பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து திருமண மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இதன்மூலம் இந்துக்களின் 70 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறி இருக்கிறது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை ஆகும்.
பாகிஸ்தானில் வசித்து வரும் இந்து குடும்பத்தினர் தங்கள் இல்லத்தில் நடக்கும் திருமணங்களை இனி பதிவுசெய்து கொள்ளலாம். அதற்கான ஆவணங்களைப் பெறலாம். சட்டப்படியான முழு பாதுகாப்பை யும் அனுபவிக்கலாம்.
நாடாளுமன்ற கீழ் அவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டது. ஆனால், அதற்குப் பிறகு ‘செனட்' சபை (மேலவை) சில திருத்தங்களுடன் இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் கிடைத்து விட்டதால் இந்த மசோதா, அந்த நாட்டு அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவொரு சம்பிரதாய வழிமுறையாகவே கருதப்படுவதால், இது சட்டமாவது உறுதியாகிவிட்டது.
எனவே பாகிஸ்தானில் விரைவில் இந்து திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்க இருக்கிறது. இந்த மசோதாவின் படி, திருமண ஒப்பந்தம், ஒரு பண்டிதரால் கையெழுத்திடப் பட்டு, இதற்கான அரசு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் ஏறத்தாழ இஸ்லாமியர்களின் ‘நிக்கா நாமா' போன்றே இருக்கும்.
மணமகனின் பெயர், பிறந்த தேதி, தந்தையார் பெயர், திருமண நாள், நேரம், மணமகனின் விலாசம், திருமண நாள், ஊர், தாலுக்கா, மாவட்டம் ஆகிய விவரங்களை இந்த ஒப்பந்தத்தில் பதிய வேண்டும்.
மேலும், மணமகன் தனியாள்தானா? ஏற் கெனவே திருமணம் ஆனவரா? மனைவியை இழந்தவரா என்கிற விவரங்களுடன் அவரை சார்ந்து உள்ள குடும்ப நபர்களின் விவரங்களை யும் தர வேண்டும். மணமகள், தன் தாயாரின் பெயரையும் கூடுதலாகக் குறிப்பிட வேண்டும்.
திருமண ஒப்பந்த ஆவணத்தில் மணமக்கள், சாட்சிகள் மற்றும் பதிவாளர் (அலுவலர்) கையெழுத்திட்ட பின், அந்த அலுவலகத்தின் ஏட்டில் பதிவு செய்து கொள்ளப்படும். இந்த ஏற்பாடு பாகிஸ்தானில் உள்ள இந்து பெண் களுக்கு, தங்களுடைய திருமணத்துக்கான ஆவண சாட்சியத்தை உறுதி செய்கிறது.
இதன்மூலம் சுமார் மூன்று தலைமுறை பெண்களின் மன உளைச்சல், முடிவுக்கு வருகிறது. ஏதோ அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டதல்ல இந்த மசோதா. இதன் ஒவ்வொரு அம்சத்துக்கும், சமய நடவடிக்கைகள் மற்றும் சமய ஒற்றுமை அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது.
மேலும் இது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்து மதப் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அனைத்துத் தரப்பில் இருந்தும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
பாகிஸ்தான் அரசு நேரடியாகவோ மறைமுக மாகவோ எந்த விதத்திலும் யாருக்கும் அழுத்தம் தந்ததாக எந்தச் செய்தியும் இல்லை. மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்தக் காரியம் நடந்தேறி இருக்கிறது.
பாகிஸ்தானின் கிறிஸ்துவ சட்ட வடிவமைப் பாளர் மற்றும் மனித உரிமை அமைச்சர் கம்ரான் மைக்கேல் இந்த மசோதாவை நாடாளு மன்றத்தில் அறிமுகப்படுத்தி பேசும்போது, “மனித உரிமைகளைப் பேணுவதில் குறிப்பாக மகளிர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில், இந்த அரசு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளது” என்றார்.
இதில் திருமணம் புரிந்துகொள்வதற்கும் திருமண உறவை முறித்துக் கொள்வதற்கும் தனித் தனியே வழிமுறைகள் சொல்லப் பட்டுள்ளன. எந்தெந்த சூழ்நிலையில் என்ன காரணங்களுக்காக திருமண உறவை முறித்துக் கொள்ளலாம் என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
திருமணம் செய்து கொள்கிற இருவருமே 18 வயது நிரம்பியவர்களாக இருத்தல் வேண்டும். வாழ்க்கைத் துணை உயிருடன் இருக்கும் போது மற்றொருதிருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற விதி இருவருக்கும் பொருந்தும்.
இந்தச் சட்டத்தின் பிரிவு 7 பாராட்டுக்கு உரியது. அதாவது கணவனை இழந்த பெண், 6 மாதங்களுக்குப் பிறகு விருப்பம் போல் மறுமணம் செய்துகொள்ளலாம்.
திருமண உறவு சிக்கல்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளின் உரிமைகள் பற்றியும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாப், பலுசிஸ்தான் மற்றும் கைபர் பகுதிகளில் இந்த மசோதா அமலுக்கு வரும். சிந்து மாகாணத் தைப் பொறுத்தவரை, இத்தகைய ஒரு மசோதா ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
பொதுவாக பாகிஸ்தான் என்றால் அடிப்படைவாதமும் பயங்கரவாதமும்தான் நமது நினைவுக்கு வரும். உண்மையில் அது ஒரு ஜனநாயக நாடு; மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு நிர்வகிக்கிற நாடு.
சட்டம், நீதிமன்றம், மனித உரிமைகள், குறிப்பாக சிறுபான்மையினரின் நலன் காக்க தன்னால் இயன்றதைச் செய்து வருகிற நாடு என்கிற செய்தியை, இந்து திருமண மசோதா அழுத்தமாகப் பதிய வைக்கிறது.
அந்த நாட்டு மக்களும் இந்த மசோதாவை முழு மனதுடன் வரவேற்பதாகவே தோன்று கிறது. பாகிஸ்தானின் பிரபல ஆங்கில நாளேடான ‘டான்' (DAWN) இச்செய்தியை பிரதானமாக வெளியிட்டது.
அந்த நாளிதழின் இணைய வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்து:
“இஸ்லாமியர், இந்து, சீக்கியர், கிறிஸ்து வர்... யாராக இருந்தாலும் பாகிஸ்தானியரே. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு நமக்கு 70 ஆண்டுகள் ஆனது என்பதே அவமானமாக உள்ளது”.
“இந்தியாவும் பாகிஸ்தானும் நெருங்கி வருவதற்கான ஒரு நல்ல அறிகுறியாக இதைக் கொண்டால், இரு நாட்டு மக்களுக்கும், ஏன்.. ஆசிய கண்டத்துக்கே மிக நல்லது. நம்பிக்கை கள் மரித்துப் போவதில்லை. மீண்டும் மீண்டும் துளிர்க்கவே செய்யும். இந்தத் தளிர், இனி ஆலாக வளர்வது - ‘பெரிய வர்களின்' கையில்” இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.