாயத்துக்கு இந்த வகையிலான இழப்பு மட்டுமே பல கோடிக்கணக்கான ரூபாய்களாக இருக்கின்றன. மீட்க முடியாதபடிக்கு வனங்களின் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. வன உயிரினங்கள் மற்றும் செடி கொடி போன்றவையும் அழிகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக கனிம வளங்கள் உள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களும் நொடித்துப்போகின்றன. கிராமவாசிகள் சாகுபடி செய்யும் நிலங்கள் களர் நிலங்களாகின்றன. தண்ணீர் கெட்டுப்போகிறது. மண் சாரமிழக்கிறது. வீடு கட்ட, அடுப்பெரிக்க மரங்களையும் கழிகளையும் சுள்ளிகளையும் தரும் காடு பொலிவிழந்து பொட்டல் நிலமாகிறது. பழம், காய், பூ போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கூடை முடையக் கிடைக்கும் பிரம்பிலிருந்து நோய்க்கு மருந்தாகப் பயன்படும் மூலிகை வரை வனங்களில் கிடைக்கும் பல்வேறு பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. காடுகள் அழிந்து, தண்ணீர் கெட்டு, விளை நிலங்கள் சாரமிழந்து, குடிதண்ணீர் கிடைக்காமல் கிராமவாசிகள் எல்லா வழிகளிலும் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழக்கின்றனர்.
ஐந்தாவதாக, கனிமவளம் உள்ள இடங்களைச் சுற்றியும், அருகிலும் வசிக்கும் மக்களுக்கு அதனால் பலன் ஏதும் கிடையாது. பக்க விளைவுகள் காரணமாக அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில்தான் வாட நேர்கிறது. எனவே, கனிமவளம் என்பது அருகில் வசிக்கும் மக்களுக்கு பெரும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்துகிறது. கர்நாடகத்தில் சுரங்கத் தொழில் உச்ச நிலையை எட்டியபோதுதான் ஒடிசாவிலும் சத்தீஸ்கரிலும் சுரங்கத் தொழில் உச்ச கட்டத்தை எட்டியது. அதனால் கிராமவாசிகளுக்கும் வனவாசிகளுக்கும் பலன் கிட்டாததால் அவர்களுடைய அதிருப்தியைப் பயன்படுத்திக்கொள்ள முற்பட்ட மாவோயிஸ்ட்டுகளுக்கு அம்மாநிலங்கள் புகலிடங்களாயின.
ஆறாவதாக, பண்டங்களின் விலை அதிகமாகும்போது, சுரங்கத் தொழிலானது மிகக் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை லாபமாக அள்ளித் தருகிறது. சுரங்கத் தொழிலை யாராவது, எந்தக் காரணத்துக்காகவாவது எதிர்த்தால் அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர். சத்தீஸ்கரில் கனிமத் தொழிலுக்கு மாவோயிஸ்ட்டுகள் இடையூறாக இருக்கிறார்கள் என்பதற்காகத்தான் ‘சல்வா ஜுடும்’ என்ற பெயரில் ஆயுதமேந்திய சிவிலியன் படை உருவாக்கப்பட்டது. பெல்லாரி மாவட்டத்தில் சுரங்கத் தொழிலதிபர்கள் மாநிலக் காவல் துறையையே தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். அங்கே நடக்கும் முறையற்ற செயல்களை எந்த நிருபரும் அச்சமில்லாமல், உயிருக்கு ஆபத்து நேராமல் எழுதிவிட முடியாது. அரசின் சுரங்கக் கொள்கைகளைக் கேள்வி கேட்கும் நிருபர்களைக் கைது செய்தும், கல்வியாளர்களை நீக்கியும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கிறது. பெல்லாரி சகோதரர்கள் சுரங்க அகழ்வுப் பணிகளை மேற்கொண்டபோது காட்டுக்குள் யாரும் செல்ல முடியாதபடிக்குக் காவல் போட்டிருந்தனர்.
