திராவிட முன்னேற்றக் கழகத்தை சுமார் 20 ஆண்டுகளாகப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கும் பல நோய்களில் ஒன்றான சகோதர யுத்தம் முடிவுக்கு வருகிறது. வாலி மீது ராமன் மறைந்திருந்து அம்பு எய்து சுக்ரீவனுக்கு உதவியதுபோல அல்லாமல், ஸ்டாலினுக்கு உதவியாக, கருணாநிதி நேரடியாகவே அம்பை அழகிரி மீது எய்ய ஆரம்பித்திருக்கிறார்.
தி.மு.க-வின் பெருமை
இந்தியாவில் வேறெந்தக் கட்சிக்கும் இல்லாத ஒரு ‘பெருமை' தி.மு.க-வுக்கு இருந்துவருகிறது. மீதிக் கட்சிகளில் எல்லாம் பல கோஷ்டிகள் இருப்பார்கள். ஒவ்வொரு கோஷ்டியின் தலைவரும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். தி.மு.க-வில் மட்டும்தான் இருக்கும் எல்லா கோஷ்டிகளின் தலைவர்களும் ஒரே குடும்பத்திலிருந்து வந்தவர்கள். கட்சிக்குள் வேறு கோஷ்டிகளே கிடையாது.
வைகோ, கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு, ஸ்டாலினுக்குப் போட்டியாக எந்தத் தலைவரும் இல்லாத நிலையில், அவருடைய சகோதரர் அழகிரியே போட்டியாக உருவானதற்குக் காரணம் இருவரின் தந்தையும் கட்சித் தலைவருமான கருணாநிதியேதான். பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே கட்சியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தவர் ஸ்டாலின். ஆனால், அழகிரி அப்படித் தீவிரமாக ஈடுபட்டதில்லை. 1976-ல் நெருக்கடி நிலையின்போது இந்திரா அரசு தி.மு.க-வினர் மீது கடும் நடவடிக்கை எடுத்தபோது, கருணாநிதி குடும்பத்திலிருந்து கைதுசெய்யப்பட்ட ஒரே நபர் ஸ்டாலின்தான். அப்போது அவருக்கு வயது 24. அவரை விட இரண்டு வயது மூத்தவரான அழகிரியை இந்திரா அரசு அரசியல்ரீதியாக ஒரு முக்கியமான நபராகக் கருதிக் கைதுசெய்யும் அவசியமே அப்போது இருக்கவில்லை.
வாரிசுகள் வரலாறு
ஒரு தந்தையாக கருணாநிதி, அழகிரியை எப்படிக் கையாள்வது என்பதில் செய்த தவறுகளும் குழப்பங்களும்தான் தி.மு.க-வையே பாதிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டிருக்கின்றன. நல்ல பாடகராக வந்திருக்கக்கூடிய முதல் மகன் முத்துவை தேவையில்லாமல் எம்.ஜி.ஆருக்குப் போட்டி நடிகராகக் கொண்டுவர கருணாநிதி செய்த முயற்சிகள் முத்துவின் வாழ்க்கைப் பயணத்தையே தடம்புரளச் செய்தன. அதே போன்ற இன்னொரு தப்பைத்தான் அழகிரி விஷயத்திலும் அவர் செய்தார். சென்னையில் அழகிரியைச் சமாளிக்க முடியாமல் சிங்கப்பூருக்கு அனுப்பினார். பின்னர் திரும்பி வந்தவரை மதுரையில் முரசொலி பதிப்புக்குப் பொறுப்பாளராக அனுப்பினார். சில ஆண்டுகளில் அந்தப் பதிப்பே மூடப்பட்டுவிட்டது. ஆனால், அழகிரி மதுரையில் தி.மு.க. பிரமுகராக நிலைபெற்றுவிட்டார். அழகிரிக்காகக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை அங்கே கருணாநிதி ஓரங்கட்டவேண்டிவந்தது. அரசியல்ரீதியாக கருணாநிதிக்கு உதவிகரமாக இருந்த அவரது மகன்கள் என்று தமிழரசுவையும் ஸ்டாலினையும்தான் குறிப்பிடலாம். தமிழரசு, அரசியலுக்குள் வராமல் இருப்பதன் மூலம் உதவி செய்தவர். ஸ்டாலின் தொடர்ந்து 40 ஆண்டுகளாகக் கட்சிப் பணியைச் செய்துவந்திருப்பவர்.
