சிறப்புக் கட்டுரைகள்

நீதி சொல்லும் சேதி - கருப்பு கோட்டுக்கு உண்டா கவசம்?

செய்திப்பிரிவு

குஜராத் மாநிலத்தில் நாடியட் மாவட்ட நீதிபதி ஒருவரின் வாயில் மதுவை ஊற்றி விலங்கிட்டு காவல்துறையினர் நடுத்தெருவில் அழைத்துச் சென்றதை அறிந்த நீதித்துறை அதிர்ந்தது. உச்ச நீதிமன்றத்தில் அந்த காவலர்களை தண்டிக்க நீதிபதிகள் சங்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பில் நீதித்துறை நடுவர்கள் கைது செய்யப்படும்போது அங்குள்ள மாவட்ட நீதிபதிக்கோ அல்லது உயர் நீதிமன்றத்துக்கோ முன் தகவல் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துமீறிய காவலர்களும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.

அதேபோல் ஊழல் குற்றங்களுக்காக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மீது கிரிமினல் வழக்கு தொடர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி பெறவேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி வீராசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சட்டத்தில் இதுபற்றிய தெளிவுரை இல்லாவிட்டாலும் இவ்விரு வழக்குகளில் நீதித்துறையின் சுதந்திரத் தன்மையைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தால் ஏற்படுத்திக் கொண்ட சட்டக் கவசம் இவை.

இத் தீர்ப்புகளையொட்டியே காஜியாபாத் நீதிமன்ற நடுவர்கள் மீது (பின்னர் சிலர், உயர் நீதிமன்ற நீதிபதிகளாகிவிட்டனர்) ஊழியர்கள் சேமநல நிதி முறைகேட்டுக்காக வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டது. நிர்மல் யாதவ் என்ற பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதியின் மீதும் ஊழல் வழக்கு தொடர இந்திய தலைமை நீதிபதி அனுமதி அளித்தார்.

சமீபத்தில் பெண் காவலரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட குன்னூர் குற்றவியல் நடுவரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. ஏனென்றால், அவரை கைது செய்தபோது காவல் துறையினர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. ஊர் மாற்றம் செய்யப்பட்ட அவருக்கு உயர் நீதிமன்ற வளாகத்திலேயே பதவி அளிக்கப்பட்டது. காவல் அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. சட்டத்தின் அடிப்படையிலும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் இப்படி நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புக் கவசம் வழக்கறிஞர்களுக்கு உண்டா?

1980-களில் சில வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டபோது, ‘வழக்கறிஞர்களும் நீதிமன்ற அலுவலர்களே; அவர்களைக் கைது செய்யும்போதும் நடுவரிடம் முன்அனுமதி பெறும் வகையில் சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. 19.2.2009 உயர் நீதிமன்ற வளாக சம்பவங்களின் பின்னணியை ஆராய தனி வழக்கு எடுக்கப்பட்டு அதனை நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அதில் கிரிமினல் வழக்குகளில் வழக்கறிஞர்களை கைது செய்ய நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு உள்ளதுபோல் தடைக் காப்புரிமை (Immunity) வழங்க வேண்டும் என்கிற வழக்கறிஞர்களின் வாதத்துக்கு சட்ட ஆதாரம் இல்லை என்று நிராகரித்தது டிவிஷன் பெஞ்ச். அதேசமயம், நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டவை என்பதால் அவற்றின் புனிதம் கெடாமலிருக்க, காவல் துறையினர் நீதிமன்ற வளாகங்களினுள் நடவடிக்கைகள் எடுக்கும்போது நீதிமன்றத்திடம் முன்அனுமதி பெற அறிவுறுத்தியது.

இந்த முன்னுதாரணத்தைக் சுட்டிக்காட்டியே சமீபத்தில் குற்ற வழக்கில் வழக்கறிஞர் ஒருவரை நீதிமன்ற வளாகத்துக்குள் கைது செய்வதைத் தடுத்து நிறுத்தி, காவல் அதிகாரி மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. ஆனால், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களை தகுந்த ஆதாரத்துடன், முறைப்படி கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க சட்டத்தில் தடை ஏதும் இல்லை என்பதுதான் உண்மை.

SCROLL FOR NEXT