ஜூலை, 1991 தொடங்கிய புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கம் தெரிவதற்கு முன் நாட்டை ஒரு பெரிய வங்கி - பங்குச்சந்தை ஊழல் உலுக்கியது. ஹர்ஷத் மேத்தா என்ற முன்னாள் காப்பீட்டுத் துறை ஊழியர் திடீரென பங்குச்சந்தையில் நுழைந்து, இந்தியப் பங்குச்சந்தையின் போக்கையே மாற்றினார். அவரால் வங்கிகளுக்கு ரூ.400 கோடி நஷ்டம் ஏற்பட்டது; மும்பை பங்குச்சந்தைக் குறியீடு மூன்று மாதங்களில் இரண்டு மடங்காக உயர்ந்து விழுந்தது.
ஒவ்வொரு வங்கியும் தங்களிடம் உள்ள வைப்புத்தொகைக்கு ஏற்ப அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வங்கியிலும் அவ்வப்போது வைப்புத்தொகை அளவு மாறுவதால், சில வங்கிகள் தங்களிடம் உள்ள அரசு கடன் பத்திரங்களை விற்கும், சில அவற்றை வாங்கும். இவர்களுக்கு இடையே தரகு வேலை செய்யும் ஹர்ஷத் மேத்தா, ஒரு வங்கியிடம் முன்பணம் பெற்று, மற்றொரு வங்கியில் அரசு கடன் பத்திரத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தை சிறிது நாட்களுக்குப் பிறகு செலுத்துவது; இந்த இடைப்பட்ட காலத்தில் வங்கிப் பணத்தைக் கொண்டு பங்குகளை வாங்கி விற்பது. இதிலும், மிகக் குறுகிய காலத்தில் ஒரு பங்கின் விலையை மிக அதிக அளவில் உயர்த்தி விற்று லாபம் பார்ப்பது ஆகிய வேலைகளில் ஈடுபட்டார். ஏசிசி என்ற நிறுவனத்தின் பங்கு விலை மட்டும் ரூ. 200-லிருந்து ரூ.10,000 ஆக உயர்ந்தது என்றால், அப்போது இவர் ஆடிய ஆட்டத்தைப் புரிந்துகொள்ளலாம். 1991-92-ல் ஹர்ஷத் மேத்தா கட்டிய வருமானவரி முன் பணம் மட்டுமே ரூ.28 கோடி!
இந்த ஊழல் வெளிவந்த உடன், ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு 28 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இறந்துபோனார். மன்மோகன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி காங்கிரஸுக்குள்ளிருந்தும்கூடக் குரல்கள் கேட்டன. இந்த ஊழல் புதிய பொருளாதாரக் கொள்கையினால் ஏற்படவில்லை; மாறாக, விதிமீறல்களினால் ஏற்பட்டது என்று அரசுத் தரப்பு சொன்னது. “பங்குச்சந்தையில் நடப்பதை நினைத்து நான் தூங்காமல் இருக்க முடியாது” என்று அப்போது மன்மோகன் சிங் உதிர்த்த வார்த்தைகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின.
இராம.சீனுவாசன், பேராசிரியர்.