அரசுப் பணியை விட்டுவிட்டு, இலக்கியத்துக்கோ அரசியலுக்கோ வருவது அபூர்வம். பெண்கள் வருவது அரிதினும் அரிது. அப்படி வந்தது மட்டுமின்றி, இலக்கியம், அரசியல் என இரட்டைக் குதிரையில் சவாரி செல்லும் சிவகாமி ஐ.ஏ.எஸ். உடன் ஒரு மின்னல் வேகப் பேட்டி:
தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரி, பெண் எழுத்தாளர், அரசியல்வாதி: என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்?
அரசியல்வாதிகள் எடுக்கிற முடிவுகளை நடைமுறைப்படுத்துகிற சிப்பந்தி போல்தான் என் போன்ற அதிகாரிகள் பல நேரங்களில் இருக்க வேண்டியதிருக்கிறது. புதிய சிந்தனைகள், படைப்பூக்கத்துக்குப் போதிய இடமில்லை. எழுத்துலகத்திலோ, என்னைப் பாதிக்கிற விஷயங்களைப் பற்றி சுதந்திரமாக எழுதினேன். நாம் என்ன விரும்புகிறோமோ அதனை நடைமுறைப்படுத்தக்கூடிய களமாக அரசியல் இருக்கிறது.
உங்களது, ‘புதிய கோடங்கி’ இதழ் பற்றி...
‘தலித் இலக்கியம்’ என்று அரசாங்கப் பதிவாக முதன்முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது 1995-ல் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில்தான். அப்போது தலித் இலக்கிய அமர்வில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை முழுமையாக வெளியிடுவதற்காகத் தொடங்கியதுதான் ‘புதிய கோடங்கி’ இதழ். 2001 வரையில் காலாண்டு இதழாக இருந்து, தற்போது மாத இதழாக வந்துகொண்டிருக்கிறது.
நாவல்களிலேயே அதிகக் கவனம் செலுத்துவது போலத் தெரிகிறதே?
ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியாது. இரு கவிதைத் தொகுப்பும், நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் எழுதியிருக்கிறேன். நாவல் எழுதுவதில் என்ன வசதியென்றால், ஒரு பெரிய வாழ்க்கையை, வரைபடம் போல தங்குதடையின்றி விவரிக்க வசதியாக இருக்கிறது. தவிரவும் நாவல் எழுதுவதே என் விருப்பமாகவும் இருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் ‘உயிர்’ நாவலையும் சேர்த்து ஆறு நாவல்கள் எழுதியிருக்கிறேன்.
பொதுவுடைமை இயக்கமும் திராவிட இயக்கமும் கிராமங்கள்தோறும் படிப்பகங்களை ஏற்படுத்தின. அறிவுத்தளத்திலிருந்து அரசியலுக்கு வந்துள்ள நீங்கள் இதுபோல் ஏதும் செய்கிறீர்களா?
எங்களது ‘சமூக சமத்துவப்படை’யின் சார்பில், தென்னிந்திய தலித் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் பேரவையை ஏற்படுத்தி தலித் மக்கள் வாழ்வைப் பேசுகிற, அவர்களது மேம்பாட்டுக்கு உதவுகிற எந்தப் படைப்பாக இருந்தாலும் அதனை அந்தக் கூட்டங்களில் அறிமுகப்படுத்திப்பேசுகிறோம். மேலும், இன்றைய சூழலில் பள்ளிப் பாடத்திட்டங்களிலேயே நல்ல இலக்கியங்களைச் சேர்ப்பது நல்லது என்று தோன்றுகிறது. பலருக்கும் அது நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும்!
உங்களது அடுத்த திட்டம்?
‘அரசியலில் பெண்கள்’ என்ற கருப்பொருளில் நான் எழுதிய நீண்ட கட்டுரை ‘இடதுகால் நுழைவு’ என்ற தலைப்பில் தற்போது வெளியாகியிருக்கிறது. அடுத்ததாக, ஆங்கிலத்தில் நேரடியாக ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
-கே.கே. மகேஷ்