சிறப்புக் கட்டுரைகள்

களைகட்டுகிறது மதுரை புத்தகத் திருவிழா!

கே.கே.மகேஷ்

மக்களுக்கு ஒரு பழக்கமுண்டு. ஒரு நிகழ்வு பிடித்துப்போய்விட்டால், அதில் பங்காளிகளாகவே மாறிவிடுவது. அப்படி ஓர் ஆர்வத்தை இவ்வாண்டு புத்தகத் திருவிழாவிலும் காண முடிகிறது.

2006-ல் தொடங்கிய மதுரை புத்தகத் திருவிழா இப்போது 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத ஆர்வத்தோடு மக்கள் தமுக்கம் மைதானத்தில் அலைமோதுகிறார்கள். நேற்று மாலை 5.30-க்குத்தான் புத்தகத் திருவிழா தொடங்கியது. ஆனால், காலை 10 மணிக்கே மக்கள் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிகாலையில் சூட்டோடு சூடாக நாளிதழ்களை வாங்குவதைப் போல, கட்டுகளைப் பிரித்ததும் புத்தகம் வாங்கியவர்களைப் பார்க்க முடிந்தது.

புத்தகக் காட்சியின் உள்ளே நுழைந்ததும் முதலில் இருப்பது சரஸ்வதி மகால் நூலக அரங்கு. “தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த என். சுப்பையன், கடந்த ஆண்டு மதுரை ஆட்சியரிடம் பேசி முதல் கடையை எங்களுக்கு ஒதுக்கித்தந்திருக்கிறார். இப்போதும் அது தொடர்கிறது” என்று சிரிக்கிறார் சரஸ்வதி மகால் நூலக அரங்கு விற்பனைப் பொறுப்பாளர் நேரு.

மொத்தம் 260 அரங்குகள். 5 லட்சம் தலைப்புகள், சுமார் இரண்டு கோடி புத்தகங்கள்! “புதிதாக என்ன வந்திருக்கிறது?” என்று விசாரித்த இளைஞரிடம், “புத்தகத்தில் பழசு, புதுசெல்லாம் கிடையாது தம்பி. 2000 வருடத்துக்கு முன்பு எழுதிய புத்தகம் என்றாலும், அதை நாம் வாசிக்காதவரையில் அது புதிய புத்தகம்தான்” என்கிறார் ‘அலைகள்’ சிவம். பிறகு என்ன நினைத்தாரோ, ‘தனியார்மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள்’, ‘மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (9 தொகுதிகள்)’ போன்ற புத்தகங்களைக் காட்டுகிறார்.

கடந்த ஆண்டு கலாமுக்குக் கிடைத்த வரவேற்பு, இந்த ஆண்டு நா. முத்துக்குமாருக்கு. இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாகப் போட்டித்தேர்வுப் புத்தகங்களையும், அவற்றுக்கான அரங்குகளையும் காண முடிந்தது. போதாக்குறைக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான மத்திய நுழைவுத்தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு வினா-விடைகளும்.

நேஷனல் புக் ட்ரஸ்ட், சாகித்ய அகாடமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றவற்றில் தரமான, அதேநேரத்தில் சற்று விலை குறைவான புத்தகங்களை அதிகம் பார்க்க முடிகிறது.

கணியன் பதிப்பகம், மகேஸ்வரி புத்தக நிலையம், மீனாட்சி புத்தக நிலையம், நற்றிணை பதிப்பகம், சர்வோதய இலக்கியப் பண்ணை, காந்திய இலக்கிய சங்கம், இந்திய பார்வையற்றோர் சங்கம் போன்ற மதுரை மண்ணின் பதிப்பகங்களும் அரங்கு அமைத்திருக்கின்றன. அங்கெல்லாம் மற்ற அரங்குகளைக் காட்டிலும் கூடுதலாக மதுரை வட்டாரப் புத்தகங்களைக் காண முடிகிறது. நற்றிணை பதிப்பகத்தில் 890 ரூபாய் மதிப்புள்ள மா. அரங்கநாதன் படைப்புகள் முழுத்தொகுப்பு 500 மட்டுமே என்று எழுதிவைத்திருந்தார்கள். இதேபோல வண்ணநிலவன் சிறுகதைகள், அழகிய பெரியவன் கதைகள், பூமணியின் 5 நாவல்கள், கோபி கிருஷ்ணன் படைப்புகள் போன்றவற்றுக்கும் கூடுதல் தள்ளுபடி அளிக்கிறார்கள்.

கால இயந்திரத்தில் ஏறியது போல சட்டென்று பள்ளிப்பருவத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் அரங்குதான் முத்து காமிக்ஸ் அரங்கு. இரும்புக்கை மாயாவி, ஒருவனைத் தாடையில் ஓங்கிக் குத்தி மண்டையோடு முத்திரையைப் பதித்துக்கொண்டிருந்தார். நடுத்தர வயதினர் பலர், தங்கள் குழந்தைகளுக்கு என்று சாக்கு சொல்லி, தங்களுக்கு காமிக்ஸ் கதைகளைப் பொறுக்கினார்கள். இன்னொரு அரங்கில் குழந்தைகளும், தாய்மார்களும் கும்பலாக நின்றார்கள். அனைத்தும் குழந்தைகளுக்கான வெளிநாட்டுப் புத்தகங்கள். “வெளிநாட்டுப் பிள்ளைகள் படித்துவிட்டு எடைக்குப்போட்ட புத்தகங்களை கண்டெய்னர் கண்டெய்னராக வாங்கி வந்து தள்ளுபடிக்கு விற்கிறார்களே” என்று எண்ணியபோது, “புத்தகத்தில் பழசு, புதுசெல்லாம் கிடையாது தம்பி” என்ற சிவம் குரல் நினைவுக்கு வந்தது.

‘பதிப்புலகில் முதன்முறையாக உரையுடன்’ என்ற விளம்பரத்துடன் பாரதியார் கவிதைகள் நூலை வெளியிட்டிருக்கிறது, கற்பகம் புத்தகாலயம் (அரங்கு எண்: 225). உரையுடன் ‘நீதி நூல் களஞ்சியம்’ என்ற 23 நூல்கள் கொண்ட தொகுப்பு தள்ளுபடியில் கிடைக்கும் மற்றொரு புது வரவு.

முதல்நாளில் இவ்வளவுதான் பார்க்க முடிந்தது. 260 அரங்குகளையும் அனுபவிக்க வேண்டுமானால் நீங்கள் நேரில்தான் வர வேண்டும். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் காட்சி நடக்கிறது. நுழைவுக் கட்டணம் கிடையாது. மழையோ, வெயிலோ எல்லாவற்றையும் தாங்குகிற பிரம்மாண்டமான அரங்கு, இதமான தரை விரிப்பு, குடிக்கத் தண்ணீர், அருகிலேயே சிற்றுண்டிச் சாலை, ஏ.டி.எம்., கடன் அட்டையும் ஏற்கப்படுகிறது, வேறென்ன வேண்டும்? வாருங்கள்! அட்சய திருதியைக்கு நகைக்கடைக்குப் போவது போல், ஆடிக் கழிவில் ஜவுளிக்கடையில் குவிவது போல் புத்தகக் காட்சியை முற்றுகையிடுவோம். நமக்காக யாரோ செய்த தவம்தான் புத்தகங்கள். வரத்தை வாங்கிச் செல்லத் தயக்கமேன்?

-கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

SCROLL FOR NEXT