வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்துச் சேர்த்ததாக மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு சாதாரணமானதல்ல. சட்டரீதியாக அந்த வழக்கு நாட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் விரிவானவை, ஆழமானவை. பொது வாழ்வில் ஈடுபட்டு, அரசு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்புக்கு வரும் ஊழியர், வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்துச் சேர்ப்பதன் மீதான வழக்கும், சாதாரண நபர் செய்யும் குற்றச் செயல்மீதான வழக்கும் மாறுபட்டவை. வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவிப்பில் ஈடுபட்ட பொது ஊழியரைச் சட்டப்படி தண்டிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவருடைய சட்டபூர்வ வாரிசுகளும் அந்த முறைகேடான சொத்துகளைப் பலன் அடைய விட்டுவிடக் கூடாது என்பதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கம்.
5.12.2016-ல் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 7.6.2016-ல் முடிவடைந்தது.14.2.2017-ல் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பெங்களூரு விசாரணை நீதிமன்றம் முதலில் வழங்கிய தண்டனைத் தீர்ப்பே செல்லும் என்று இறுதியாகத் தீர்ப்பளித்தது. அதன்படி வி.கே.சசிகலா, ஜே.இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோருக்குச் சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி ரொக்க அபராதமும் விதிக்கப்பட்டது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா இடைப்பட்ட காலத்தில் இறந்துவிட்டதால், விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நிராகரித்த உச்ச நீதிமன்றம்
கர்நாடக மாநில அரசு மார்ச் 21-ல் இத்தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை கோரும் மனுவைத் தாக்கல் செய்தது. ஜெயலலிதா வழக்கில் விசாரணை முடிந்து நீண்ட காலத்துக்குப் பிறகு, அதே சமயம் தீர்ப்பு வருவதற்கு முன் ஜெயலலிதா இறந்திருக்கிறார். விசாரணை முடிந்துவிட்டதால், தீர்ப்பு வரவில்லை என்றாலும் தண்டனை அவருக்குப் பொருந்தும். எனவே, முறை கேடாகச் சேர்க்கப்பட்ட அவருடைய சொத்துக்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மறுபரிசீலனை கோரும் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 5-ல் நிராகரித்தது. இந்த விவகாரத்தில் திட்டவட்டமாக ஒரு தீர்ப்பைக் கூறி, இதில் ஒரு தெளிவை ஏற்படுத்தும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டது. இதன் மூலம், ஊழல் செய்யும் பொது சேவகர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொது ஊழியர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் நிறைய சம்பாதித்து ஏராளமான சொத்துகளை வாங்கிவிட்டு, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டால், இந்த வழக்கில் அளித்த தீர்ப்புப்படி அவர் சேர்த்த சொத்துகளை அவருடைய சட்டபூர்வ வாரிசுகள் எந்தவிதத் தடையும் இல்லாமல் அனுபவித்துக்கொள்ளலாம். பொது வாழ்க்கையிலிருந்து ஊழலை ஒழிக்கும் பயணத்தில் இத்தீர்ப்பு பின்னடைவாகும்.
விடுவிப்பு சரியா?
குற்றவியல் வழக்கில், அரசியல் சட்டத்தின் 136-வது பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அதிகாரத்தின் பின்னணியில், ஒரு கேள்வி எழுகிறது. விசாரணை முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்படாத நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால் தீர்ப்பு வரும்போது அவரை வழக்கிலிருந்து விடுவிப்பது, அவர் மீதான மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் விடுவிக்கப்படுவதாகிவிடுமா? வழக்கில் வாதங்கள் முடிந்த நாளிலிருந்து, இறுதியாகத் தீர்ப்பு அறிவிக்கப்படும் நாள் வரையிலான காலம் இடைவெளி அற்றதாகத்தான் கருதப்பட வேண்டும் என்பது சட்டம்.