‘ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்டு பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் முதலான சீனியர்கள் எல்லாம் கட்சியில் செயல்படத் தயாராக இருக்கும்போது, நீயும் அப்படிச் செய்வதாயிருந்தால் கட்சியில் இரு’ என்று அழகிரியிடம் மட்டும் கருணாநிதியால் சொல்லவே முடியவில்லை. அரச வம்சத்தில் இரு சகோதரர்களில் மூத்தவன் இருக்கும்போது இளையவனுக்கு எப்படி மகுடம் சூட்டுவது என்று குடும்பத்துக்குள் ஏற்படும் எதிர்ப்புக்கு நிகரானதாகவே இந்த விஷயமும் கருணாநிதி குடும்பத்துக்குள் இருக்கிறது. அதற்குப் பலியானது ஜனநாயக அமைப்பில் இயங்கும் தி.மு.க. என்ற கட்சிதான்.
அழகிரிக்குச் சார்பாகக் குடும்பத்துக்குள் வலிமையாக ஒலிக்கும் குரல் அவரது தாயார் தயாளு அம்மையாருடையது என்று பல நிகழ்வுகளின்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒரு கணவனாக, ஒரு தந்தையாக இந்தக் குரலுக்குச் செவிசாய்த்ததன் விளைவாகக் கட்சிக்குத் தேவையற்ற, கட்சியைப் பலவீனப்படுத்திய ஒரு சகோதர யுத்தத்துக்கு கருணாநிதி தொடர்ந்து வித்திட்டு வளர்த்துவந்திருக்கிறார். இதை ஊக்குவித்ததன் அடுத்த விளைவாக அரசியலுக்கு வருவதில் ஆர்வமில்லாமல், அவருடைய இலக்கிய வாரிசாக மட்டுமே உருவாகிவந்த மகளையும் இதற்குள் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உண்மையில், கலைஞரின் அசல் அரசியல் வாரிசான, மனசாட்சியான முரசொலி மாறனின் அகால மரணத்துக்குப் பிறகு, அவருடைய குடும்பத்திலிருந்தும் ரத்த வாரிசை அரசியலுக்குக் கொண்டுவந்து மொத்தமாக தி.மு.க. என்ற இயக்கத்தைச் சிதைக்கும் போக்குக்கே கருணாநிதி வழிவகுத்தார்.
வாரிசுகளின் சாதனை
கருணாநிதியின் குடும்ப வாரிசுகளால் தி.மு.க-வுக்கு ஏற்பட்ட லாபத்தை விட, இழப்புகளே அதிகம். கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் சென்ற தேர்தலில் தி.மு.க-வைச் சரிவை நோக்கித் தள்ளியது. தயாநிதி மாறன் - கலாநிதி மாறன் குடும்பத்துடன் நடந்த சன் டி.வி. பங்குச் சண்டை , டெல்லி மன்மோகன் அரசின் மந்திரி சபை உருவாக்கம் வரை நீரா ராடியா டேப்களில் எதிரொலித்தது. முறைகேடாக டெலிபோன் எக்சேஞ்ச் நடத்திய வழக்கு இப்போது சி.பி.ஐ. வசம். அழகிரியின் ஆதரவு சக்திகள் எல்லாம் கிரானைட் முதல் நிலப்பறிப்பு வழக்கு வரை சிக்கியிருக்கிறார்கள். வேறு எந்த மத்திய கேபினட் அமைச்சர்பற்றியும் அவருக்குக் கீழே உள்ள அமைச்சரே பிரதமரிடம் புகார்செய்த வரலாறு இல்லை. அழகிரி அந்த வரலாற்றைச் சாதித்திருக்கிறார். ரூ.1,000 கோடி இழப்புக்கு அழகிரி காரணம் என்று புகார்செய்த ராஜாங்க அமைச்சர் ஜெனா, அழகிரி விலகியபின் முழுப் பொறுப்புள்ள அமைச்சராக்கப்பட்டார்.