இந்தியாவுக்குக் களங்கம்
பஸ்தர், பெல்லாரி போன்ற பிரதேசங்களில் குற்றச்செயல்களின் ஆதிக்கமும் சட்டத்தை மதிக்காத கும்பல்களின் அடாவடியும், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியாவுக்குக் களங்கம் தருபவை. 19-வது நூற்றாண்டில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவும் 20-வது நூற்றாண்டில் காங்கோவும் இப்படித்தான் இருந்தன. விலையுயர்ந்த உலோகக் கனிமங்கள் கிடைக்கின்றன என்ற தகவலை அடுத்து அங்கே படையெடுத்த ஆயுதம் ஏந்திய கும்பல்கள் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டதுடன் வெளியார் யாரும் உள்ளே நுழைய முடியாதபடிக்கு அப் பகுதிகளைத் தங்களுடைய ஆதிக்கத்தில் வைத்திருந்தன. இதனால் வன்மையான மோதல்களும் கொடூரமான நிகழ்ச்சிகளும்தான் வழக்கமாயின.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் உலகம் எங்கும் நுகர்வுப் பொருட்களுக்குக் கிராக்கி ஏற்பட்டது. இதனால் இந்தியாவிலும் சுரங்கத் தொழிலுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. மத்திய அரசும் மாநில அரசுகளும் ‘தொழில் வளர்ச்சி’க்காக என்ற போர்வையில் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் உரிமையை, மிகக் குறைந்த அடிமாட்டு விலைக்கு வழங்கின. குறைந்த செலவில் கனிமங்களை அகழ்ந்து அதிக விலைக்கு விற்று பெரும் பணம் ஈட்டிய சுரங்கத் தொழில்துறை, அரசுக்குப் பரிசாக சுற்றுச்சூழல் சீர்கேடு, இயற்கை வளம் அழிப்பு, மக்களின் வாழ்வாதார ஒழிப்பு போன்றவற்றை விட்டுச் சென்றன. மத்திய இந்தியா, மேகாலயம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள், மேற்குப் பகுதியில் உள்ள கோவா, மகாராஷ்டிரம், தெற்கில் உள்ள ஆந்திரம், கர்நாடகம் ஆகியவை சுரங்கத் தொழிலதிபர்களின் லாபப் பசிக்கு இரையாகிவிட்டன.
உலக சந்தைக்காக கனிமங்களை வெட்டி எடுப்பது வேகம் குறைந்தாலும் உள்நாட்டுத் தேவைக்காக அதுவும் கட்டுப்பாடு இல்லாமல் வெட்டி எடுப்பது ஓயவே இல்லை. பல மாநிலங்களில் ஆற்று மணலைத் திருடி விற்பது பெருந்தொழிலாக மாறிவிட்டது. அரசியல் தலைமைகளின் ஆதரவுடனான இந்தத் தொழில், பல ஆறுகளின் சூழலையே நாசப்படுத்தியதுடன் நீரூற்றுகளையும் நீராதாரங்களையும் பலி வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் இரும்புத் தாது வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் காட்டிய தீவிரத்தால் ஏற்பட்ட சேதங்களைவிட இப்போது பல மடங்கு பெருகியிருக்கிறது. இரும்புத் தாதை சட்டவிரோதமாக எடுத்து விற்றவர்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு ஈடாக, ஆற்று மணல் கொள்ளை பற்றி எழுதுகிறவர்கள், கேள்வி கேட்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்.
எல்லா கனிமத் தொழிலையும் அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. (நிலக்கரியை வெட்டி எடுக்கும் ‘கோல் இந்தியா லிமிடெட்’ நிறுவனம் சுற்றுச்சூழலைக் காப்பதிலும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் காட்டும் முன்னுதாரணமே இதற்குப் பாடம்.) உள்நாட்டுத் தேவைக்காக இருந்தாலும் ஏற்றுமதிக்காகத் தேவைப்பட்டாலும் கனிமங்களை வெட்டி எடுக்கவே கூடாது என்று தடை விதிக்குமாறும் கோரவில்லை. சட்ட விரோதமாகவும் கட்டுப்பாடு இல்லாமலும் கனிமங்களை அகழ்ந்தெடுப்பதால் ஏற்பட்டுள்ள சேதங்களையும் விளைவுகளையும் பாருங்கள் என்றுதான் கோருகிறேன். உலக அளவில் நுகர்வு பண்டங்களுக்கான தேவை தாற்காலிகமாகக் குறைந்திருந்தாலும் சுரங்கத்தொழில் மூலம் இந்திய மக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு, ஜனநாயக அமைப்புகளுக்கு விளைவிக்கும் சேதங்கள் குறைவில்லாமல் தொடர்கின்றன என்பதே உண்மை.
தமிழில்: சாரி