வழக்கில் விசாரணை முடிந்த உடனேயே தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். தீர்ப்பை வேறொரு நாளில் அளிப்பது நீதிமன்றத்தின் நிர்வாக வசதிக்காகத்தான். இறுதி வாதப் பிரதிவாதங்கள் முடிந்த நாளிலிருந்து, தீ்ர்ப்பு கூறப்படும் நாள் வரையிலான இடைப்பட்ட காலத்தில், எது நடந்தாலும் அது தீர்ப்பின் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
கைவிடும் பேச்சுக்கே இடமில்லை
குடிமையியல் சட்ட நடைமுறைத் தொகுப்பின் ஆணை 22, விதி 6 மிகத் தெளிவாகக் கூறுகிறது, தீர்ப்பு வெளியாவதற்கு முன்னால் மரணம் நிகழ்ந்தால் மேல்முறையீட்டைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று. வாதப் பிரதிவாதங்கள் முடிந்த நாளிலேயே தீர்ப்பு கூறப்பட்டால் அதற்கென்ன வலுவும் பயனும் இருக்குமோ அதுவே அதற்குப் பிறகு கூறும் தீர்ப்புக்கும் இருக்கும் என்கிறது. உச்ச நீதிமன்றமே சில சிவில் வழக்குகளில் இந்த விதியைப் பயன்படுத்தியிருக்கிறது. தேர்தல் வழக்கிலும் ஒரு வேட்பாளர், வாதப் பிரதிவாதங்கள் முடிந்த பிறகு - தீர்ப்பு கூறப்படுவதற்கு முன்னால் இறந்துவிட்டால் வழக்கிலிருந்து விடுபடுவதில்லை.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்படியான வழக்குகளில், வேறுமாதிரியாகக் கருதலாம் என்று கூறும் கொள்கையோ, அதிகாரமோ கிடையாது. சுருக்கமாகச் சொல்வதானால் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்படுவதற்கு முன்னால், குற்றஞ்சாட்டப்பட்டவர் இறந்தால் அவரைத் தண்டனைகளிலிருந்து விடுவிப்பதற்கான சட்ட நடைமுறை ஏதும் கிடையாது. ஜெயலலிதா சொத்து வழக்கில் உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தபோது, மேற்சொன்ன சட்டக் கொள்கைகளை முழுதாகக் கவனத்தில் கொள்ளாமல் திடீர் முடிவெடுத்திருக்கிறது. இன்னமும் விசாரிக்க வேண்டியிருக்கிறது என்று அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளிவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபரிசீலனை மனுவுக்கான காரணங்கள்
தீர்ப்பு கூறிய பிப்ரவரி 14-ல், ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு அவரது மறைவையடுத்து விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று மட்டுமே கூறப்பட்டது, எந்தவித விவாதமும் கேள்விகளும் எழுப்பப்பட இடமளிக்காமல்! சம்பந்தப்பட்ட இதர மனுதாரர்களின் தரப்பைக் கேட்காமலேயே இது நீதிமன்ற நடைமுறையில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த முடிவின் அம்சங்களை விவாதிக்கவும், வாய்மொழியாகவேனும் மேல்முறையீட்டைக் கேட்கவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. ஆனால், சட்டத்தைத் தவறான கண்ணோட்டத்தில் அணுகி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ‘வெளிப்படையாக அறிவிக்கப்படாமலே நடவடிக்கை’ என்பதான (சப் சைலன்ஷியோ) கொள்கை இந்த விசாரணையில் கையாளப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மீது விசாரணை நீதிமன்றம் விதித்த ரூ.100 கோடி அபராதத்தைப் பெறு வதற்காகத்தான் கர்நாடக அரசு பேராசையுடன் இந்த மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது என்று ஊடகங்களின் ஒரு பிரிவில் தவறான எண்ணம் ஏற்படுத்தப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கு தமிழ்நாடு அரசால் தொடரப்பட்டது. வழக்கில் முக்கிய எதிரி முதலமைச்சராக இருக்கிறார் என்பதால், விசாரணை நடுநிலையுடன் நடப்பதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே கர்நாடகம் தலையிட நேர்ந்தது.
இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டிய தனிப் பொறுப்பு இனி கர்நாடகத்துக்கே என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிந்துதான் கர்நாடகம் வழக்கை நடத்தியது. கர்நாடக மாநிலத்துக்கு இதில் தனிப்பட்ட ஆர்வம் எதுவும் கிடையாது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள், அபராதம் இரண்டுமே தமிழ்நாட்டு அரசுக்குத்தான் வழங்கப்படும். வழக்குச் செலவுத் தொகை மட்டும்தான் கர்நாடகத்துக்குச் சேர வேண்டியது. சட்டத்தின் முக்கியமான அம்சம் கவனிக்கப்படாமல் போகக் கூடாது என்பதால்தான் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் தன்னை நம்பி ஒப்படைத்த வழக்கைப் பயனுள்ள வகையில் நடத்தி முடித்தோம் என்ற திருப்தி மட்டும்தான் கர்நாடகத்துக்கு. கட்டுரையாளர் இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் ஆலோசகராகவும் செயல்பட்டவர்
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: சாரி