காலம் தாழ்த்திய முடிவு
ஓராண்டு முன்னர்தான் முதல்முறையாக, தனக்குப் பின் ஸ்டாலின்தான் என்ற நிலையைப் பகிரங்கமாக அறிவித்தார்; தானே ஸ்டாலினை முன்மொழிவேன் என்றார். இதை அவர் 1996-லேயே செய்திருந்தால் (அப்போது கருணாநிதிக்கு வயது 72. ஸ்டாலினுக்கு வயது 44.) தி.மு.க. பல சரிவுகளிலிருந்து தப்பித்திருக்கும்.
காலம் தாழ்த்தி அவர் எடுத்த முடிவு, பெருவாரியாகக் கட்சிக்குள் வரவேற்பையே பெற்ற முடிவு. எப்போதுமே கட்சி ஸ்டாலின் பக்கமே இருந்துவந்திருக்கிறது; அழகிரியுடன் அல்ல. தேர்தல் சமயத்தில் அழகிரி போர்க்கொடி தூக்குவது கட்சியைப் பாதிக்கலாம் என்ற பயம் கட்சியில் சிலருக்கு இருக்கிறது. அழகிரி, தொண்டர்களை அரவணைப்பவர் என்று சொல்லப்படுகிறது. இன்றைய அரசியலில் அரவணைப்பது என்றால் என்ன? தனக்கான ஒரு அடியாள் கூட்டத்தை வைத்துக்கொள்வதோ, தனக்கு வரும் லாபத்தில் எல்லாருக்கும் பங்குகொடுப்பதோ அரசியல் ஆகுமா? நிலப்பிரபுத்துவ, மாஃபியா இலக்கணங்களை எல்லாம் நாம் அரசியல் நெறிமுறைகள் ஆக்கிவிட்டோம். உண்மையில், அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் எந்தக் கொள்கைச் சண்டையும் இல்லை. அழகிரி அப்படி சித்தாந்தரீதியிலோ கொள்கைரீதியிலோ இதுவரை எந்தச் சண்டையும் போட்டதாக வரலாறும் இல்லை. காங்கிரஸுடன் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதோ, தே.மு.தி.க-வுடன் உறவு வேண்டுமா, கூடாதா என்பதோ இதில் அசல் பிரச்சினையே இல்லை. அ.இ.அ.தி.மு.க. தவிர, வேறு யாரோடும் எப்போதும் கூட்டணி வைக்கத் தேவையான நியாயங்களையும், கூடாது என்பதற்கான நியாயங்களையும் அவ்வப்போது எடுக்கும் முடிவுக்கேற்பச் சொல்வதில் பழுத்த அனுபவம் உடையவர் கருணாநிதி. தேவையென்று கருதினால், அவர் அ.இ.அ.தி.மு.க-வுடன்கூட கூட்டணி வைத்து அதை உடன்பிறப்புகள் ஒப்புக்கொள்ளும் விதத்தில் நியாயப்படுத்தக்கூடியவர்தான்.
அழகிரியின் பிரச்சினை அவருடைய தனிப்பட்ட பிரச்சினை மட்டுமே. அதில் அரசியல், சித்தாந்தம் ஏதுமில்லை. இப்போது கருணாநிதி எடுத்துவரும் உறுதியான முடிவுகள் தொடருமானால் அழகிரி செய்யக்கூடியவை மூன்றுதான். ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து அரசியலில் நீடிக்கலாம். அதை ஏற்காமல் வெளியேறிக் கட்சியை உடைக்க முயற்சித்து, வேறு கட்சிகளில் இணையலாம். அரசியலிலிருந்தே ஓய்வுபெற்றுத் தனக்குப் பிடித்தமான வேறு துறை சார்ந்த பணிகளில் ஈடுபடலாம். முதல், கடைசி வழிகள் மட்டுமே அவருக்குப் பயன் தரக்கூடியவை!
ஞாநி, மூத்த பத்திரிகையாளர்,சமூக-அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: gnanisankaran@gmail.com