சிறப்புக் கட்டுரைகள்

அறிவோம் நம் மொழியை: எழுத்தைக் கண்டு ஏமாற வேண்டாம்!

செய்திப்பிரிவு

பிற மொழிகளிலிருந்து புதிதாக வரும் சொற்களை எப்படி எழுதுவது என்பது குறித்து யோசிக்கும்போது, மூல மொழியில் அச்சொல்லின் உச்சரிப்பு, இலக்கு மொழியின் ஒலிப் பண்பு, மக்களிடையே புழங்கும் பேச்சு வழக்கு, எழுத்து வடிவின் சாத்தியங்களும் எல்லைகளும், பல மொழி அறிந்த முன்னோடிகள் வகுத்துக் கொடுத்த பாதை ஆகியவற்றை அடியொற்றிச் செயல்பட வேண்டும். பன்மொழிகளை அறிந்த பாரதியாரைப் போன்ற பலர் தமிழ் எழுத்து மொழி குறித்த விழிப்புணர்வுடனும் கவனத்து டனும் செயலாற்றியிருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்தை முன்னு தாரணமாகக் கொண்டு புதிய சொற்களை எழுதும் விதத்தை முடிவுசெய்யலாம்.

இந்தியாவுக்கு வெளியிலிருந்து நமக்கு வரும் புதிய சொற்கள் யாவும் ஆங்கிலச் சொற்கள் அல்ல. ஆனால், பெருமளவில் ஆங்கிலம் வழியாகவே, A, B, C என்பதான ரோமன் வரிவடிவின் (Roman Script) எழுத்துக்கள் மூலம் அவை நம்மை அடைகின்றன. ஆங்கிலச் சொற்களைப் படிக்கும் விதத்திலேயே இவற்றைப் படித்தால் பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும். பெரும்பாலும் பெயர்ச் சொற்களே இதுபோல வரும். உதாரணமாக, Francois Truffaut என்னும் பிரெஞ்சு மொழிப் பெயரை உச்சரிக்க வேண்டிய விதம், ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ. இந்தப் பெயரை ஆங்கிலமாக நினைத்துப் படித்தால் எப்படி இருக்கும் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். தமிழில் பரவலாக வாசிப்பவர்களுக்கு பூர்ஷ்வா என்னும் சொல் அறிமுகமாகியிருக்கும். பிரெஞ்சு சொல்லான இதை அம்மொழியில் Bourgeois என எழுதுவார்கள். பூர்ஷ்வா என்னும் சொல்லையும் அதன் பொருளையும் தமிழ் மூலமாக மட்டுமே அறிந்தவர்கள் Bourgeois என்னும் சொல்லைப் படிக்கத் திணறக்கூடும்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் Hansie Cronje-வின் பெயரைத் தமிழ் இதழ்கள் குரோஞ்ச், குரோஞ்சி என்று வெவ்வேறு விதங்களில் எழுதிக்கொண்டிருக்கின்றன. இணையத்தில் தேடியிருந்தாலோ, தென்னாப்பிரிக்க வர்ணனையாளர்களின் குரலை ஒரு கணம் கூர்ந்து கேட்டிருந்தாலோ அவர் பெயரை ஹன்ஸி க்ரோன்யே என உச்சரிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கலாம். பலர் இதற்காக மெனக்கெடுவதில்லை என்பதுதான் பிரச்சினை.

இதுபோன்ற சொற்களை ஆங்கிலச் சொல்லாகக் கருதிவிடக் கூடாது என்பது அடிப்படை விதி. அது எந்த மொழிச் சொல் என்பதை அறிந்து, அந்த மொழியில் அது எப்படி உச்சரிக்கப்படுகிறது என்பதை அம்மொழி அறிந்தவர் களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அல்லது இணையத்தை நாடலாம். ஒரு சொல்லை கூகுள் தேடுபொறியில் உள்ளிட்டுத் தேடினால் அச்சொல்லின் பொருளுடன் அதன் உச்சரிப்பும் கொடுக்கப்படுகிறது. வரி வடிவிலும் ஒலி வடிவிலும் உச்சரிப்பு வழங்கப்படுகிறது. அப்படிக் கிடைக்காவிட்டால் How to pronounce Bourgeois எனத் தேடினால், அதற்கான ஒலி இணைப்பு கிடைத்துவிடும். அறிவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆனால், ஐயமோ கேள்வியோ எழாவிட்டால் எந்த வழியும் திறக்காது.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

SCROLL FOR NEXT